Published:Updated:

``ரஜினியைப் பார்த்தா இதை மட்டும் கண்டிப்பா சொல்லணும்!" - ரெயின்போ ஆர்.ஜே அருள்செல்வி

அருள்செல்வி
அருள்செல்வி

`ஆர்ஜே-ன்னாலே வேகமா பேசணும்னுலாம் கிடையாது. கேட்கிறவங்களுக்குப் புரியிற மாதிரி பேசினாலே போதும். காதல், மொக்கை போன்ற வார்த்தைகள்லாம் நாங்க பயன்படுத்த மாட்டோம்.’

மனதுக்கு இதமான மெல்லிய குரல்கள், அடிக்கடி இளையராஜா பாட்டு, கடுப்பேற்றும் விளம்பர இடைவேளைகள் அற்ற நிகழ்ச்சிகள் என  மில்லினியல் ஆகாஷ் வாணியாக நம்மை நிறைக்கிறது, எஃப்.எம் ரெயின்போ. என்னதான் ஸ்மார்ட் போன், சோஷியல் மீடியா, கேம்ஸ் என இன்றைய தலைமுறை இதில் மூழ்கிப்போயிருந்தாலும், இன்னும் நிறைய வீடுகளில் எஃப்.எம் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

Representational Image
Representational Image

கமர்ஷியல் எஃப்.எம்கள் குறித்த நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டிருப்போம். அதன் ஆர்ஜே-க்கள் யூடியூப் சேனல், வெப் சீரிஸ் என நடிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அரசு பண்பலையான ரெயின்போ எஃப்.எம் சத்தமின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகள் குறித்து ஆர்ஜே அருள்செல்வியைத் தொடர்புகொண்டு பேசினோம்...

ஆர்ஜே கனவு...

``எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆர்ஜே ஆகணும்னு ஆசை. எங்க வீட்டு நோக்கியா 1100 மொபைல்லகூட `அருள்செல்வி ஆர்ஜே'னுதான் வால்பேப்பர் வெச்சிருப்பேன். இவ்வளவு ஏன், சூரியன் எஃப்.எம் கண்மணி நிகழ்ச்சியை கேட்டுட்டுதான் ஸ்கூலுக்கே கிளம்புவேன். எனக்கு ஆர்ஜே ஆசை வர முக்கியக் காரணமும் அவங்கதான். அடுத்தது, காலேஜ் படிக்கிற டைம்ல ரேடியோ சிட்டி நிகழ்ச்சியில கேட்கிற கேள்விக்கு பதில் அனுப்பி, நேர்ல போய் நிறைய பரிசு வாங்கியிருக்கேன். `நீயா நானா' கோபிநாத் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன். அதைப் பார்த்துட்டு, எப்படியாவது இந்த மாதிரி வேலைக்கு வரணும்னு ஆசை வந்துடுச்சு. காலேஜ் முடிச்சதும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் போனேன்."

அருள்செல்வி
அருள்செல்வி

``நியூஸ்பேப்பர்ல நியூஸ் ரீடருக்கான விளம்பரம் பார்த்துட்டு, கண்மூடித்தனமான நம்பிக்கையில பார்த்த வேலையை விட்டுட்டு, நியூஸ் ரீடருக்காக ஒரு கோர்ஸ் சேர்ந்தேன். 2011-ல் செய்தி வாசிப்பாளரா பொதிகையில சேர்ந்தேன். ஆனாலும் எனக்கு ஆர்ஜே ஆசை போகலை."

``நடுவுல ஆல் இந்தியா ரேடியோவுக்காக எக்ஸாம் எழுதி இன்டர்வியூ போனேன். பொது அறிவுக் கேள்விகள் கேட்டாங்க; பதில் சொன்னேன். ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன், அப்புறம் செலெக்ட்டும் ஆனேன். அப்படி 2014ல் இருந்து என் மனசுக்குப் பிடிச்ச ஆர்ஜே வேலையை ரசிச்சுப் பார்த்துட்டிருக்கேன். "

அருள்செல்வி
அருள்செல்வி

நேயர் விருப்பம்

`` 'Listener Choice'னு ஒரு நிகழ்ச்சி பண்றேன். தினமும் மக்களோட உரையாடுறேன். ரெயின்போ எஃப்.எம்மைப் பொறுத்தவரை சமீப காலமா நாங்க, போன் மூலமா நேயர் விருப்பம் நிகழ்ச்சி பண்றது இல்லை. எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலமா நேயர்கள் அவர்களுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்பாங்க. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நிறைய எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் கமென்ட்ஸ் வரும். ஒரு மணி நேரத்துக்கு 10 பாட்டுதான் போட முடியும். பெரும்பாலும் எஸ்.எம்.எஸ் அனுப்புறவங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம்."

`` 'பாட்டொன்று கேட்டேன்', 'பொன்மாலை நேரம்'னு ரெண்டு நிகழ்ச்சிகள் இப்போ பண்ணிட்டிருக்கேன். அப்புறம், 'ஆனந்தம் ஆரம்பம்' நிகழ்ச்சி மூலமா ஒரு தலைப்பைத் தேர்வுபண்ணி நேயர்களோடு உரையாடுவேன்."

அருள்செல்வி
அருள்செல்வி

நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட்

``ஆல் இந்திய ரேடியோவுக்குனு ஒரு ரூல்ஸ் இருக்கு. எங்களுடைய நிகழ்ச்சியில அண்டை நாடுகளை விமர்சிக்க மாட்டோம். யார் மனசையும் புண்படுத்துற கருத்துகளைச் சொல்ல மாட்டோம். தனி நபர் தாக்குதல், கட்சி, மதம் சார்ந்த எந்த விஷயங்களையும் பேசக்கூடாது. தனி மனித ஒழுக்கம் இருக்கணும்னு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு."

