Published:Updated:

`கேபிள் ஒளிபரப்பில் ஜீ தமிழ் துண்டிக்கப்பட்டது ஏன்?'- காரணம் சொல்லும் சேனல் நிர்வாகம்

செம்பருத்தி
செம்பருத்தி

'எங்கள் குழும சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தி சட்டவிரோதமாகச் செயல்படுகின்றன சில கேபிள் நிறுவனங்கள். வேதனை என்னவென்றால் அரசு கேபிள் நிறுவனமும் இதைச் செய்கிறது' எனப் புகார் கூறியுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

'என்ன பிரச்னை' என முதலில் ஜீ தமிழ் தரப்பில் பேசினேன். ''ஜீ தமிழ்ல ஒளிபரப்பாகிற 'செம்பருத்தி' முதலான சில சீரியல்களுக்குக் கிராமப்புறங்கள்ல வரவேற்பு அதிகம். ஆனா அங்க இருந்து எங்களுக்குத் தொடர்ந்து புகார் வந்துட்டே இருக்கு.

ஜீ தமிழ்
ஜீ தமிழ்

மக்கள் எங்க சேனலுக்கான பணத்தைக் கட்டியும் அவங்களுக்கு எங்க சேனல்கள் கிடைக்க விடாதபடி அரசு கேபிள் உட்பட சில நிறுவனங்கள் எங்க சேனல்களின் ஒளிபரப்பை கட் பண்ணி வெச்சிருக்காங்க. ட்ராய் விதிப்படி, மிகவும் குறைவான கட்டணமே பார்வையாளர்கள்கிட்ட இருந்து வசூலிக்குது ஜீ குழுமம்.

இந்த நிலையில் சேனல் தரப்புல இருந்து, நிகழ்ச்சிகளை வாங்கி ஒளிபரப்புகிற எம்.எஸ்.ஓக்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக கொஞ்ச நாள்களாகவே பிரச்னை போயிட்டிருந்தது. முப்பது சதவிகிதம்கிற நியாயமான ஒரு கட்டணத்தை சேனல் குழுமம் வழங்கி வந்தது. அதைக் கூடுதலாக் கேட்கிறாங்க மேற்படி கேபிள் நிறுவனங்கள். 'ஜீ'யின் கட்டணமும் ரொம்பவே குறைவு.

இப்படி இருக்கறப்ப, கேபிள் நிறுவனங்கள் இன்னும் கட்டணத்தைக் கூட்டினா, சேனலுக்கு நஷ்டம்தான் மிஞ்சும். இதைப் புரிஞ்சுக்கிட மாட்டேங்கிறாங்க'' என்றவர்கள், தங்கள் சேனல்களை இருட்டடிப்பு செய்கிற கேபிள் நிறுவனங்களின் வரிசையில் அரசு கேபிளுடன், சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் வி.கே.டிஜிட்டல் நிறுவனங்களையும் சேர்த்தே கை காட்டுகிறார்கள்.

ஜீ தமிழ் நிர்வாகத்தினர்
ஜீ தமிழ் நிர்வாகத்தினர்
Saravanakumar.P

சுமங்கலி கேபிள் விஷன் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என மறுத்து விட்டார்கள். அரசு கேபிள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டேன். முதலில் பொது மேலாளருக்கு இணைப்பு கொடுப்பதாக நம்மைக் காத்திருக்கச் சொன்னவர்கள், பிறகு அவர் அலுவலகத்தில் இல்லை என்கிற தகவலையே தந்தார்கள்.

பின் செல்ல