
கலைப்புலி எஸ்.தாணு
நட்பும் நம்பிக்கையுமாக இருக்கும் மனிதர்களிடமிருந்து பிரிவது என்பது எல்லோருக்கும் வலி தருவது. அப்படி என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு முக்கியமான பிரிவுகளைப் பற்றி இந்த வாரம் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்று என் கலை வாழ்வில் நிகழ்ந்தது, மற்றொன்று அரசியல் வாழ்வில். இரண்டுமே என் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியமைத்தன. பல சிக்கல்களில் என்னைத் தள்ளின. கிட்டத்தட்ட என்னை பூஜ்ஜியத்துக்குக் கொண்டுபோய்விட்டன. மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு மீண்டேன். எப்படி?
‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’, ‘புதுப்பாடகன்’ என விஜயகாந்த்துடன் தொடர்ந்து மூன்று படங்கள். மூன்றாவது படம் நானே இயக்கி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, தயாரித்த படம். இந்தப் படத்தில் ராவுத்தர் என் தயாரிப்பு பார்ட்னர். படம் நூறு நாள் ஓடியது. ஆனால், விளம்பரங்களுக்கு அதிக செலவுகள் செய்ததால், கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.
‘புதுப்பாடகன்’ படம் எடுத்தபோது எனக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பும் அன்பும் உச்சத்துக்குப் போனது. என்னுடைய படங்கள் என்றில்லாமல், அவர் நடிக்கும் வெளிப் படங்கள், அவரின் சொந்தத் தயாரிப்புகள் என எல்லாப் படங்களின் விளம்பரங்களையும் ‘`தாணு சார்கிட்ட ஒருமுறை காட்டிடுங்க’’ என்பார். இந்த அன்பும் நெருக்கமும், அவருடன் இருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒருமுறை ‘‘உங்க டைரியை தாணு வாங்கிடுவார்போல’’ என ஒருவர் ராவுத்தரைக் கிண்டலடித்ததாகக்கூட எனக்குத் தகவல் வந்தது. ராவுத்தருக்கும் எனக்கும் இடையே பிரச்னைகளை ஏற்படுத்த ஒரு சிறு கூட்டம் சில வேலைகள் பார்க்க ஆரம்பித்தது.

இந்த நேரத்தில்தான் விஜயகாந்துக்கு முதல் மகன் பிரபாகரன் பிறந்தான். குழந்தையைப் பார்ப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்குப் போகிறேன். பெரிய கூட்டம். அந்த நேரத்தில் என் மனதுக்குள் இருந்த ஆதங்கத்தை பிஞ்சுக் குழந்தையோடு இருந்த பிரேமலதாவிடம் வெளிப்படுத்தினேன். ‘‘அம்மா, உன் புருஷன் பெரிய வள்ளல். நூறு பேருக்குக்கூட தினமும் சோறு போட்டுக்கிட்டே இருப்பார். அந்த வள்ளல் மாதிரி இந்தக் குழந்தையும் வளர்ந்து பெரிய ஆளாகி எல்லோருக்கும் சோறு போடணும். அப்படி வளரணும்னா வருஷத்துக்கு நாலு படம் பண்ணுனா, மூணு படம் ராவுத்தருக்குக் கொடுத்துடச் சொல்லு. ஒரு படத்துக்கான காசை நீ வாங்கி இந்தக் குழந்தையின் எதிர்காலத்துக்காக வெச்சிக்கோ’’ என்றேன். ‘‘என்ன அங்கிள், இப்படிச் சொல்றீங்க?’’ என்று பிரேமலதா கேட்டார். ‘‘சொல்றதைப் புரிஞ்சிக்கோம்மா’’ எனச் சொல்லிவிட்டு வந்தேன். அப்போது, அறைக்குள் இருந்த யார் மூலமாகவோ இந்த விஷயம் ராவுத்தரின் காதுகளுக்கும் போனது.
