
நானும், விக்னுவும் காலேஜ் மேட். நண்பர்களாகத்தான் பழகினோம். எங்களைப் பார்க்கிற பலரும் ‘நீங்க லவ்வர்ஸ்தானே’ன்னு கேட்பாங்க. ‘அதெல்லாம் இல்லைங்க, நாங்க பிரெண்ட்ஸ்’னுதான் சொல்லிட்டிருந்தோம்.
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!
`கணவன் - மனைவிக்கிடையே நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களையும் ரீல்ஸாகப் பதிவிட்டு பெரும்பாலான இதயங்களைக் கொள்ளைகொள்பவர்கள்தான் மது பிரியா - விக்னு பரத் ஜோடி. `ரீல்ஸ் பட்டாளம்' பகுதிக்காக அவர்களைச் சந்தித்தோம்.
‘`பேமஸ் ஆகணும்னுலாம் நான் இன்ஸ்டாகிராம் பேஜ் ஓப்பன் பண்ணலைங்க. என் புருஷன் எனக்கு முன்னாடி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் கிரியேட் பண்ணிட்டான். அவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன பண்ணுறான்... யாரையெல்லாம் ஃபாலோ பண்ணுறான்... யாருக்கெல்லாம் ஹார்ட்டீன் விடுறான்னு அவனை செக் பண்ணுறதுக்காக மட்டும்தான் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினேன்’’ என வெளிப்படையாகப் பேசிய மதுவை, ‘‘அடிப்பாவி! உண்மையாவே அதுக்காகத்தானா?'’ என்று கேட்டு ஷாக் ஆன விக்னு பரத்திடம், `ஆமாங்க!' என கண் ஜாடை காட்டிவிட்டு நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார் மது பிரியா.

‘‘நானும், விக்னுவும் காலேஜ் மேட். நண்பர்களாகத்தான் பழகினோம். எங்களைப் பார்க்கிற பலரும் ‘நீங்க லவ்வர்ஸ்தானே’ன்னு கேட்பாங்க. ‘அதெல்லாம் இல்லைங்க, நாங்க பிரெண்ட்ஸ்’னுதான் சொல்லிட்டிருந்தோம். ஒருநாள் இவனும் நானும் வண்டியில போயிட்டிருக்கும்போது, ‘எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க.. அரேஞ்ச்டு மேரேஜ் லைப் எப்படி இருக்கும்னு தெரியலை'ன்னு ரொம்ப கேஷுவலா இவன்கிட்ட ஷேர் பண்ணினேன். இவனுக்கு பொசசிவ் ஆகி அன்னைக்கு நைட்டே எனக்கு போன் பண்ணி `நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?'ன்னு கேட்டுட்டான். ஒரு வாரம் கழிச்சு நானும் ஓகே சொல்லிட்டேன்!’' என்றதும் விக்னு தொடர்ந்தார். ‘`எங்க ரெண்டு பேருடைய பெற்றோர்களும் எங்க லவ்விற்கு சப்போர்ட்டா இருந்தாங்க. அதனால எங்க கல்யாணத்துல பெரிய அளவில் பிரச்னை வரல. எங்களுடைய 23 வயசிலேயே எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு’’ என்றதும், ‘`இரு... இரு... நான் கண்டினியூ பண்ணுறேன்’' என்றவாறு மது தொடர்ந்தார்.
‘`கல்யாணத்துக்கும் வயசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைங்கிறது எங்களுடைய பாயின்ட். அதனால எங்களுக்குள் நடக்கிற சுவாரஸ்யமான கான்வர்சேஷன்களை அப்படியே பேஸ்புக்ல பதிவு பண்ணுவேன். அதுக்கு எங்க பிரெண்ட்ஸ், பேமிலி எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. எப்ப அடுத்த போஸ்ட் போடுவன்னு ஆர்வமா கேட்பாங்க. கல்யாணத்துக்குப் பிறகு இவன் பேஸ்புக்ல ஆக்டிவ் ஆக இல்லை... மேல சொன்ன மாதிரி இவனை செக் பண்ணுறதுக்காக மட்டும்தான் இன்ஸ்டாகிராம் ஓப்பன் பண்ணினேன். அந்த பேஜ்ல சும்மா நாங்க காலேஜ் படிக்கும்போது எடுத்த போட்டோஸ் வச்சு ஒரு பாட்டு சேர்த்து ரீல்ஸ் போட்டேன். நல்ல ரீச்’' என்றவரிடம் இன்ஸ்டா இன்ஃபுளூயன்ஸராக மாறிய கதையைக் கேட்டோம்.

