Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: ஸ்ரீராம், ராகவி

 ராகவி, ஸ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகவி, ஸ்ரீராம்

‘ஃபர்ஸ்ட் டைம் வீட்டுல நான் எங்க நின்னுட்டிருக்கேனோ அங்க வந்துட்டு ஏதாவது ஒரு பாட்டு சொல்லி, பாடச் சொல்லிக் கேட்பார். அவர் கேட்டதை நான் பாடினேன்.

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

`தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

கண்ணை இழந்த வண்டு!' என்று அந்தக் குரலைக் கேட்கும்போதே சிலிர்க்கிறது. `அட, இதுல என்ன இருக்கு? எஸ்.பி.பி-யின் குரலைக் கேட்டால் யாருக்குத்தான் மனசு மயங்காது'ன்னு நீங்க சொல்றது புரியுது. என்னன்னா, இது எஸ்.பி.பி வாய்ஸ் இல்ல... நிஜமாகவே ராகவி பாடும்போது எஸ்.பி.பி தான் கண் முன் வந்து செல்கிறார்.

ஓவர் பில்டப்பெல்லாம் இல்லை... இப்படி அவர் போகிற போக்கில் பாடிய `இளமை எனும் பூங்காற்று' பாடல் இன்ஸ்டாகிராமில் மில்லியன் லைக்ஸ்களைக் குவிக்கிறதென்றால் பில்டப் கொடுக்கலாம்தானே? (நமக்கெல்லாம் நூறைத் தாண்டுறதுக்கே முக்கும்!) ராகவி இப்ப பெரிய செலிபிரிட்டி. ‘‘ஹலோ, நான் மட்டும் என்ன தக்காளி கிரேவியா?” என்றவாறு என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீராம். ராகவி பாடலின் மெட்டில் மயங்கிப் பாடினாரோ, அல்லது ஸ்ரீராம் மேலுள்ள காதலில் பாடியிருப்பாரோ, இன்னமும் இன்ஸ்டாவில் இந்தப் பாடலுக்கு வியூஸ் எகிறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கே சொல்ல விரும்பும் நியூஸ்!

 ராகவி, ஸ்ரீராம்
ராகவி, ஸ்ரீராம்

ஸ்ரீராம் பியானோ வாசிக்க, ராகவி பாடிக் கொண்டிருந்தார். அவர்களுடைய இசை செவிக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. பாடி முடித்ததும் நம்மிடம் பேசத் தொடங்கினார் ராகவி.

‘‘நானும் ஸ்ரீராமும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாங்க ஒரு மியூசிக் அகாடமி நடத்திட்டு வர்றோம். இடையில் நேரம் கிடைக்கும்போது இன்ஸ்டாகிராமில் பாட்டு பாடி போஸ்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணி இன்ஸ்டாகிராம் பேஜ் ஆரம்பிச்சோம்’’ என்று ராகவி சொல்ல, ‘‘எனக்கு ஆக்டிங்ல இன்ட்ரஸ்ட். அதுக்கும் இந்த பிளாட்பாரம் பயனுள்ளதா இருக்கும்னு தோணுச்சு. இன்ஸ்டா ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம்’’ என்றவாறு ஸ்ரீராம் தொடர்ந்தார்.

‘‘பாட்டு பாடி வீடியோ போட ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் மெதுவாகத்தான் ஃபாலோயர்ஸ் வந்துட்டிருந்தாங்க. ஆனாலும், அதையெல்லாம் பொருட் படுத்தாம தொடர்ந்து வீடியோ போட்டுட் டிருந்தோம். எங்களுக்குப் பிடிச்சதைப் பண்ணிட்டிருந்தோம். பாட்டு மட்டும்னு இல்லாம டிராவல், ஃபுட், லைப்ஸ்டைல், ஃபன், என்டர்டெயின்மென்ட்னு எல்லாத்தையும் கலந்து கொடுக்கணும்னு நினைச்சோம். அதனாலதான் பேஜுக்கு `TRA(Travel)F(Fun)F(Food)L(Life)E(Entertainment) couple'னு பெயர் வச்சோம்’’ என்றதும் ராகவி பேச ஆரம்பித்தார்.

ஸ்ரீராம், ராகவி,
ஸ்ரீராம், ராகவி,

‘‘ஃபர்ஸ்ட் டைம் வீட்டுல நான் எங்க நின்னுட்டிருக்கேனோ அங்க வந்துட்டு ஏதாவது ஒரு பாட்டு சொல்லி, பாடச் சொல்லிக் கேட்பார். அவர் கேட்டதை நான் பாடினேன். அதை அப்படியே வீடியோவா எடுத்துப் போட்டார். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இப்படி `வழிப்பறி பாடல்கள்'னு நான் சமைச் சுட்டிருக்கும்போது, வீட்டைச் சுத்தம் செய்யும்போது, ஏதாவது வேலை பண்ணிட்டிருக்கும்போது திடீர்னு வந்து அவர் கேட்குற பாட்டை அல்லது எனக்குப் பிடிச்ச பாட்டைப் பாடுவேன். அந்த சீரிஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது’’ என்றவரிடம் மறக்கமுடியாத மொமன்ட் குறித்துக் கேட்டோம்.

‘‘சமீபத்தில் சிவராத்திரிக்காகக் கோயிலுக்குப் போயிருந்தோம். அங்க ஒருத்தங்க எங்களைப் பார்த்துட்டு, `நீங்கதானே இன்ஸ்டாகிராமில் பாடுவீங்க. நல்லா பாடுறீங்க... நல்லா இருங்க!'ன்னு சொன்னாங்க. அப்படியான பாராட்டு முதன்முதலா அன்னைக்குத்தான் எங்களுக்குக் கிடைச்சது. அந்த மொமன்ட் ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு’’ என்றதும் ‘இன்னொரு மொமன்ட்டும் இருக்கு’ என்றவாறு ஸ்ரீராம் தொடர்ந்தார்.