``டபுள் மீனிங், கொச்சையான வார்த்தைகள் இருக்கிற பாடல்களை ஒலிபரப்ப மாட்டோம். எங்களுடைய சுப்பீரியஸ் தேர்வுசெய்து வெச்சிருக்கிற பாடல்களை மட்டும்தான் ஒலிபரப்புவோம். பாடல்களை செலெக்ட் பண்ண ஒரு தனி டீம் இருக்கு. அவங்க, ஒவ்வொரு பாடலையும் முழுசா கேட்பாங்க. இப்போ வரும் பாடல்கள்ல நிறைய இரட்டை அர்த்தம் இருக்கும். அதனால, ரெயின்போ எஃப்.எம்ல பெரும்பாலும் புதிய பாடல்களை ஒலிபரப்ப மாட்டோம். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை எல்லோரும் எஃப்.எம் கேட்குறாங்க. அதனால, அவங்க கேட்கும்போது முகம் சுளிக்கக்கூடாது."

அருள்செல்வி
அருள்செல்வி

தேர்தல் வந்தா கட்டுப்பாடுகளும் வந்துடும்

``தேர்தல் சமயத்தில் மட்டும் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு. கட்சி சார்ந்த ஒரு வார்த்தைகூட பாடல்கள்ல இருக்கக்கூடாது. உதாரணமா, `தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்' பாடலைப் போடமாட்டோம். அதே மாதிரி, சூரியனை, இலைகளைப் பற்றிய எந்தப் பாடலையும் போடமாட்டோம். பிரச்னை வராத அளவுக்கு பொறுப்போடு வேலை செய்வோம். தரம்தான் எங்களுக்கு முக்கியம்."

ரஜினி ரசிகை

``பிரபலங்களை பேட்டி எடுக்கும்போது, அவங்க தனிப்பட்ட விஷயங்கள் பத்தி கேள்விகள் கேட்க மாட்டோம். அவங்களுடைய துறை சார்ந்து மட்டும்தான் உரையாடுவோம். நான் இன்டர்வியூ பண்ணதுல எனக்குப் பிடிச்ச ஒருத்தர், கே.வி.ஆனந்த் சார். அவர், ரொம்ப அன்பா பேசுவார். எனக்கு ரஜினி சாரை பேட்டி எடுக்கணும்னு ரொம்ப ஆசை. ஒரு நிகழ்ச்சியில அவரை சந்திச்சுப் பேசினேன். அதுக்கப்புறம்தான் அவரை பேட்டி எடுக்கணும்னு ஆசை வந்துச்சு. அவரை சந்திச்சு, அவருக்கும் எனக்கும் ஒரே நாள், பிறந்தநாள்னு சொல்லணும்."

ரஜினியுடன் அருள் செல்வி எடுத்துக் கொண்ட புகைப்படம்
ரஜினியுடன் அருள் செல்வி எடுத்துக் கொண்ட புகைப்படம்

பொறுப்பு அதிகம்

``மற்ற எஃப்.எம் சேனல்களைவிட எங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கணும். வர்தா புயல் சமயத்துல எங்க எல்லாருக்குமே 24 மணி நேரம் டியூட்டி போட்டாங்க. உதவி கேட்டு நிறைய பேர் எஃப்.எம் சேனலுக்கு போன் பண்ணாங்க. சிலர், உறவினரைக் காணவில்லை, அவசரத்துக்கு கால் பண்ண ரீசார்ஜ் பண்ணுங்கன்னுலாம் கேட்டு போன் பண்ணாங்க. எல்லாருக்குமே உதவி பண்ணோம். என் வேலையோட அருமை அன்னைக்குத்தான் முழுமையா புரிஞ்சது."

மனசுக்கு நெருக்கமான நேயர்கள்

 ``சில வாடிக்கையான நேயர்களும் ரெயின்போ எஃப்.எம்முக்கு உண்டு. என்னுடைய சின்ன வயசுல இருந்து மயிலை பட்டாபினு ஒருத்தர் ரெயின்போ எஃப்.எம்முக்கு கால் பண்ணுவார். இங்க வேலைக்கு சேர்ந்த பிறகும் எனக்கு போன் பண்ணுவார். அண்ணா நகர்ல இருந்து மாலினி தேவினு ஒருத்தங்க கால் பண்ணுவாங்க. அவங்க சிரிக்கிறதை வெச்சே, `மாலினிதானே'னு கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவோம். பல நேயர்கள் இன்னும் கடிதங்கள் அனுப்புறாங்க."

Representational Image
Representational Image

வளவளன்னு பேசமாட்டோம்

``ஆர்ஜே-ன்னாலே வேகமா பேசணும்னுலாம் கிடையாது. கேட்கிறவங்களுக்குப் புரியிற மாதிரி பேசினாலே போதும். காதல், மொக்கை போன்ற வார்த்தைகள்லாம் நாங்க பயன்படுத்த மாட்டோம். எங்க எஃப்.எம்முக்கு கிராமத்து நேயர்கள் அதிகம். அவங்களுக்காக பிரசார் பாரதி,  NewsOnAir-னு புதிய செயலியை அறிமுகப்படுத்தியிருக்கோம். அந்த அப்ளிகேஷனை யூஸ் பண்ணி ஹெட்போன் இல்லாமகூட ரெயின்போ எஃப்.எம் கேட்கலாம்.''

``நீங்களும் தொடர்ந்து ரெயின்போ எஃப்.எம் கேளுங்க. உங்களிடமிருந்து விடைபெறுவது, ஆர்ஜே அருள் செல்வி'' என்று முடித்தார் ஸ்வீட் வாய்ஸில்.

அடுத்த கட்டுரைக்கு