‘`நானும், விக்னுவும் ஹெச்ஆராக வேலை பார்க்கிறோம். என் மூத்த பொண்ணு தியா சின்னப் பொண்ணா இருந்தப்ப, டிரெயினிங் புரோகிராமிற்காக கோவா போக வேண்டியிருந்தது. என்னால பாப்பாவை விட்டுட்டு ஒரு வாரம் இருக்க முடியாதுன்னு விக்னுவும் லீவ் போட்டுட்டு என்கூட வந்தான். நான் தினமும் டிரெயினிங் முடிச்சிட்டு வர்ற வரைக்கும் அவன் பாப்பாவை கவனிச்சுக்கிட்டு இருப்பான். அப்ப என் பேட்ச்ல இருந்த பொண்ணுங்க ரீல்ஸ் எடுத்தாங்க. என்னையும் எடுக்கச் சொன்னாங்க. சரின்னு நானும் விக்னுவும் சேர்ந்து வீடியோ பண்ணினோம். அந்த ரீல் ஒரு வாரத்துல 12 மில்லியன் வியூஸ் போயிடுச்சு. அதுக்கப்புறமாகத்தான் தொடர்ந்து வீடியோ பண்ண ஸ்டார்ட் பண்ணினோம்’' என்றதும் விக்னு தொடர்ந்தார்.
‘`எனக்கு சின்ன வயசில இருந்தே நடிக்கணும், மீடியாவிற்குள் போகணும்னுலாம் ஆசை. நான் யூஜி படிக்கும்போதே என் அப்பா தவறிட்டாங்க. அதனால பேமிலியைப் பார்த்துக்கணுங்கிறதனால அதை நோக்கி டிராவல் பண்ண முடியல. கல்யாணம் முடிஞ்ச சமயம் மது என்கிட்ட, ‘`நான்தான் வேலைக்குப் போறேன்ல, நீ வேணும்னா ஆக்டிங் டிரை பண்ணு!'ன்னு சொன்னா. கமிட்மென்ட்ஸ் இருந்ததனால ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு மறுத்துட்டேன். கொஞ்சமும் எதிர்பாராம ரீல்ஸ் மூலமா இப்ப என் ஆசை நிறைவேறிட்டு இருக்கு. இதுவரைக்கும் எங்களுக்கு பெருசா எந்த நெகட்டிவ் கமென்ட்ஸும் வந்ததில்லை. மாலுக்கெல்லாம் போகும்போது அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசுவாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும்’’ என்றதும் மது பேசினார்.
‘`ரெண்டாவது பாப்பா ரிதிக்கு இப்ப ஆறு மாசம்தான் ஆகுது. முதல் குழந்தை தியா பிறந்ததும் அவ பெயருல ஒரு இமெயில் ஐ.டி கிரியேட் பண்ணினோம். நானும், விக்னுவும் அதுல அவளுக்காக மெயில் பண்ணுவோம். அவளுக்கும், எங்களுக்குமான தருணங்கள், அவளைப் பற்றின்னு எல்லாத்தையும் அவளுக்கு மெயில் பண்ணுவோம். அந்த மெயில் ஐ.டி-யை அவளுடைய 18 வயசுல அவகிட்ட கொடுப்போம். அந்த மெசேஜ் எல்லாம் படிக்கும்போது அவளுடைய 18 வருட பயணத்தை என்ஜாய் பண்ணுவான்னு நம்புறோம். அதே மாதிரி ரிதிக்கும் கிரியேட் பண்ணியிருக்கோம். அப்படியான ஒன்றாகத்தான் நாங்க இன்ஸ்டாகிராம் ஐ.டி-யை நினைக்கிறோம். எங்க பேஜ்ல குழந்தைகளுக்கான கன்டென்ட் போட்டா அது சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்குங்கிறதனால மட்டும்தான் இருவருக்கும் பேஜ் ஆரம்பிச்சிருக்கோம். தியா பேஜை விக்னுவும், ரிதி பேஜை நானும் மேனேஜ் பண்ணுறோம்.

வீக் எண்ட்ல வீடியோ எடுத்து, மற்ற நாள்களில் அதை போஸ்ட் பண்ணுவோம். பெரும்பாலும் நானே கன்டென்ட் சொல்லி, எடிட்டும் பண்ணிடுவேன். இப்ப மெட்டர்னிட்டி பிரேக்ல இருக்கிறதனால ரீல்ஸ் போட இன்னும் வசதியாகிடுச்சு. பிரசவ அறைக்குப் போகுறதுக்கு முன்னாடி ஒரு ரீல்ஸ் பண்ணி அந்த வீடியோவை எடிட் பண்ணி போஸ்ட் போட்டுட்டுப் போனேன். எங்க சொந்தக்காரங்க எல்லாரும் அதைப் பார்த்துதான் நீ அட்மிட் ஆன விஷயமே எங்களுக்குத் தெரிஞ்சதுன்னு சொன்னாங்க’' என்றவரின் கரம் பற்றி விக்னு தொடர்ந்தார்.
‘`எங்களுக்குள்ள என்ன நடக்குதோ அதை வீடியோவாகப் போடுவோம். அதே நேரத்தில் ரொம்ப கிரின்ச் வீடியோவும் போட மாட்டோம். மதுவோட நார்த் இந்தியன் பிரெண்ட்ஸ் பலர் எங்க வீடியோ பார்க்கிறாங்க. அவங்களுக்காக ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட ஆரம்பிச்சோம். அதுவும் நல்ல ரீச் கொடுத்துச்சு. இயல்பா எங்க வீட்ல நடக்கிறதை போஸ்ட் பண்ணுறோம். அது எல்லாருடனும் ரிலேட் ஆகுறதனால எல்லாருக்கும் எங்களைப் பிடிச்சிருக்கு’' என்றார். ‘‘இவங்க வந்ததைப் பற்றி ரீல்ஸ் போடாம விட்டுட்டோம்’' என மது ஞாபகப்படுத்த, அவர்களிடம் நாம் பேசிக் கொண்டிருந்ததை `ஷூட் மோடு என்னன்னு கண்டுபிடிங்க!' என்கிற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுவிட்டு, நம்மை வழியனுப்பி வைத்தார்கள்!
அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?
என்னோட முடி நீளமா இருக்கிறதனால ஹேர் புராடக்ட்ஸ் புரொமோட் பண்ணச் சொல்லிக் கேட்பாங்க. ஒவ்வொருத்தர் முடி ஒவ்வொரு மாதிரி டைப்ல இருக்கும். நான் பயன்படுத்தி எனக்கு நல்ல ரிசல்ட் கொடுத்த புராடக்ட், இன்னொருத்தங்களுடைய முடிக்கு செட் ஆகாம இருக்கலாம். அதனால ஹேர் புராடக்ட்ஸ் கண்டிப்பா புரொமோட் பண்ண மாட்டோம்.