Published:Updated:

`டாப் 10 கொரியன் த்ரில்... திக் திக்... படங்கள்!' - வாசகர் பகிர்வு #MyVikatan

 A Tale of Two Sisters
A Tale of Two Sisters

கொரியன் தங்கச் சுரங்கங்களில் எனக்கு இன்னும் வைரங்கள் கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. எனவே, இதுவரைக்குமான டாப் 10 பட்டியல்.

எனக்குப் பிடித்த டாப் 10 கொரியன் ஆக்‌ஷன் படங்களைப் பற்றி இங்கே பதிவிட்டிருக்கிறேன். தேடித்தேடி நான் பார்த்த ஏராளமான நல்ல திரைப்படங்களில் சிறந்த பத்தை ஒரு பிளேட்டில் வைத்துத் தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் முயற்சி இது.

கொரியன் தங்கச் சுரங்கங்களில் எனக்கு இன்னும் வைரங்கள் கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. எனவே, இதுவரைக்குமான டாப் 10 பட்டியலில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். உதாரணமாக, இதில் ஏகப்பட்ட படங்களை தமிழ்கூறும் நல்லுலகம் காப்பி அடித்துவிட்டதால், நீங்கள் பார்க்கும்போது, 'அட இதுதானா... இதைத்தான் நான் தமிழ்ல பார்த்துட்டேனே... இது பெஸ்ட் படமா?' என உங்களுக்குத் தோன்றலாம். அதனால், அவற்றையும் தவிர்க்க முயற்சி செய்துள்ளேன். நடிகர், இயக்குநர் பெயர்கள் நமக்கு அநாவசியம். ராமசாமி, கோவாலு எனப் பெயர்கள் இருந்தால் எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், எல்லா பெயரும் ஜில் ஜங் ஜக் பாணியில் இருக்கும்.

சுருக்கமாக சஸ்பென்ஸை வெளிப்படுத்தாமல் படங்களின் கதைகளைச் சொல்லியிருக்கிறேன். இனி, படங்களின் பட்டியல்!

Still from Chaser movie
Still from Chaser movie

10. The Chaser - 2008, I Saw the Devil -2010, Memoirs of a Murderer - 2017, No Mercy -2010 - Statutory Warning - படம் பார்த்து முடியும்போது சட்டையின் மேல் தெளித்திருக்கும் ரத்தத்தை துடைத்துக்கொள்ளுங்கள். தமிழின் ராட்சசன் போன்ற படத்துக்கு இவை கொள்ளு தாத்தா. பெண்கள், இளகிய மனம் படைத்தவர்கள். இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம். மனம் ரணமாகிப்போகும்.

(9) The Divine Move - 2014 - சகோதரனைக் கொன்றுவிட்டு வில்லன் பழியை ஹீரோ மேல் போட்டுவிடுவான். சகோதரன் ஜெயிலில் முழுமையான ரௌடியாக மாறி பழிவாங்குகிறான். மற்றொரு ரௌத்திர படைப்பு. கதை பழசு. ஆனால், எடுத்த விதம் நீங்கள் இதுவரை பார்த்தே இருக்க முடியாது. யாரையாவது தமிழ் ஹீரோவை போட்டு இந்தக் கதையைக் எடுக்கும்முன் பார்த்துவிடுங்கள்.

(8) The Suspect - 2013- வட கொரியாவின் உளவாளி தென் கொரியாவில் தஞ்சமடைகிறான். அவன் மேல் கொலைப்பழி விழுகிறது. அதிலிருந்து மீண்டுவந்து, போட்டுக்கொடுத்த சக உளவாளியைப் பழிதீர்க்கிறான். ஸ்டைலிஷ் படம்.

The Suspect
The Suspect

(7) A Tale of Two Sisters 2003 & Forgotten (2017) - இதை ஏன் ஒரே இடத்தில் வைக்கிறேன் எனப் படம் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்.

(6) No Tears for the Dead - ஒரு சூப்பர் ஹிட்மேன் தனது தவறுக்காக தொழிலைவிட நினைக்கிறான். ஆனால், அவனது பாஸ் தமிழ்ப் பட பாஸ் போல சீப்பாக நடந்துகொண்டு அவனைப் போட ஆட்களை அனுப்ப, ஆடு புலி ஆட்டம் ஆரம்பமாகிறது. கதையை காப்பி பண்ணியவர்கள் படமாக்கிய விதத்தை Xerox எடுக்க முடியவில்லை.