‘புதுப்பாடகன்’ முடிந்து, அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டிய நேரம். விஜயகாந்த் ஒரு ஷூட்டிங் கிளம்பிக்கொண்டிருக்கிறார். அவருடைய காஸ்ட்யூமர், எனக்கும் தெரிந்தவர்தான். அவர்தான் விஜயகாந்தை ஷூட்டிங் போக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயகாந்த்திடம் கால்ஷீட் டைரியை எடுத்துப் படிக்கிறார் ராவுத்தர். பல படங்களுக்குக் கொடுத்த தேதிகளைப் படித்துக்கொண்டே போகிறார். எல்லாத் தயாரிப்பாளர்களின் பெயர்களும் இருக்கின்றன. என் பெயர் மட்டும் இல்லை. ‘‘என்னடா, தாணு சார் பேரை விட்டுட்ட?’’ என விஜயகாந்த் கேட்டிருக்கிறார். உடனே ராவுத்தர் ‘‘அண்ணன் நம்மகிட்ட வந்து கேட்கட்டும் விஜி... நாமளே போய் எங்களை வெச்சுப் படம் பண்ணுங்கன்னு ஒவ்வொருமுறையும் கேட்கணுமா?’’ என்று சொல்லியிருக்கிறார். நடந்த விஷயத்தை அப்படியே அந்த காஸ்ட்யூமர் என்னிடம் சொல்லிவிட்டார். என் மனம் சங்கடப்பட்டது. என்னுடைய வருத்தமெல்லாம், ‘‘அவர் ஏன்டா வந்து கேட்கணும்... எப்பவும்போல நீ டேட் குடு’’ என்று ராவுத்தரிடம் விஜயகாந்த் சொல்லவில்லையே என்பதுதான். அதன்பிறகு விஜயகாந்த்திடம் நான் கால்ஷீட் கேட்கவில்லை. காரணம், என்னுடைய சுயமரியாதை.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக, பாக்யராஜ் அசிஸ்டென்ட்டாக இருந்த காலத்திலிருந்தே இயக்குநர் நடிகர் பார்த்திபனை எனக்குத் தெரியும். இந்தச் சூழலில்தான் ‘புதிய பாதை’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னார். கதை மிகவும் பிடித்திருந்ததால் விஜயகாந்த்திடம் சொல்ல நேரம் வாங்கிக் கொடுத்தேன். விஜயகாந்த்துக்கும் கதை பிடித்துவிட்டது. ‘`சார், கதை ரொம்ப நல்லாருக்கு. ஆனா, கதை, திரைக்கதை, வசனம் மட்டும் பார்த்திபனைப் பண்ணச்சொல்லுங்க. டைரக்ஷன் நாம வெளில கொடுத்து பண்ணிக்கலாம்’’ என்றார் விஜயகாந்த். இதைப் பார்த்திபனிடம் சொன்னேன். ‘`சார், இது என்னோட கதை, என்னோட கன்னி முயற்சி. நானே டைரக்ட் பண்ணுனாதான் நல்லாருக்கும்’’ என்கிறார். அதனால் அந்தப் படத்தை எங்களால் ஆரம்பிக்க முடியவில்லை. ஆனால், பார்த்திபன் ‘புதிய பாதை’ படத்தை அவரே நடிக்க, வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து பூஜைபோட்டபோது எங்களை அழைத்தார். விஜயகாந்த் கிளாப் அடிக்க, நான் கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்ய ‘புதிய பாதை’ தொடங்கியது.
