"சினிமாக்களில் நெருக்கமான காட்சிகளைக் காட்சிப்படுத்த முன்பெல்லாம் இரண்டு பறவைகள், பூக்கள் சந்திப்பதைப்போன்று காட்சிப்படுத்தப்படும். தற்போது, அந்தரங்க காட்சிகள் வெளிப்படையாக காண்பிக்கப்படுகிறது. இதனை வரைமுறைப்படுத்த சட்டம் அவசியம்" என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்னா காண்டாவின் கருத்து சமூக வலைதளங்களில் பரவி, பேசுபொருள் ஆகியிருக்கிறது.
நீதிபதி ஸ்வர்னாவின் கருத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் பேசினேன்,
"இந்தியாவில் சென்சார் போர்டு வந்த பிறகு திரைப்படங்களுக்கென்று சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுவந்தார்கள். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294-ன்படி ஆபாசக் காட்சிகள் தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. அதனால், படங்களில் ஆபாசக் காட்சிகளைக் காட்ட குறியீடு தேவைப்பட்டது. காதல் காட்சி என்றால் திரைமறைக் காயாக பூக்களையும் முத்தக் காட்சிகளுக்கு வானத்தையும் காட்டினார்கள். பின்பு, ஹாலிவுட் படங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றபோது, நம் படங்களில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுந்ததால், விதிகளைக் கொஞ்சம் தளத்தினார்கள். அதனைத்தொடர்ந்து, பாலிவுட் படங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றன.
ஆனால், பிராந்திய மொழிப்படங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதற்கும், கேள்வி எழுந்ததால்தான், யு, யு/ஏ, அடல்ட் என்று மூன்று விதமான சான்றிதழ்களை கொண்டு வந்தார்கள். இதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் அடல்ட் சான்றிதழ் பெற்றப் படங்களுக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்பதால் யு/ஏ சான்றிதழ் வாங்கவேண்டும் என்று சில காட்சிகளை திரைமறைவுக் காயாகவும் காட்டினார்கள். ஆனால், அதெல்லாம் அந்தக் காலம். இன்றைய சூழல் அப்படியல்ல. ஊடகங்கள் பெருகிவிட்டன. சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
பெட்ரூமில் இருந்தபடியே சிறுவர்கள்கூட எதையும் பார்க்கலாம் என்ற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. எல்லோரிடமும் ஆன்ட்ராய்டு போன் இருக்கிறது. உலகமே கைகளில் சுருங்கிவிட்டது. அதனால், இந்த நீதிபதி ஸ்வர்னா காண்டா சொல்வதெல்லாம் பழங்காலத்துக் கதை. அவர் செயல்படுத்தச் சொல்லும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியாது.
இன்றைய இளைஞர்களிடம் பழைய படங்களைக் காட்டினால் திரும்பி வேறு வழியில் சென்றுவிடுவார்கள். ஆழ்ந்த அர்த்தம் கொண்ட சினிமா பாடல்கள், காட்சிகள் யாருக்கும் புரியப்போவதில்லை. அதற்கு, நேரடியாகவே சொல்லிவிட்டுப் போகலாம்.
மும்பை பார்களில் பெண்கள் சர்வீஸ் செய்யலாம் என்ற நடைமுறை வந்தபோது, மராட்டிய அரசு தடை செய்தது. அதேபோல, பார்களில் பெண்கள் நடனமாடுவதற்கும் தடை விதித்தது. இப்படி, பெண்களின் உரிமைகள் நசுக்கப்பட்டபோது, சம உரிமை கொடுக்கவேண்டும் என்றுசொல்லி உச்சநீதிமன்றம்தான் இத்தடைகளை உடைத்தது. காலம் மாறிவிட்டது. இன்று தன்பாலின உண்ரவாளர்களையும் புரிந்துகொண்டு சமூகம் அரவணைக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், நீதிபதி ஸ்வர்னா உயர் நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டு இப்படி பேசுவதில் அர்த்தமே கிடையாது.
அனைத்தும் உலகமயமாகிவிட்டபோது, இதைமட்டும் எப்படி லோக்கலாக மாற்ற முடியும்? ஒவ்வொருவரின் கையிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது. வேண்டா வெறுப்பாக லிங்க்குகள் தானாகவே குவிகின்றன. அதையெல்லாம் யார் தடுக்கிறார்கள்? இந்த உலகம் போகின்ற போக்கை நீதிபதிகளால் எல்லாம் மாற்றமுடியாது" என்கிறார் அழுத்தமாக.