சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

சயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல!

2.0
பிரீமியம் ஸ்டோரி
News
2.0

சினிமா

``கடவுள் யாருன்னு யார் பார்த்தா... அதைக் கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்!" என்று சினிமாவிலேயே ஒரு பாடல் உண்டு. உண்மைதான். நாம் என்னதான் யதார்த்தமான கதைகளைக் கொண்டாடி, ஃபேஸ்புக்கில் ஹார்ட்டின்களைத் தெறிக்கவிட்டாலும், திரைப்படங்கள் என்றுமே இலக்கணப்படி `உயர்வு நவிற்சி அணி' என்ற சீட்டில்தான் தன் டர்க்கி டவலைப்போட்டு, இடம்பிடித்து உட்காரும்.

அவ்வப்போது சில படங்கள், வழக்கமான கதைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, புதிய கோணங்கள் அல்லது புதிய பேசுபொருள்களைத் தொடுவதுண்டு. ஒரே பிரச்னை என்னவென்றால், `மசாலா பத்தலை, காரம் பத்தலை, சுவாரஸ்யம் சேர்க்கிறேன்' என அதன் உண்மைத் தன்மையையே சிலர் மொத்தமாக காலி செய்துவிடுவார்கள்.

பெரும்பாலும், இந்த லிஸ்ட்டின் முதல் இடத்தில் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்பது என்னவோ `அறிவியல்'தான். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகியவற்றின் பல படங்கள் இதுவரை உடைத்த அறிவியல் ஃபர்னிச்சர்களெல்லாம் அனபாண்டு போட்டாலும் ஒட்ட முடியாத அளவுக்கு டேமேஜ் ஆனவை. அதிலும் இவ்வகைப் படங்களில் இடம்பெறும் வசனங்களிலிருந்து சில வார்த்தைகளை உருவி, தம்பி கூகுளிடம் கொடுத்தால் போதும். ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகம்கூட, தண்டவாளத்தில் தலையை வைத்துக்கொள்ளும்.

சயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல!

`2.0' படத்தில் `This is beyond Science!’ என்று ஆரம்பித்துவிட்டு, பிறகு, `இதெல்லாம் அறிவியலில் உண்டு’ என்று இல்லாத ஒரு ஃபோர்ஸுக்கு, `ஆரா தெரியாதா?' என விளக்கம் தந்தார்கள். `நெகட்டிவ் சார்ஜ்னா தப்பான குணங்கள் கொண்டவையா இருக்கும்; பாசிட்டிவ் சார்ஜ்னா நல்ல எனர்ஜி; அது நன்மை செய்யும்' என்று அது நீளூம். நெகட்டிவ் சார்ஜுடு விஷயங்களெல்லாம் கெட்டதைத்தான் செய்யுமா என்ன? ஓர் ஆற்றலின் சார்ஜுக்கும் அதன் குணாதிசயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இது வெறும் பேய்க் கதை. அறிவியல் அல்ல!

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட `டிக்: டிக்: டிக்' வேற லெவல். நிலாவில் இறங்கியவர்கள் மீண்டும் அங்கிருந்து சைனீஸ் ஸ்பேஸ் ஸ்டேஷன் நோக்கிச் செல்ல எத்தனிப்பார்கள். ஹார்டு லேண்டிங்கில் (Hard Landing) இறங்கிய அவர்களின் கலத்தை, ஜஸ்ட் லைக் தட் ஏதோ லாரியை மீண்டும் ஸ்டார்ட் செய்து நகர்த்துவதுபோல எடுத்துக்கொண்டு பறப்பார்கள். (சந்திரயான் டீம் கவனிக்க!) சரி, உண்மைக் கதை என பாலிவுட்டின் `மிஷன் மங்கல்' பக்கம் ஒதுங்கினால், அங்கே பூரி சுடுவதைவைத்து ராக்கெட் அறிவியலுக்கு இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு, `வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என ஹாலிவுட்டுக்கு டிக்கெட் எடுத்தால், அங்கேயும் இப்படிபட்ட கலவரங்கள்தான்.

சயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல!