அதன் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் என்னிடம் வந்து ‘‘அடுத்த படம் நாம சேர்ந்து பண்ணலாம்’’ என்றார். ‘‘விஜயகாந்த் வெளிலபோய் யார்கிட்டயும் கால்ஷீட் கேட்காதீங்கன்னு சொல்லியிருக்கார். வருஷத்துக்கு ஒரு படம் எனக்குப் பண்ணுவேன்னு வாக்கு கொடுத்திருக்கார், பார்த்திபன். அவர் சொன்னதை மீறி நான் உங்களோட படம் பண்ணுனா தப்பாகிடும்’’ என்றேன். அப்போது பார்த்திபன் ‘‘சார், ராவுத்தரே என்னை வெச்சு ‘தாலாட்டு பாட வா’ன்னு ஒரு படம் எடுக்குறார். அவர் எடுக்கும்போது நீங்களும் எடுக்கலாமே’’ என்றார். விஜயகாந்த்தை சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். ‘‘தாராளமா பண்ணுங்க சார்... இதுல என்ன தப்பிருக்கு’’ என்றார். அப்படித்தான் பார்த்திபனோடு ‘தையல்காரன்’ படத்தைத் தொடங்கினேன்.
1990-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி... முதலமைச்சர் கலைஞருக்கு 66-வது பிறந்தநாள். மிக பிரமாண்டமாக கலைஞரை வாழ்த்தி பல்வேறு பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கிறேன். ஒரு பக்கம் முழுக்க கலைஞரின் நூற்றுக்கணக்கான சின்னச்சின்னப் படங்கள் இருக்கும். நடுவில் மட்டும் கலைஞரின் முகம் பெரிதாக இருப்பதுபோல் டிசைன் செய்து, ‘கிஞ்சித்தும் இடம் இல்லை என் நெஞ்சில் நீயின்றி’ என என்னுடைய புனைபெயரான ‘அகம்’ எனப் போட்டு விளம்பரம் செய்தேன். அப்போதெல்லாம் காய்கறிச்செல்வன், அகம், நிழல்சலனக்கூத்தான், பிசிராந்தையார் என்று பல புனைபெயர்களில் விளம்பரங்கள் கொடுப்பேன். கலைஞருக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டும் அந்த விளம்பரங்கள் யாருடையவை என்பது தெரியும்.

பிறந்த நாள் அன்று மதியம் கலைஞரின் வீட்டில் விருந்து. என்னையும் அழைத்திருந்தார்கள். எனக்கு அப்போது ஒரு கெட்ட பழக்கம், நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்காமல் இருப்பது. அன்றும் தாமதமாகிவிட்டது. கலைஞர் சாப்பிட்டு முடித்துவிட்டார். உள்ளே போகிறேன். ஆலடி அருணாவுக்கும், வைகோவுக்கும் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க-வுக்குள் ஏதோ பிரச்னை. கலைஞர் இருவரிடமும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்.
‘‘சாப்பிடக் கூப்பிட்டா சாப்பிடுற நேரத்துக்கு வரணும்யா. எப்பவும் நேரத்தைக் கடைப்பிடிய்யா... போ, போய் சாப்பிட்டுட்டு வா’’ எனச் சொல்லி என்னை அனுப்பினார். கலைஞர் இப்படி என்னிடம் நேரடியாகச் சொன்ன பிறகு, எல்லா இடங்களிலும் சரியான நேரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டு கலைஞர் இருந்த அறைக்குள் போனேன். வைகோ கண்கலங்கியபடி கலைஞரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ஆலடி அருணாவுக்கும், வைகோவுக்கும் சமாதானம் பேசி அனுப்புகிறார் கலைஞர். நானும் அவர்களோடு படியில் இறங்குகிறேன். வைகோவை பல மேடைகளில் பார்த்திருந்தாலும், அவரை தனிப்பட்ட முறையில் அன்றுதான் நேரில் சந்திக்கிறேன்.
‘‘ ‘கிஞ்சித்தும் இடமில்லை என் நெஞ்சில் நீயின்றி’ அருமையான வாசகம்ணே. பிரமாதம்’’ என என்னைப் பாராட்டியவர், ‘‘இந்த மாசக் கடைசியில கலைஞர் திருநெல்வேலிக்கு வர்றார்ணே. அதுக்கு நீங்க கொஞ்சம் விளம்பரம் பண்ணிக்கொடுங்கண்ணே’’ என்றார் வைகோ. இப்படித்தான் எனக்கும் வைகோவுக்குமான முதல் சந்திப்பு நடந்தது. இந்த விழா விளம்பரங்கள் தொடர்பாக நானும் வைகோவும் அடிக்கடி சந்திக்கிறோம். ‘வையகம் தழைத்திட நாளும் உழைத்திடும் எங்கள் கலைஞரே... கோலாகலத்துடன் வரவேற்கும் நெல்லை மாவட்ட திமுக’ என டிசைன் தயார் செய்தேன். இதில் வையகத்தில் இருக்கும் ‘வை’யையும், கோலாகலத்தில் இருக்கும் ‘கோ’வையும் மட்டும் கொஞ்சம் போல்டாக்கி போஸ்டர் அடித்து திருநெல்வேலிக்குக் கொடுத்துவிட்டேன். நெல்லை முழுக்க போஸ்டர்கள் ஒட்டிவிட்டார்கள்.
‘வையகம் தழைத்திட நாளும் உழைத்திடும் எங்கள் கலைஞரே... கோலாகலத்துடன் வரவேற்கும் நெல்லை மாவட்ட திமுக’

அந்த போஸ்டர், கட்சிக்குள் பெரிய பிரச்னைகளைக் கிளப்பியது. ‘‘கலைஞருக்குள்ள வைகோவா... இதன் மூலமா என்ன சொல்ல வர்றாங்க’’ எனக் கட்சிக்காரர்களுக்குள் பிரச்னை கிளம்புகிறது. வைகோவை கூப்பிட்டு ‘‘என்னய்யா பிரச்னை?’’ என கலைஞர் கேட்கிறார். ‘‘தாணு அண்ணனை விளம்பரம் பண்ணித் தரச் சொன்னேன். அவர் இப்படிப் பண்ணிக் கொடுத்துட்டார். எனக்கு எதுவும் தெரியாதுண்ணே’’ என விளக்கம் தருகிறார் வைகோ. ‘‘ஓஹோ... அவன் அப்படித்தான்யா... விகல்பம் இல்லாமப்பண்ணுவான்... அவனுக்கு அரசியலெல்லாம் தெரியாது விடுய்யா’’ என கலைஞரும் சொல்லி அனுப்பிவிடுகிறார். வைகோ எனக்கு போன் அடித்தார். ‘‘இந்த விளம்பரத்தால லோக்கல்ல பிரச்னையாகிடுச்சுண்ணே. கலைஞர் கேட்டா நீங்கதான் பண்ணீங்கன்னு சொல்லிடுங்க’’ எனச் சொல்கிறார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எப்போது மாநாடு, கூட்டங்கள் நடந்தாலும் வைகோ என்னிடம் விளம்பரங்கள் செய்து தரச்சொல்லிக் கேட்பார். நானும் செய்து தருவேன். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்னோடு நெருங்குகிறார். நான் என்னை அறியாமலேயே, என்னைச் சுற்றி நடப்பது புரியாமலேயே கலைஞரிடமிருந்து விலக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அந்த நேரத்தில் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருந்தன. வைகோ என்னிடம் வந்து சில விஷயங்களைச் சொல்லி அழுவார். ‘‘கலைஞர் புகழ்பாடித்தாண்ணே வாழ்ந்துட்டு இருக்கேன். என்னை மூணு முறை எம்பியாக்கி யிருக்கார். என்னை வளர்த்தவர் அவர்தான். ஆனா, நான் மேடையில பேசிக்கூடாதுன்னு ஒவ்வொரு மாவட்டமா தடை போட்டா நான் எங்கண்ணே போறது’’ எனச் சொல்லி அழுகிறார்.
நான் போய் கலைஞரைச் சந்திக்கிறேன். என்ன விஷயமாக இருந்தாலும் நான் நேரடியாக, துடுக்காகப் பேசிவிடுவேன் என்பதால் கலைஞரும் அதை ரசிப்பார். அப்படித்தான் அன்றும் ‘‘தலைவரே, உங்கள் புகழ்பாடுறதாலதானே நாங்க வைகோவை மதிக்கிறோம். ரொம்ப அழுவுறாரு தலைவரே. அவரை மேடையில பேசக்கூடாதுன்னு சொல்றாங்களாம். கட்சிக்காரங்ககிட்ட நீங்க சொல்லக்கூடாதா?’’ என்கிறேன். ‘‘ஆமாய்யா... அவர் நேர்ல பார்த்தா கண்ணீர் விட்டு அழுவார். ஆனா, பின்னாடி கழுத்துக்குக் கத்தி வெப்பார்’’ எனச் சொன்னார்.
இப்படி கலைஞர் தனிப்பட்ட முறையில் என்னிடம் சொன்னது, அடுத்தநாள் ஒரு பிரபல செய்தித்தாளில் பிரசுரமாகிவிட்டது. திமுக-வின் ஆயிரம் விளக்கு உசேனிடம் இருந்து எனக்கு போன் வருகிறது. ‘‘தாணு, கலைஞர் உன்னை உடனே கோபாலபுரம் வீட்டுக்கு வரச்சொல்றார்’’ என்கிறார். நானும் அந்தச் செய்தியைப் படித்துவிட்டேன். ‘யார் சொல்லியிருப்பார்கள்’ என அந்தப் பத்திரிகையின் முக்கிய நிருபருக்கு போன் செய்து கேஷுவலாக விசாரித்தேன். ‘‘உங்க வைகோதான் சார் சொன்னாரு’’ என்றார். கலைஞர் என்னிடம் சொன்னதை நான் வைகோ உட்பட நான்கைந்து பேரிடம் சொல்லியிருந்தேன். நான் எப்போது கலைஞரை சந்தித்துவிட்டு வந்தாலும், அந்த உரையாடல்கள் பற்றி எனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையாகப் பேசுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் இந்த விஷயத்தைச் சொல்லியிருந்தேன்.
கோபாலபுரம் வீட்டுக்குள் போகிறேன். ‘‘யோவ்... நாம ரெண்டு பேர் பேசினது எப்படிய்யா பத்திரிகைல செய்தியா வந்தது’’ என்று கலைஞர் கேட்டார். ‘‘தலைவரே... உங்ககிட்ட எப்ப பேசிட்டு வெளில வந்தாலும் நாலுபேர்கிட்ட சொல்றது என் வழக்கம். இந்த விஷயத்தைக்கூட ஆற்காட்டார் தம்பி தேவராஜ்கிட்ட சொன்னேன். வைகோகிட்ட சொன்னேன். இன்னும் இரண்டு பேர்கிட்டகூட சொன்னேன். அவங்க யாரோ சொல்லியிருப்பாங்கபோல’’ என்றேன். கலைஞர், ‘‘அப்படியெல்லாம் சொல்லாத. இதையெல்லாம் அரசியல் பண்ணிடுவாங்கய்யா’’ என்றார். ‘‘இனி இப்படிப் பண்ணமாட்டேன் தலைவரே’’ எனச் சொல்லிட்டு வந்தேன்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கோயம்புத்தூரில் ஒரு மாநாடு நடக்கிறது. மாநாட்டு அரங்குகளில் வைகோ எழுதிய ‘போர்க்களத்தில்’ புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. வைகோ கேட்டதால், அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தை ஒரு பிரபல டிசைனரை வைத்து செய்துகொடுத்தேன். அந்தப் புத்தகத்தின் முன்பக்கத்தில் வைகோ, ‘உற்றுழி உதவிடும் அண்ணன் தாணு அவர்களுக்கு நன்றி’ என்று போட்டிருந்தார். இது தலைமையின் பார்வைக்குப் போகிறது. ‘‘தாணு அடிக்கடி வைகோவோட தொடர்புல இருக்கார்’’ என்கிற பேச்சுகள் பரவுகின்றன.
