Published:Updated:

``அஜித், பக்கத்துல உட்கார்ந்து பேசுவார்... விஜய்கூட பேச அம்புட்டு ஆசை!’’ - சீனி பாட்டி

இயக்குநர் சிவா, சீனி பாட்டி மற்றும் அஜித்
இயக்குநர் சிவா, சீனி பாட்டி மற்றும் அஜித்

`மெர்சல்', `விஸ்வாசம்' எனப் பல்வேறு படங்களில் நடித்த `சிட்டுக் குருவி' சீனி பாட்டி, தற்போது ரஜினியின் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு சின்ன உரையாடல்.

`ஆளப் போறான் தமிழன்' பாடலில் சீனி பாட்டியின் டயலாக்கை கண்டிப்பாக நம்மால் மறக்க முடியாது. விஜய் டி.வி-யின் `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மாயனுடன் சேர்ந்து இவர் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை. ரஜினி, விஜய், அஜித் என பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துவிட்டார் சீனி பாட்டி. ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் மனதில் நின்றுவிடக்கூடிய முகம். இன்றைய தமிழ் திரைத்துறையில், 80 வயதில் இவ்வளவு துடிப்பாக நடிப்பவர்கள் வெகு சிலர்தான். சினிமா வாய்ப்பு, நடிப்பு அனுபவம் எனப் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சீனி பாட்டி.

அஜித், சீனி பாட்டி
அஜித், சீனி பாட்டி

``என் பேரு சீனியம்மாள். எல்லாரும் சிட்டுக் குருவின்னு கூப்பிடுவாங்க. `மெர்சல்' படத்துல அதுதான் என்னுடைய பெயர். வயசு 80. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மதுரையில் இருக்கிற ஒரு சின்ன கிராமத்தில்தான். எனக்கு 10 புள்ளைங்க பிறந்தாங்க. இப்போ நாலு பையன், மூணு பொண்ணு இருக்காங்க. மூணு பேர் இறந்துட்டாங்க. என் வீட்டுக்காரர் ஒரு மில்லுல வேலைபார்த்தார். இப்போ இறந்துட்டார்."

``எனக்கு பேரன் பேத்திங்க நிறைய பேர் இருக்காங்க. கொள்ளுப்பேரன், பேத்திகளைக்கூட பார்த்துட்டேன். இத்தனை பேர் இருந்தும் இப்போ நான் தனியாதான் இருக்கேன். என் புள்ள பாண்டியன், சினிமாத் துறையில இருக்கார். அவர் மூலமாதான் `சிவாஜி' படத்துல ஒரு பாட்டுல வர வாய்ப்பு கிடைச்சது. நான் சினிமாவுல நடிப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை."

சீனி பாட்டி, கமல்
சீனி பாட்டி, கமல்

``அப்புறம் நிறைய வாய்ப்புகள் தேடி வந்துச்சு. இப்போ இருக்கிற ஹீரோக்கள் நிறையா பேர்கூட நடிச்சிருக்கேன். ஆனா, பெயர் வாங்கிக்கொடுத்தது, `மெர்சல்'தான். ஷூட்டிங் நடக்கும்போது விஜய்கூட அதிகமா பேசினது இல்லை. அவரும் சிரிப்பார், நானும் சிரிப்பேன். ரொம்ப அமைதியான தம்பி. விஜய் தம்பிகூட பேசணும்னு பிரியப்பட்டாலும் செக்யூரிட்டிங்க அவர்கிட்ட பேச விடமாட்டாங்க."

சீனி பாட்டி, பிரபு
சீனி பாட்டி, பிரபு

``ரஜினி ரொம்ப நல்லா பேசுவார். இப்போ அவருடைய படத்துலதான் நடிச்சிட்டிருக்கேன். ஹைதராபாத்துல ஷூட்டிங் நடக்குது. நேத்துகூட என்னுடய வயசு என்னன்னு கேட்டார். நான் 80 தாண்டிடுச்சு சாமின்னு சொன்னேன். குடும்பம் பத்தி விசாரிப்பார். அப்புறம், பிரபு தம்பி ரொம்பப் பிரியமா இருப்பார். பொதுவா நான் யார் பரிசு கொடுத்தாலும் வாங்க மாட்டேன். அவர் வற்புறுத்தி ஒரு பரிசு கொடுத்தார். அதை மறக்கவே மாட்டேன். என்கூட நடிச்ச எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும். ஆனா, அஜித் தம்பியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். தேடி வந்து பேசுவார்."

சீனி பாட்டி
சீனி பாட்டி

``அஜித் உங்களை விசாரிக்கச் சொன்னார்னு இப்போ நடக்கிற ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து சொன்னாங்க. எனக்கு சந்தோஷம் கொள்ளலை. அந்தத் தம்பி அன்பா இருக்கும்; மனசார பேசும். என்னைப் பார்த்ததும் வந்து பக்கத்துல உட்கார்ந்துக்குவார். இயக்குநர் சிவா தம்பியும் அப்படித்தான். அவருக்கு கோபமே வராது. டயலாக் சொல்ல மறந்தாலும் தன்மையா எடுத்துச் சொல்வார். என்கிட்டனு இல்லை, யார்கிட்டயும் கோவப்பட மாட்டார். எனக்குப் பிடிச்ச இயக்குநர்னா அவர்தேன்.''

`` 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் ஹீரோயின் ரெண்டு பேரும் நல்லா பழகுவாங்க. மாயன் தம்பி உயிரையே விடும். இப்போகூட என்கிட்ட போன்ல பேசினார். நான் என்னதான் நிறையப் படங்கள் நடிச்சிருந்தாலும், இந்த சீரியல்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லாரும் குடும்பமா பழகுவோம்."

சீனி பாட்டி, விஜய் சேதுபதி
சீனி பாட்டி, விஜய் சேதுபதி
`அஜித் வீட்டில் வனத்துறை சோதனை நடத்தியது உண்மையா?' -மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

``படங்கள், சீரியல்னு நடிக்கிறதால சென்னை சாலி கிராமத்துல வீடு எடுத்து தங்கியிருக்கேன். தனியாதான் இருக்கேன். `இப்படித் தனியா இருக்கியேமா' என் புள்ளைங்க பயப்படுவாங்க. ஆனா, நான் நகைநட்டு போட்டுக்கிட்டுகூட தைரியமாத் தனியா போவேன்."

``என் மகள்கள், ``ஏம்மா நகையெல்லாம் போட்டுகிட்டு சென்னையில் திரியாத''னு  திட்டுவாளுங்க. எனக்கு தெம்பு இருக்கிற வரைக்கும் உழைச்சு சாப்பிடுவேன். என் வேலைகளை நானே பார்த்துப்பேன்."

நாயகிகளுடன் சீனி பாட்டி
நாயகிகளுடன் சீனி பாட்டி

``யாருக்கும் சிரமம் கொடுக்காம வாழ்ந்துட்டு போயிடணும்.   சமையல், வீட்டு வேலைகள் எல்லாம் நானே பார்த்துப்பேன். தினை, சாமை, வரகுனு சிறுதானியம் பொங்கிச் சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாங்க சமைச்சுப்போடுறேன்'' என்று முடித்தார் பாசக்கார `சிட்டுக் குருவி'.

அடுத்த கட்டுரைக்கு