சரி, அதற்காக சயின்ஸ் ஃபிக்‌ஷனே எடுக்கக் கூடாதா என்ன? `இப்படியெல்லாம் எதிர்காலத்தில் நிகழலாம்’ எனும் கதைகளே வரக் கூடாதா என்ன? தாராளமாக வரலாம். தாராளமாகக் கற்பனைக் குதிரையை ஓயாமல் ஓவர்டைம் பார்க்கவிட்டு, `எதிர்கால உலகம் இப்படி இருக்கும்’ எனச் சொல்லாம். உதாரணமாக, 1968-ம் ஆண்டு வெளியான, `2001: A Space Odyssey’ படத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு விண்வெளிப் பயணத்துக்கு உதவுவதாகக் காட்டப்பட்டிருக்கும். வியாழன் கிரகத்துக்கு மனிதர்கள் செல்வதுபோல் கதை இருக்கும். 1968-ம் ஆண்டில் இது சாத்தியமே இல்லாத புனைவுதான். ஆனால், இங்கே எங்கேயும் அறிவியலுக்குக் களங்கம் ஏற்பட்டுவிடவில்லை. நிரூபிக்கப்படாத மாயாஜாலக் கற்பனை விஷயங்களைக் கொண்டுவந்து, `இது அறிவியல்’ எனப் படத்தின் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கோ, படத்தின் கதையை எழுதிய ஆர்தர் சி.கிளார்க்கோ எங்கும் கூறவில்லை.

சொல்லப்போனால் ஆர்தர் எழுதிய கதையில், விண்வெளி வீரர்கள் சனிக்கிரகத்தை நோக்கித்தான் பயணப்படுவார்கள். ஆனால், அப்போதைய கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் Saturn என்ற சனிக்கிரகத்தை அத்தனை தத்ரூபமாகக் கொண்டுவர இயலவில்லை. காரணம், அதைச் சுற்றி எப்போதுமிருக்கும் அந்த வட்டம். ஸ்டான்லி குப்ரிக் நினைத்திருந்தால், ஏதோ ஒன்றைக் காட்டி ஒப்பேற்றியிருக்கலாம். ஆனால், தான் எடுத்துக்கொண்ட படைப்புக்கும் அறிவியலுக்கும் நியாயம் சேர்க்க, சனியை, வியாழன் என்று மாற்றிப் படத்தை எடுத்தார்.

இந்தப் படத்துக்கு சல்யூட் வைக்கும் வகையில் 2014-ம் ஆண்டு வெளியானது மற்றொரு மாஸ்டர்பீஸ் சயின்ஸ் படமான `இன்டர்ஸ்டெல்லார்.’ பூமியை விட்டு வேறொரு கோளில் மனித இனம் தழைக்க முடியுமா என்பதைக் கண்டறியச் செல்லும் விஞ்ஞானிகள் அடங்கிய குழு, சனிக்கு அருகிலிருக்கும் வார்ம்ஹோல் வழியாகப் பிரபஞ்சத்தின் வேறு பகுதிக்குச் செல்வார்கள். என்னதான் வார்ம்ஹோல் என்பது ஒரு தியரிதான் என்றாலும், அறிவியல் ஆராய்ச்சிகளில் விவரிக்கப்பட்ட அதன் தன்மையைத் தாண்டி, படத்தில் வேறு எந்த விஷயங்களோ, அதீத கற்பனைகளோ அதில் இருக்கவே இருக்காது.

அடுத்து அதில் இடம்பெற்ற பிளாக்ஹோல். கருந்துளைகள் நிரூபிக்கப்பட்ட அறிவியல், அந்தத் துறையில் பெரும் விஞ்ஞானியான கிப் தோர்னின் (Kip Thorne) உதவியுடன், கிட்டத்தட்ட 800 TB டேட்டாக்களால் உருவானது இந்தப் படத்தில் காட்டப்படும் பிரமாண்ட பிளாக்ஹோல். ஸ்பேஸ் டைம் மற்றும் ரிலேட்டிவிட்டி போன்ற சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்ளப் பல மாதங்கள் பல்கலைக்கழக வாசல்களெல்லாம் ஏறினார் படத்துக்குத் திரைக்கதை எழுதிய ஜோனதன் நோலன். படத்துக்கு கன்சல்டன்ட்டாக இருந்து உதவிய கிப் தோர்னுக்கு `நிர்வாகத் தயாரிப்பு' கிரெடிட்ஸும் வழங்கப்பட்டது.

இதே கிப் தோர்னின் இதே வார்ம்ஹோல் ஆராய்ச்சிகள் இதற்கு முன்னர் 1997-ம் ஆண்டில் `கான்டாக்ட்' என்ற படத்துக்கு உதவியாக இருந்தது. அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளரான கார்ல் சாகன் இந்தப் படத்துக்குக் கதையும் எழுதியிருக்கிறார். வார்ம்ஹோல், வானியல் குறித்த தெளிவான பார்வையுடன் வெளியான அந்தப் படம், காலத்தால் அழியாத ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் மாஸ்டர் பீஸ். `ஏலியன்கள் இருந்தால் எப்படி இருக்கும்... அவர்களோடு நம் முதல் தொடர்பு எப்படியிருக்கும்’ என்ற மிக சுவாரஸ்யமான கதை. இங்கே ஏலியன் என்பது ஒரு ஃபேன்டஸிதான் என்றாலும், வார்ம்ஹோல் மூலம் விண்வெளிப் பயணம் மேற்கொள்வது, நேர வித்தியாசங்கள் என அனைத்தும் அறிவியல் கோட்பாடுகளின்படியே அமைக்கப்பட்டன.

