'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான முரளிதரன் மாரடைப்பினால் உயிர் துறந்த செய்தி வந்திருக்கிறது.
சினிமாவையும், அவரது தயாரிப்பு நுணுக்கங்களையும், அவரது பண்புகளையும் அறிந்தவர்களை துணுக்குறவும், மனம் வருந்தவும் செய்தது. தயாரிப்பாளர் சங்கத்தை ஆழமாக வேரூன்றச் செய்ததில் அவரின் பங்கு முக்கியமானது. கமர்சியல் படங்களை தயாரித்ததோடு, அன்பே சிவம், புதுப்பேட்டை போன்ற நுணுக்கமான திசை திருப்பிய படங்களையும் தயாரித்தவர். அவரைப் பற்றி நம்மிடம் அவரின் நெருங்கிய நண்பன் டி.சிவா நினைவு கூர்ந்தார்.

``ஒரு காலத்தில் 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' கொடிகட்டிப் பறந்தது. அனைத்து ஹீரோக்களும் நிறுவனத்தோடு சம்பந்தப்பட்டிருந்தார்கள். படங்கள் தயாரித்ததோடு நிறைய படங்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார். நிறைய விட்டுக் கொடுத்து பெருந்தன்மையாக நடந்து டார்ச்சர் செய்யாமல் இருந்திருக்கிறார். ரொம்பவும் உதவி செய்கிற இயல்புடையவர். கஷ்டப்படுவது தெரிந்தாலும், படத்தயாரிப்பில் கடைசி நேரத்தில் உதவுவது அவராகத்தான் இருக்கும்.
நிறைய தான தர்மங்கள் செய்வார். உதவி என்று அவரைப் பார்த்து விட்டால் வெறும் கையோடு அனுப்பமாட்டார். எந்த கெட்ட பழக்கமும் துளி அளவு கூட இல்லை. முன்பே அட்டாக் வந்து, பைபாஸ் சர்ஜரி செய்து, இப்போது மிகவும் நல்லபடியாக உடலை கவனித்து வந்தார். கோயில் தரிசனத்திற்காக கும்பகோணம் சென்ற இடத்தில் இப்படி நேர்ந்து விட்டது. பக்திமான். சங்கத்திற்கு சக்தியை மீறி உழைத்திருக்கிறார். சோசியல் சர்வீஸ் மனசு உடையவர். அவருக்கு எதிரிகள் இல்லை. பிறரை குறை சொல்வது, புறம் பேசுவது அறவே இல்லை. முரளி சாரா, நல்ல மனுஷன் என்பதற்கு மேல் அவரைப் பற்றி மேலே கேட்டதில்லை.

யாரையும் காயப்படுத்தமாட்டார். சூழ்நிலையை நன்றாக வைத்துக் கொள்வார் நல்ல ரசனை உண்டு. அதனால் அன்பே சிவம், புதுப்பேட்டை மாதிரியான படங்களை தயாரித்தார். கடைசியாக சில படங்கள் தோல்வியடையவே, படத் தயாரிப்பை நிறுத்திக் கொண்டார். மறுபடியும் இப்போதுதான் ஜெயம் ரவியை வைத்தும், யோகி பாபுவை வைத்தும் படம் எடுத்து விட வேண்டும் என்று முயற்சியில் இருந்தார். எதுக்கு சார், எதுக்கு மறுபடி தயாரிப்பு, வேலை அதிகமாகுமே, டென்ஷன் வந்துவிடுமே என்றேன். அது எப்படி சிவா 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்தை மறுபடியும் நிறுத்தணும் என்பார். நாலைந்து நாளுக்கு முன்பு கூட பேசினார்.
30 படங்களுக்கு மேல் எடுத்தார். துரிதகால தயாரிப்புகளாக இருந்தது. மறுபடியும் சினிமாவில் முன்னணி இடம் பெற வேண்டும் என நினைத்தார். இறைவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை போல. அவரைப்போல் உதவியவரும், அன்பானவரும் ஆக இன்னொருவரை காண்பது அரிது என வருத்தம் தோய பேசினார் சிவா.