Published:Updated:

``பதினைஞ்சு பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க!" - `நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா

ஶ்ரீத்திகா
ஶ்ரீத்திகா

கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை பேசினேன். அந்த கான்வெர்சேஷன்லயே நான் நினைச்சது சரியா இருந்தது.

சீரியல் நடிகை ஶ்ரீத்திகா - சநீஷ் திருமணம் கடந்த 30-ம் தேதி கேரளாவில் உள்ள வயநாடு சர்ச் ஒன்றில் எளிமையாக நடந்து முடிந்தது. உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனக் குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணத்தில் கலந்துகொண்டனர். வாழ்த்துகள் சொல்லி ஶ்ரீத்திகாவிடம் பேசினோம்.

திடீர் திருமணம், அதுவும் சிம்பிளாக ஏன்?

``சில வருஷங்களாவே கல்யாணப் பேச்சு சீரியஸா போயிட்டிருந்தது. என்னுடைய மாமா (ஶ்ரீத்திகாவின் அக்காவும் நடிகையுமான சுதாவின் கணவர்) மூலமா எனக்குக் கிடைச்சிருக்கார் சநீஷ். மாமாவும் இவரும் துபாய்ல ரூம் மேட்ஸ். அந்த கனெக்ட்ல அமைஞ்ச திருமணம். சினிமாவுலேயும் சரி, பர்சனல் லைஃப்லேயும் சரி, எனக்கு நல்லது கெட்டது எல்லாமே சொல்லிக் கொடுத்தவங்க அக்காவும் மாமாவும்தான். அதனால அவங்களுடைய செலக்‌ஷனான மாப்பிளையை நூறு பர்சன்ட் நம்புறேன். என்னுடைய மாமா, மாப்பிள்ளைகிட்ட முதல்ல அறிமுகமாகிக்கச் சொன்னார். கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு, மூணு தடவைப் பேசினேன். அந்த உரையாடல்லே நான் நினைச்சது சரியா இருந்தது. நான் நடிகை; அவர் நடிகர் இல்லை... இவ்வளவுதான் எங்களுக்குள்ள இருக்கிற வித்தியாசம். மத்தபடி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான எண்ணம்தான். எல்லோருமே சேர்ந்துதான் இந்தக் கல்யாணத் தேதியை முடிவு செஞ்சோம். 15 பேர்தான் கல்யாணத்துக்கு வந்திருப்பாங்க. சிம்பிளா பண்ணணும்னுதான் இப்படிப் பண்ணிட்டோம்."

ஶ்ரீத்திகா
ஶ்ரீத்திகா

சநீஷுக்கு சீரியல் பார்க்கும் பழக்கம் உள்ளதா? கல்யாணத்துக்குப் பிறகு நீங்களும் வளைகுடா நாட்டுக்குச் சென்று விடுவீர்களா?

``சநீஷ் டிவியில நியூஸ் மட்டும்தான் பார்த்திட்டிருந்தார். நாங்க ரெண்டு பேரும் சந்திச்ச பிறகு இப்போ என்னுடைய சீரியல்களைப் பார்க்கத் தொடங்கியிருக்கார். மேரேஜ்க்குப் பிறகு என்ன பண்ணலாம்னு இனிமேதான் முடிவு செய்யணும். அவருக்கு அவருடைய பிசினஸ் முக்கியம். என்னால சீரியலை விட முடியாது. கொஞ்ச நாளைக்கு துபாய்க்கும், சென்னைக்கும் பறந்தபடியே இருப்போம்'' என்கிறார்.

பின் செல்ல