‘‘ஒருத்தர், ‘என் அம்மா உங்களோட பெரிய ஃபேன். அவங்களுக்கு 50 வயசுக்கு மேல் ஆகுது. உங்களை ஃபாலோ பண்ணணுங்கிறதுக்காகவே புதுசா அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்காங்க'ன்னு மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. அதெல்லாம் எங்களுக்கு ஸ்பெஷலான தருணங்கள்’’ என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஸ்ரீராம், ராகவி,
ஸ்ரீராம், ராகவி,

‘‘எங்க மியூசிக் அகாடமி வேலைகள், வீடியோன்னு எவ்ளோ பிசியா இருந்தாலும் பர்சனல் டைமுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். 90 செகண்ட் ரீல்ஸுக்கு எவ்ளோ நேரம் செலவழிக்கணும்னு எங்களுக்குத் தெரியும். அதுக்கு மேல எக்ஸ்ட்ராவா இன்ஸ்டா ரீல்ஸுக்காக நேரத்தைச் செலவு பண்ண மாட்டோம். எல்லாரும் ஆர்ட்டை ஒரு வின்னிங் பாயின்ட்டாவே நினைக்கிறாங்க. பாட்டு கத்துக்கிறதோ, டான்ஸ் கத்துக்கிறதோ ஒரு சர்ட்டிபிகேட்டிற்காகவோ, அது மூலமா ஏதாவதொரு போட்டியில் கலந்துக்கிறதுக்காகவோ மட்டுமே இருந்திடக்கூடாதுன்னு நாங்க நினைக்கிறோம். கலையை நம்முடைய லைஃப்ஸ்டைலுக்குள்ள கொண்டு வர்றது ரொம்ப முக்கியம். அதைக் கொண்டு வரணுங்கிறதுதான் எங்களுடைய கனவு. மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கறதுக்கான கருவியா ஒரு கலை இருக்கணுமே தவிர சர்ட்டிபிகேட்டிற்காக மட்டும் இருக்கக் கூடாதுங்க. அதே மாதிரி எப்படி மியூசிக் கம்யூனிட்டி, யோகா கம்யூனிட்டி எல்லாம் இருக்கோ அப்படி கப்புள் கம்யூனிட்டி ஒண்ணு ஆரம்பிக்கணும்னு ஐடியா. சமீபத்தில் ஒரு ஈவண்ட்ல கப்புள் கம்யூனிட்டி லான்ச் பண்ணியிருந்தோம்’’ என்றவரின் கரம் பற்றி ராகவி தொடர்ந்தார்.

 ராகவி, ஸ்ரீராம்
ராகவி, ஸ்ரீராம்

‘‘ஆர்கானிக் பொருள்களை நாங்க புரொமோட் பண்ணுறோம். அதே மாதிரி டிரஸ், ஸ்கின் கேர், சாப்பிடுற இடங்களையும் நாங்க கொலாபரேஷனில் பண்ணியிருக்கோம். எந்த விஷயத்தை நாம புரொமோட் பண்ணணுங்கிறதுல ரொம்பவே கவனமா இருக்கோம். சமீபத்தில் மிகப்பெரிய பீட்சா பிராண்டிலிருந்து கொலாபரேஷனுக்குக் கேட்டாங்க. ஜங்க் ஃபுட்ஸை புரொமோட் பண்ண வேண்டாம்னு அதுக்கு நோ சொல்லிட்டோம். மனசுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைப் பண்ணி அது மூலமாதான் சம்பாதிக்கணும்னு அவசியமில்லை. எனக்குப் பிடிச்சதைப் பண்ணுவேன், காசு தானாக வரும் என்கிற எண்ணம்தான் எங்களுக்கு’’ என்றவரை நிறுத்தி, ‘‘நீங்க உங்க திறமையை வளர்த்துக்கணும்னு நினைச்சா போதும், அதுவே உங்களை வழிநடத்திக் கொண்டுபோயிடும்’’ என்றவாறு ஸ்ரீராம் பேச ஆரம்பித்தார்.

‘‘இப்ப சின்னச் சின்ன புராஜெக்ட்களுக்கு மியூசிக் பண்ணிட்டிருக்கேன். படங்களுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணணுங்கிறதுதான் இலக்கு. தவிர, ஈவன்ட்களுக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடவும் செய்றோம். எங்க மியூசிக் அகாடமி, ஈவன்ட் சிங்கிங்... இதுக்கிடையில் இன்ஸ்டாகிராம்னு பிஸியா ஓடிட்டிருக்கோம்’’ என்றதும் இருவரையும் பாடச் சொல்லிக் கேட்டோம்.

 ராகவி, ஸ்ரீராம்
ராகவி, ஸ்ரீராம்
ஸ்ரீராம், ராகவி,
ஸ்ரீராம், ராகவி,

‘வாத்தி’ படத்தில் வருகிற `வா வாத்தி' பாடலை ராகவி பாட, பியானோ இசைத்துக் கொண்டிருந்த ஸ்ரீராமும் சேர்ந்துகொண்டார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு காதலோடு பாட, இசை அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தது!

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

‘ரம்மி விளையாடிப் பணம் வின் பண்ணுங்க’ மாதிரியான கேமிங் ஆப்களை நாங்க நிச்சயம் புரொமோட் பண்ண மாட்டோம்!