2016-ம் ஆண்டு வெளியான `அரைவல்' படம் இதே ஏலியன் சினிமா வகைகளில் ஓர் அசாத்தியமான மைல்கல். ஏலியன் என்றால், ஏதோ ஒரு மிருகத்தின் உடல் தோற்றம்கொண்டு வலிமையுடன் இருப்பார்கள்; இல்லையென்றால், மிரட்டும் பாணியில் கொம்புகள், நீளமாகப் பற்கள் என வில்லன்களாக இருப்பார்கள் என்பதுதான் ஹாலிவுட்டின் எழுதப்படாத விதி. ஆனால், `அரைவல்' படத்தின் ஏலியன்களான `ஹெப்டாபாட்ஸ்' இப்படி எந்தக் கட்டமைப்புக்குள்ளும் சேராத ஒரு கற்பனையாக இருந்தது. அவர்களின் மொழி பேசுவது அல்ல, உணர்வது. ஆம், வட்டங்களாக விரியும் பிக்டோரியல் விஷயமாக அவர்கள் சேதி கொண்டு வந்தார்கள். அதுமட்டுமன்றி, `லிங்குவிஸ்டிக் ரிலேட்டிவிட்டி' (Linguistic relativity) என்ற கோட்பாட்டை அலசியிருப்பார்கள். அதாவது, இது ஒரு மொழி எப்படி அதைப் பேசுபவரின் உலகப் பார்வையையும், புரிந்துகொள்ளும் திறனையும் மாற்றியமைக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சி. உலகின் பல்வேறு இடங்களில் இறங்கிய ஏலியன்கள் சொல்லும் செய்தியை, ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் மொழி மாற்றம் செய்கின்றன. உதாரணமாக `Weapon' மற்றும் `Tool'-க்கு உண்டான வேறுபாடு. இரண்டுமே `ஆயுதம்' என அர்த்தம்கொண்டாலும், `Tool' என்பது ஒரு நேர்மறைச் சிந்தனையைக் கொடுப்பது அல்லவா?

இதைத் தாண்டி, படத்தில் மற்றொரு சுவாரஸ்யம் உண்டு. அது, மனிதர்கள் எப்போதும் நேரத்தை நேர்க்கோட்டில் மட்டுமே உணர்வார்கள். அதாவது, நம்மால் கடந்தகால நினைவுகளை யோசித்துப் பார்க்க முடியுமே தவிர, நம் எதிர்காலத்தை யூகிக்கவே முடியாது. அது ஏன் அப்படி... காலம் ஏன் ஓர் இருவழிப் பாதையாக இல்லை... நம்மால் நிகழ்காலத்திலிருந்துகொண்டு இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சேர்த்தே உணர முடிந்தால் அது ஓர் ஆகப்பெரும் பரிணாம வளர்ச்சி அல்லவா... இதுதான் `அரைவல்' சொல்லும் மேஜிக்!

சயின்ஸ் ஃபிக்‌ஷனோ, சயின்ஸ் கலந்த ஃபேன்டஸியோ அல்லது வெறும் ஃபேன்டஸியோ இங்கே சிக்கல் இல்லை. ஆனால், இவை அனைத்தும் அதனதன் எல்லையிலிருந்துவிட்டால் பிரச்னையே கிடையாது. ஃபேன்டஸியை சயின்ஸ் என்றோ, ஏற்கெனவே இது சயின்ஸ் இல்லை என்று ஒதுக்கிவைத்த ஒன்றை வேண்டுமென்றே விடாப்பிடியாக, `இதுவும் அறிவியல்தான்’ என்று முட்டுக்கொடுப்பதோதான் பிரச்னை.

`ஜூராசிக் பார்க்’ ஒரு ஃபேன்டஸிதான். ஆனால், அதுவும், அழிந்துபோன ஓர் உயிரினத்தை அதன் டிஎன்ஏ கொண்டு மீளுருவாக்கம் செய்வது என ஓர் எதிர்காலத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசியிருக்கும். `பிளேடு ரன்னர்' தந்த எழுத்தாளர் பிலிப் கே. டிக்-கின் பெரும்பாலான கதைகளும் அறிவியல் புனைவுக் கதைகள்தாம். ஆனால், அறிவியலின் இலக்கணத்தை அவர் எதிலேயும் மீறியது இல்லை. இல்லாத ஒன்றை அறிவியல் என்று முன்வைத்ததும் இல்லை. புனைவு என்றும் வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படாது. மேஜிக்/ஃபேன்டஸி என்றுமே அறிவியல் ஆகாது.