(5) Confidential Assignment - 2017. வட கொரியாவின் பணத்தை பிரின்ட் செய்யும் அச்சுகளை ஒரு கிரிமினல் தென் கொரியாவுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறான். அதை வட கொரியாவின் உளவாளி தென் கொரியாவுக்குச் சென்று அவர்களின் உளவாளியுடன் சேர்ந்து அவர்களுக்குத் தெரியாமல் அந்த அச்சுகளை மீட்பதுதான் கதை.

(4) Train to Busan - சோம்பி (zombie) என்றாலே மெதுவா கைய மடக்கிக்கொண்டு, காலை இழுத்துக்கொண்டு, மண்டையை திருப்பிக்கொண்டு நடந்துவரும் என்று நம்மை ஹாலிவுட்காரர்கள் பழக்கிவைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் எல்லா சோம்பியும் உசைன் போல்ட்டு போன்று துரத்தும். பெரிய TV-யில் பார்ப்பதாக இருந்தால் எதற்கும் ஷூ போட்டுக்கொண்டே பாருங்கள். ஓட சௌகரியமாக இருக்கும்.

Train to Busan
Train to Busan

(3) Cold Eyes - நல்ல போலீஸ் ஜீனியஸுக்கும், பாங்கில் கொள்ளைகளை அரங்கேற்றும் கெட்ட ஜீனியஸ் வில்லனுக்கும் நடக்கும் போர். செஸ் ஆட்டம் போல. கிளைமாக்ஸில் நீங்கள் பதறவில்லையெனில், "எனக்கு ஏதோ பிரச்னை இருக்கு போல டாக்டர்னு" சொல்லிட்டு தாராளமாக ஒரு டாக்டரைப் பார்க்கலாம்.

(2) War of the Arrows - 2011. ஜிங் என்ற மன்னனின் தளபதி ஒரு கிராமத்தைத் தாக்கி, அழித்து ஹீரோவின் தங்கையைத் திருமண நாளன்று அடிமையாகக்கொண்டு செல்கிறான். வேட்டைக்குச் சென்றிருந்த ஹீரோ அந்தப் படையைத் தொடர்ந்து சென்று ஒவ்வொருவராகக் கொல்லுகிறான். அட்டகாசமான படம்.

(1) The Man from Nowhere - 2010 - முதல் இடத்திலிருந்து இந்தப் படத்தை இரண்டாவது இடத்திற்கு இறக்கினால்கூட தென் கொரியா என் வீட்டின்மீது போர் தொடுக்கக்கூடும். கதை : ஒரு தென் கொரியன் கமாண்டோ, அவரின் மனைவியும் குழந்தையும் கொல்லப்பட்டதால் வெறுத்துப்போய், ஒரு நகரத்தில் அடையாளம் தெரியாமல் வாழ்கிறான். அவனின் ஒரே நண்பி, பக்கத்து வீட்டுப்பெண்தான். அவரை, குழந்தைகளைக் கடத்திக் கொன்று உறுப்புகளை விற்கும் கொடூர கும்பல் கடத்திப் போக, ஹீரோ மறுபடியும் ஆட்டத்தை ஆடவேண்டியதாகிறது.

Cold eyes
Cold eyes

இந்தப் படத்தை காப்பி, டீ எல்லாம் போட்டு ஆத்து ஆத்தென ஆத்திவிட்டார்கள். எனவே, இந்தப் படத்தை வேண்டாமென ஒதுக்கும், தலைக்கு மேல் வேலை இருப்பவர்கள் க்ளைமாக்ஸ் சண்டையை மட்டும் யூடியூபில் பாருங்கள். தலை போனாலும் பரவாயில்லை என படத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து பார்ப்பீர்கள். ஒரிஜினல் ஒரிஜினலே... நான் கணக்கில் கொஞ்சம் வீக் என்பதால், பத்து என்ற எண்ணிக்கை சற்று மாறி இருக்கலாம். பொறுத்துக் கொள்வீர்களாக. டாப் 10 படங்களுக்கு போட்டியிட்டு மயிரிழையில் உயிரைவிட்ட படங்கள் சில. A bittersweet life-2005, the Merciless -2017, The Extraordinary Mission-2017, Going by the book -2007, The Admiral Roaring -Current 2014 , Perfect Number -2012, இந்த லிஸ்ட்டிற்கு முடிவே இல்லை!

-கே. அஷோக் குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு