`நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் கிச்சா சுதீப். கன்னடத்தில் முன்னணி நடிகரான இவர் தற்போது பேன் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதனிடையே கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் கிச்சா சுதீப் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் அவர், “ டி.கே.சிவகுமார், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர் டி.கே சுதாகர் மூவரையும் நான் சந்தித்தேன். அனைத்து அரசியல் தலைவர்களுடனும் எனக்கு தொடர்பு இருக்கிறது. அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்புகளும் வருகின்றன. ஆனால் அரசியலுக்கு வருவது குறித்து நான் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அதுபற்றி முடிவு எடுக்கும்போது கண்டிப்பாகத் தெரியப்படுத்துவேன். அரசியல் கட்சிகளை விட எனது ரசிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் இறங்காமலேயே சேவை செய்ய முடியும் என்கின்றபோது நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.