`இந்தி தினம்' கொண்டாட்டங்களின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `இந்தியா முழுவதும் ஒரே மொழி இருப்பது அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது பெரும்பான்மையினரால் பேசப்படும் இந்தி மொழியாகத்தான் இருக்க முடியும்' என்று கூறியது சர்ச்சையை எழுப்பியது.
நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனக் குரல்களை, தங்கள் மாநில மொழிகளுக்காக எழுப்பினர். மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராய் விஜயன் உள்ளிட்டோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், AIMIM கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, ட்விட்டரில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
``இந்தி அனைத்து இந்தியர்களுக்கும் தாய்மொழி அல்ல. இந்தியாவில் அழகும், செழுமையும் மிகுந்த பல்வேறு தாய்மொழிகளையும் நீங்கள் பாராட்டலாமே. ஒவ்வொரு மொழி, எழுத்து வடிவம், பண்பாடு ஆகியவற்றைக் கொண்டாட ஒவ்வொரு இந்தியனுக்கும் சட்டப்பிரிவு 29 உரிமையளிக்கிறது. இந்தியா என்பது இந்தி, இந்து, இந்துத்துவம் ஆகியவற்றை விடப் பெரியது."- அசாதுதீன் ஒவைசி
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதற்குப் பதிலளித்தார், விவேக் அக்னிஹோத்ரி. `திரு ஒவைசி அவர்களே, இந்துஸ்தான் என்பதில் `இந்து' என்ற சொல் இருக்கிறது என்பதற்காக அதைப் பயன்படுத்தாமல் இருக்கப்போகிறீர்களா. ஏனெனில், உங்களுக்குத்தான் `இந்து' என்பதைவிட, `இந்தியா' பெரிதாகத் தெரிகிறதே! அடுத்த முறை மேடையில் பேசும்போது, `இந்துஸ்தான்' என்று சொல்லாதீர்கள்." என்றார்.
தொடர்ந்த இந்த உரையாடலில், உருது மொழியில் பதிலளித்த ஒவைசி, `நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டதாக நினைக்கிறேன். இந்து, இந்துத்துவம் இரண்டும் ஒன்றல்ல. நீங்கள் அரசியலைப்பு சட்டத்தைப் படித்ததில்லை என நினைக்கிறேன். அதில் முதலாம் சட்டப்பிரிவு சொல்வதை, ஆர்.எஸ்.எஸ் வகுப்பில் சொல்லித் தரமாட்டார்கள். அது, இந்தத் தேசம் ஒரு மொழியைவிடவோ, ஒரு மதத்தைவிடவோ பெரியது' எனப் பதிவிட்டார்.
உருது மொழியில் ஒவைசி பேசியதற்குப் பதிலளித்த விவேக் அக்னிஹோத்ரி, தான் பதிலளிக்க தமிழ் மொழியைப் பயன்படுத்தினார். `நீங்கள் அரபியா? இல்லையென்றால், உங்கள் மூதாதையர்கள் இந்துக்களாக இருந்தார்கள், நீங்களும் இந்து நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள், பிறகு ஏன் இந்துபோஃபியா?' என்று பதிலளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ட்விட்டரில் தொடர்ந்து களமாடும் பிரபலங்களுள் ஒருவர், விவேக் அக்னிஹோத்ரி. வெளிப்படையாகத் தன்னை மோடி ஆதரவாளர் எனவும், வலதுசாரி சிந்தனையாளர் எனவும் அறிவித்துக்கொண்டவர். இவர் பாலிவுட்டில் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
2005-ஆம் ஆண்டு பாலிவுட்டில் `சாக்லேட்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதுவரை ஆறு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். இவரது `Buddha in a traffic jam' படத்திற்காக, இவர் சந்தித்த இடதுசாரி சிந்தனையாளர்களை அடிப்படையாக வைத்து `urban naxals' என்ற புத்தகத்தை எழுதினார்.

இந்தியாவில் கல்வி, ஊடகம் ஆகிய புலங்களில் நக்சல்களுக்கு ஆதரவான சிந்தனையாளர்கள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் `அர்பன் நக்சல்கள்' என்றழைக்கப்பட வேண்டும் எனவும் இவர் தெரிவித்த கருத்து பிரபலமானது.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் மதச்சாயம் பூசுகிறார், தொடர்ந்து பொய்யான தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார் என விவேக் அக்னிஹோத்ரி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. பாலிவுட்டில் `Me too' இயக்கம் கடந்த ஆண்டு வலுப்பெற்று வந்தபோது விவேக், நடிகை ஸ்வரா பாஸ்கரை இழிவுபடுத்தி எழுதியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

`வன்புணர்வு நிகழ்வுகளிலிருந்து மீண்ட பெண்களையும், உங்களுக்குப் பிடிக்காத பெண்களையும் ஒழுக்கமற்றவர்களாகப் பொதுவெளியில் சித்திரிப்பதை நிறுத்துங்கள்' எனப் பதிவிட்டதோடு, ட்விட்டர் நிறுவனத்திடம் முறையிட்டார், ஸ்வரா பாஸ்கர். அதன் விளைவாக, விவேக் அக்னிஹோத்ரியின் அந்த சர்ச்சைக்குரிய ட்வீட், ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டது.
`Me too' இயக்கத்தின்போது, நடிகர் நானா படேகர் மீது குற்றம் சாட்டிய நடிகை தனுஸ்ரீ தத்தா, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக முறையிட்டார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், சமீபத்தில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் `தி டாஷ்கென்ட் ஃபைல்ஸ்' (The Tashkent files) என்ற திரைப்படம் வெளியானது. இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, உஸ்பெகிஸ்தானில் மரணம் அடைந்ததன் பின்னணியில் இருக்கும் சர்ச்சைகளைப் பற்றிய படம் இது.

லால் பகதூர் சாஸ்திரி மறைவில் அவருக்கு அடுத்து பிரதமராகப் பதவியேற்ற இந்திரா காந்திக்கும், ரஷ்ய உளவுத்துறை அமைப்பான கே.ஜி.பி-க்கும் தொடர்பு இருந்ததாக நிறுவுகிறது, இந்தத் திரைப்படம். பல்வேறு வரலாற்றுப் பிழைகள் இருப்பதாக விமர்சனங்கள் வெளியானபோதும், குறைந்த பட்ஜெட் செலவில் அதிக லாபம் ஈட்டிய பாலிவுட் படங்களின் வரிசையில் `தி டாஷ்கென்ட் ஃபைல்ஸ்' இடம்பெறுகிறது.
தொடர்ந்து ட்விட்டரிலும், தனது படைப்புகளிலும் சர்ச்சைகளில் சிக்கி வரும் விவேக் அக்னிஹோத்ரி, அடுத்ததாக காஷ்மீர் பண்டிட்களைப் பற்றி, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' (The Kashmir files) என்ற படத்தை அறிவித்துள்ளார்.