Election bannerElection banner
Published:Updated:

`ஏன் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தார், ஏன் வாபஸ் வாங்குனார்னு தெரியல' கருணாஸைச் சுற்றும் விமர்சனம்

கருணாஸ்
கருணாஸ் ( தே.அசோக்குமார் )

அ.தி.மு.க கூட்டணியில்தானே நீங்களும் இருந்தீர்கள்... உங்கள் சமுதாய மக்களுக்காக என்ன செய்தீர்கள்? உங்களது அரசியல் வியாபாரத்தை இன்றோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இடம்பெற்றிருந்தது. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ ஆனார். ஐந்து வருடங்கள் எம்.எல்.ஏ-வாக இருந்த கருணாஸ் சமீபத்தில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அத்துடன் தி.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

 கருணாஸ்
கருணாஸ்

இந்தநிலையில்,நேற்று அவசர அவசரமாக தி.மு.க-வுக்கு ஆதரவு மற்றும் தொகுதிகள் கேட்டுத் தந்த கடிதத்தைத் திரும்பப் பெறுவதாக கருணாஸ் தெரிவித்திருக்கிறார். இவரது செயலை கண்டித்து கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் முக்குலத்து புலிகள் கட்சித் தலைவர் ஆறு.சரவணன்.

`ஏன்... எதற்காக இந்த எதிர்ப்பு?’ என்று அவரிடம் பேசினோம். ``முக்குலத்துச் சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்கும் வரையிலும் எந்தக் கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடாது என்கிற தீர்க்கமான முடிவில் நாங்கள் இருக்கிறோம். இந்தநிலையில், கருணாஸ் எதற்காக அ.தி.மு.க-விலிருந்து வெளியே வந்தார்... எதற்காக தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்து, பிறகு ஏன் அவசர அவசரமாக வாபஸ் பெற்றார் என்ற விவரம் இன்று வரையிலும் புரியவில்லை. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பல நாள்களாகப் போராடிவருகிறோம். அதோடு, ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் தேவரின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று அரசு கெஜட்டில் இருக்கிறது.

முக்குலத்து புலிகள் கட்சித் தலைவர் ஆறு.சரவணன்
முக்குலத்து புலிகள் கட்சித் தலைவர் ஆறு.சரவணன்

ஆனால், இதுவரையிலும் எந்த அலுவலகத்திலும் வைக்கவில்லை. இது குறித்துப் பல போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம். பிற்படுத்தப்பட்ட மக்களைத் துன்புறுத்தும் பி.சி.ஆர் வழக்கால் எம்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது போன்று பல பிரச்னைகள் இருக்கின்றன.

இதற்கெல்லாம் குரல் கொடுக்காத நீங்கள், ஐந்து வருடங்கள் எம்.எல்.ஏ-வாக வலம் வந்து முடிந்த பிறகு எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கலாம்... யார் சீட் கொடுப்பார்கள் என்று ஒவ்வொரு கட்சி அலுவலகத்தின் வாசலிலும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறீர்கள். இது அசிங்கமாக இல்லையா... வன்னியர்கள் சத்தமே இல்லாமல் காய்நகர்த்தி அவர்கள் சமுதாய மக்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். அதே கூட்டணியில்தானே நீங்களும் இருந்தீர்கள்... உங்கள் சமுதாய மக்களுக்காக என்ன செய்தீர்கள்? உங்களது அரசியல் வியாபாரத்தை இன்றோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து அரசியல் சுயலாபத்துக்காக முக்குலத்தோர் மக்களை அடமானம் வைக்காதீர்கள்” என்றார் காட்டமாக.

கருணாஸ்
கருணாஸ்

இது குறித்து எம்.எல்,ஏ கருணாஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.``எங்களது தலைவரும் முக்குலத்தோர் சமுதாயத்துக்காக அதிகமாகக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.அ.தி.மு.க-வில் சரியான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காகத்தான் வெளியே வந்தோம். எங்களது கோரிக்கையை தி.மு.க ஆதரிப்பதாகச் சொன்னார்கள். அதன்பேரில் அவர்களுக்குத் தலைவர் ஆதரவு கொடுத்தார். ஆனால், ஒரு சில பிரச்னைகளால் வெளிவந்துவிட்டார் அவ்வளவுதான். அவர்கள் யூகதுக்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு