
கலைப்புலி எஸ்.தாணு - ஓவியம்: மேரி
கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஒரு தேசிய விருது. 1992-ல் பாலுமகேந்திரா இயக்க, நான் தயாரித்த ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்காக முதல்முறையாக தேசிய விருது பெற்றேன். இப்போது 2021-ல் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ளேன். அன்று குருவின் படத்துக்காக, இப்போது சிஷ்யனின் படத்துக்காக. குரு - சிஷ்யன் இருவருக்குமே என் நெஞ்சம் நிறைந்த வாழ்நாளுக்குமான நன்றிகள்.
ராம நாயுடுவின் மகன்கள் நடிகர் வெங்கடேஷ், அவரது சகோதரர் சுரேஷ் பாபுவிடம் சொன்னபடி தெலுங்கு தயாரிப்பாளர்கள் வெங்கட்ராஜு - சிவராஜு இருவரையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்டு ‘காக்க காக்க’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ‘கர்ஷனா’ படத்தைத் தொடங்கினோம். கெளதம் மேனனே இயக்க, தமிழில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில், தெலுங்கில் அசின் நடித்தார். தொழில்நுட்பக் குழுவில் எந்த மாற்றமும் இல்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஆர்.டி.ராஜசேகர் கேமரா, எடிட்டிங் ஆன்டனி.
தமிழில் ஷூட்டிங் நடத்திய அதே இலங்கை நுவரெலியா ஏரியில் ஷூட்டிங். ஆனால், ஷூட்டிங்கின்போது படகு கவிழ்ந்து விபத்து நேர்கிறது. வெங்கடேஷுக்கு நீச்சல் தெரியும் என்பதால் பலரையும் காப்பாற்றுகிறார். அசினையும் காப்பாற்றிவிட்டார்கள். உயிர்ச்சேதம் எதுவும் இன்றி எல்லோரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், கேமரா உள்ளிட்ட பொருள்களுக்கு சேதம் ஆகிவிட்டது. கேமராமேன் ராஜசேகருக்கு இந்த விபத்தில் தோள்பட்டையில் பெரிய காயம் ஏற்பட்டுவிட்டது. இன்றுவரை அதன் பாதிப்பு அவருக்கு இருக்கிறது.

கெளதம் மேனனுக்கும், ராஜசேகருக்கும் நல்ல புரிதல் உண்டு. ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்டுக்கொண்டு அவ்வளவு நட்புறவோடு படம் எடுப்பார்கள். கெளதம் மேனனுக்கு அவர் பெரிய பலம்.
இரண்டு முறை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்குப் போனேன். ‘காக்க காக்க’ படத்தில் ஜோதிகாவை வில்லன் சுட்டுவிட, சூர்யா ஜோதிகாவைக் காப்பாற்ற அவரைத் தூக்க முயல்வார். அப்போது தன் கையைப் பார்த்துவிட்டு சத்தம்போட்டுக் கதறுவார். ஜோதிகாவின் இடுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சூர்யா கதறுவதுபோன்ற காட்சி அது. தமிழில் ரத்தம் வருவதுபோன்று நேரடியாகக் காட்டவில்லை. ஆழமாக சினிமாக்களைப் பார்ப்பவர்களுக்குத்தான் சூர்யா ஏன் அழுகிறார் என்பது புரியும். ஆனால், இந்தக் காட்சியைத் தெலுங்கில் எடுக்கும்போது நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். அப்போதே கெளதம் மேனனைத் தனியாகக் கூப்பிட்டு, ‘`தெலுங்கு ரசிகர்களுக்கு நேரடியாகச் சொன்னால்தான் சரியாகப் புரியும். அதனால் கையில் ரத்தத்தைப் பார்த்து வெங்கடேஷ் கதறுவதுபோல் காட்சியை எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்றேன். அதன்படியே படமாக்கினார். படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்க்கும்போது அந்தக் காட்சிக்காக கெளதம் மேனன் சொன்ன அந்த ‘`நன்றி... நன்றி’’ எனும் வார்த்தைகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன.
தமிழில் நடந்ததுபோலவே தெலுங்கிலும் பட்ஜெட் கைமீறிப் போகிறது. படம் நன்றாக வரவேண்டும் என்கிற அதீத ஆர்வத்தில் கௌதம் பெரிய அளவில் பணம் செலவு செய்கிறார். கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் கூடுதலாகிவிட்டது. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிவராஜும் வெங்கட்ராஜும் ‘`ஒரு ஹீரோ படத்துக்கு இவ்வளவுதான் செலவு செய்யமுடியும் என்கிற கணக்கு இருக்கிறது. படம் நீங்கள் சொன்ன பட்ஜெட்டைத் தாண்டிப்போனதால் அடுத்து எங்களுக்கு இன்னொரு படம் செய்துதரவேண்டும்’’ என ஒப்பந்தம்போட்டு கெளதம் மேனனைக் கையெழுத்திடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவர், ‘`தாணு சார்தானே முக்கியத் தயாரிப்பாளர். அவரையும் இதில் சேருங்கள். நான் கையெழுத்துப்போடுகிறேன்’’ என்று சொல்லி என்னையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கிறார்.

ரிலீஸ் தேதி நெருங்குகிறது. தமிழில் மிகப்பெரிய ஹிட் படம் என்பதால் தெலுங்கில் நல்ல விலைக்குப் படம் வியாபாரம் ஆகிறது. படம் திரையிடலுக்கு முன்பு நான் அவர்கள் அலுவலகத்துக்குப் போயிருக்கும்போது விநியோகஸ்தர்களிடமிருந்து வந்த டி.டி-க்களை எல்லாம் எடுத்து உள்ளே வைக்கிறார். என்னிடம் ‘’கணக்கு வழக்குலாம் அப்புறம் பார்த்துக்கலாம். படத்தை முதல்ல ரிலீஸ் பண்ணிடலாம்’’ என்கிறார். ‘`சார்... நான் பணம் போட்டிருக்கேன். நானும் ஃபைனான்சியர்களுக்குப் பணம் தரவேண்டும். கணக்கு வழக்குகளைப் பார்த்துவிடலாம்’’ என்கிறேன். அவர் மறுக்கிறார். அவர்களுக்கு வேறு ஏதோ எண்ணம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
உடனடியாக சுரேஷ் பாபுவுக்கு போன் அடித்து நடந்த சம்பவங்களைச் சொல்லி, ‘`எனக்குப் பணம் கொடுக்கும்வரை படத்தின் பிரின்ட்டைத் தராதீங்க சார்’’ என்கிறேன். அவரும் பிரின்ட்டை நிறுத்திவிட்டார். உடனே வெங்கட்ராஜு கெளதம் மேனனுக்கு போன் அடித்து, “படம் ரிலீஸ் ஆகாது. தாணு பிரின்ட்டை நிறுத்திவிட்டார்’’ என்கிறார். கெளதம் மேனன் என்னிடம் வருகிறார். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். அவர் புரிந்துகொண்டார்.
இதற்கிடையே சுரேஷ் பாபு, வெங்கட்ராஜுவைக் கூப்பிட்டு, ‘’50 சதவிகிதம் பங்கு தருகிறேன் என உங்களை நம்பி படம் எடுக்கவந்தவர்களிடம் இப்படியா நடந்துகொள்வீர்கள்?’’ என வருத்தப்பட்டிருக்கிறார். உடனே வெங்கட்ராஜு என்னிடம் வந்து கணக்கு கொடுத்தார். ராம நாயுடுவின் மகன் எனக்குச் சேரவேண்டியதை வாங்கிக்கொடுத்ததில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. படம் ரிலீஸானது. தமிழைப் போலவே தெலுங்கிலும் மிகப்பெரிய ஹிட்.
ஆனால், படம் ரிலீஸானதும் விளம்பரங்களை வெங்கட்ராஜு நிறுத்திவிட்டார். நான் உடனடியாக என் அக்கவுன்ட்டில் இருந்து 20 லட்சம் ரூபாய் டிடி எடுத்து சுரேஷ் பாபுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸுக்கு அனுப்பி, ‘`சார்... ஏதோ வந்தோம், படம் பண்ணினோம், லாபம் சம்பாதிச்சிட்டுப் போயிட்டோம்னு ஆகிடக்கூடாது. என் தயாரிப்பு நிறுவனத்துக்குன்னு ஒரு பேர் இருக்கு. இந்தப்பணத்தை முதலா வெச்சிக்கிட்டு விளம்பரங்கள் பண்ணுங்க. கூடுதல் பணம் தேவைப்படும்போது அதையும் நான் அனுப்புறேன்’’ என்றேன்.
ஆனால், 20 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு என்னிடம் மேற்கொண்டு பணம் எதுவும் கேட்காமல் 100 நாள்வரை ‘கர்ஷனா’ படத்துக்கு விளம்பரம் செய்தார் சுரேஷ் பாபு. கெளதம் மேனனிடம் ‘அடுத்து இன்னொரு படம் இயக்கித்தரவேண்டும்’ என்கிற ஒப்பந்தமும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். எல்லோருக்கும் அந்தப்படத்தின் மூலம் நல்ல லாபம்தான் வந்தது.
இறுதியாக அந்தத் தெலுங்குத் தயாரிப்பாளர்களின் அலுவலகத்துக்குப் போய் அவர்களிடம் வருத்தமாகப் பேசிவிட்டு மனம் நொந்தபடி வெளியே வந்தேன். அடுத்த ஆண்டே அவர்கள் ‘சக்ரம்’ எனத் தெலுங்கில் ஒரு படம் எடுத்து, அதில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தார்கள். சினிமா என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தொழில். இதில் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் முன்னேறிய வரலாறே கிடையாது.
என்னுடைய பழக்கவழக்கங்கள், குணம் எல்லாம் வெங்கடேஷ் - சுரேஷ் பாபு குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்துவிட்டது. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து, அதில் விவேகானந்தராக வெங்கடேஷ் நடிக்கவேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இருந்தது. கமர்ஷியல் படம் இல்லை என்பதால் முதலில் சம்பளம் வாங்காமல் நடிப்பது எனவும், படம் வெற்றிபெற்று லாபம் அடைந்தால் சம்பளம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். தயாரிப்பாளர் யார் என்கிற கேள்வி வந்தபோது, அவர்களின் தேர்வாக நான் இருந்தேன். இருவரும் என்னைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னார்கள்.
1992-ல் ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்ததும் எனக்கு விருதுகள் மேல் ஒரு ஆர்வம் வந்தது. கமர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல் கலைப் படங்களும் எடுக்கவேண்டும் என விரும்பினேன். அப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து நிறைய கதைகள் சொன்னார். அப்படித்தான் நாசர் நடிக்க, இளையராஜா இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ‘முகம்’ என்கிற படத்தைத் தொடங்கினோம். ஆனால், படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கவில்லை. இது என்னைக் கவலைக்குள்ளாக்கியது. இதனால் ஞானராஜசேகரன் அடுத்து சொன்ன பாரதியார் வாழ்க்கை வரலாற்றுக் கதையைப் படமாக எடுக்க நான் மறுத்திருந்தேன். ஆனால், அவர் எடுத்த ‘பாரதி’ படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தேசிய விருது உட்பட பல விருதுகளை அந்தப்படம் வென்றது. இதனால் வெங்கடேஷ் - சுரேஷ் பாபு ‘விவேகானந்தர்’ பயோபிக் பற்றிச் சொன்னதும் எனக்கு ஞானராஜசேகரன் நினைவுக்கு வந்தார்.
அவரை அழைத்து விவரத்தைச் சொல்லி, அவரும் போய் வெங்கடேஷைப் பார்த்து ஆரம்பக்கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டோம். ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஞானராஜசேகரனுக்கு அப்போது வேலை மாற்றலாகி வேறு இடத்துக்குப் போகவேண்டிய சூழல் வந்துவிட்டது. இதனால் பட வேலைகள் நின்றுபோயின. இந்தப் படத்தை மீண்டும் வெங்கடேஷை வைத்து எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இன்னமும் அப்படியே இருக்கிறது.
‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தின்போது இயக்குநர் பாலுமகேந்திராவின் இணை இயக்குநராக இருந்தார் பாலா. எந்த நேரமும் வேலையிலேயே கவனமாக இருப்பார். ஓடி ஓடி உழைப்பார். என்னை அவர் கையாளும் விதமே மிகவும் அழகாக இருக்கும். அவரின் திறமைகளை நான் மிகவும் ரசிப்பேன். அப்போதே பாலாவிடம் ‘`நீங்க ஒரு கதை ரெடி பண்ணுங்க. நான் தயாரிக்கிறேன்’’ என்று சொல்லியிருந்தேன். ஆனால், அந்தச் சந்தர்ப்பம் சரியாக அமையவேயில்லை. என்னிடம் புரொடக்ஷன் மேனேஜராக இருந்த செல்வம்தான் முதன்முதலில் பாலா இயக்க, ‘சேது’ படத்தைத் தயாரித்தார். ஆனால், எதிர்பாராத சூழல்களால் செல்வம் விலக, பின்னர் வேறு ஒரு தயாரிப்பாளர் ‘சேது’ படத்தை எடுத்தார்.
இந்தச் சூழலில்தான் பாலா ஒரு நாள் என்னை வந்து சந்திக்கிறார். ‘`சூர்யாகிட்ட டேட் வாங்கியிருக்கேன் சார். ‘மாயாவி’ன்னு ஒரு படம் பண்றேன். இவ்ளோ பட்ஜெட். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எனக்குப் பண்ணித்தாங்க’’ என்கிறார். நானும் பணம் தருகிறேன். படம் நல்லபடியாக வருகிறது. ஆனால், பட ரிலீஸின்போது ‘பிதாமகன்’ தயாரிப்பாளர் இயக்குநர் பாலா மீது வழக்கு தொடுக்கிறார். அதனால் என் பெயரில் சென்சார் வாங்கி, படத்தை வெளியிட்டேன். ‘காக்க காக்க’ படம் போன்று மிகப்பெரிய வெற்றிபெறாவிட்டாலும் ‘மாயாவி’ எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தையே கொடுத்தது.
இதையடுத்து மீண்டும் சூர்யாவோடு ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தைத் தொடங்கினோம். ‘காக்க காக்க’ படத்தில் கெளதம் மேனனின் அசிஸ்ட்டென்ட்டாக இருந்த கிருஷ்ணா என்னிடம் வந்து கதைசொல்லி, அது எனக்குப் பிடித்துப்போக, அப்படித்தான் இந்தப்படம் தொடங்கியது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்த கதை, தயாரிப்பாளர் மாற்றங்கள், விஜய்யுடன் ‘சச்சின்’ படம்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்