பிரச்னைகள் இன்னும் அடுத்த கட்டத்துக்குப் போகின்றன. ‘குடவாசல் கூட்டத்துக்கு வைகோ போகிறார். வழியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இந்தக் கூட்டத்துக்குப் போகும் வைகோவை உடனிருந்து அனுப்பியவர்கள்’’ என ஒரு மாலை நாளிதழில் செய்தி வெளியாகிறது. அந்த உடனிருந்து அனுப்பியவர்கள் பட்டியலில் ‘கலைப்புலி தாணு’ என என்னுடைய பெயரும் இருக்கிறது. அப்போது கலைஞர் பழனியில் இருக்கிறார். அருகில் இருந்த ஆற்காட்டார் செய்தியைப் பார்த்ததுமே எனக்கு போன் அடிக்கிறார். ‘‘யோவ், வழியனுப்ப நீயும் போனியா’’ எனக் கேட்கிறார். ‘‘நான் வைகோவை சந்திக்கவேயில்ல. தப்பா போட்டிருக்காங்க’’ என்கிறேன். ‘‘பின்ன எப்படியா பேப்பர்ல செய்தி போடுறாங்க’’ என்றார் அவர். உடனே அந்தப் பத்திரிகையில் விசாரித்தேன். ‘வைகோதான் அப்படிச் செய்தி சொல்லியிருக்கிறார்’ என்ற தகவல் கிடைத்தது.
கர்ணனின் கவச குண்டலத்தை எடுத்ததுபோல, என்னைக் கலைஞரிடமிருந்து பிரிக்க ஒவ்வொன்றாக எடுத்துக் கோக்கிறார்கள். நெல்லை மாவட்ட தி.மு.க போஸ்டர், கலைஞர் என்னிடம் சொன்னதைப் பத்திரிகைக்குச் சொல்லிச் செய்தியாக்கியது, ‘போர்க்களம்’ புத்தகத்தில் என் பெயரைப் போட்டது, நான் போகாத வழியனுப்புதலுக்கு நான் போனதுபோலச் செய்தியாக்கியது என என்னைக் கலைஞரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்தனர் வைகோவும், அவருடன் இருந்தவர்களும்.
குடவாசல் கூட்டத்துக்குப் பிறகு பிரச்னை உச்சத்துக்குப் போய்விட்டது. ‘வைகோவால் கலைஞர் உயிருக்கு ஆபத்து’ எனத் தகவல் பரவியதும் ‘என்னால் கலைஞரின் உயிருக்குப் பிரச்னையா... என் தலையில் இடி விழுந்தது’ என அறிக்கை கொடுத்துவிட்டு வைகோ தலைமறைவாகிறார். வைகோவைத் தேடுகிறார்கள். நான் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். பாரதிராஜா என்னை அபிபுல்லா சாலையில் இருக்கும் எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார். உள்ளே போகிறேன், அங்கே வைரமுத்துவும் இருக்கிறார். இரண்டு பேரும் என்னிடம் பேசுகிறார்கள். ‘‘தாணு, பிரச்னை பெருசாகிட்டே போகுது. நாம எல்லோரும் வேடிக்கை பார்க்குறோம்னு சொல்றாங்க. இதை வளரவிடக்கூடாது, நாம ரெண்டு பேரையும் சேர்த்துவைப்போம். வைகோ எங்க இருக்கார்னு சொல்லுங்க. நாம போய் அவரைச் சந்திப்போம்’’ என்கிறார்கள். நான் வைகோ தலைமறைவாக இருந்த வீட்டுக்கு போன் அடிக்கிறேன்.
பாரதிராஜா, வைரமுத்து, வைகோ என நாங்கள் நால்வரும் என்ன பேசினோம், கலைஞரிடம் போய் சொன்னது என்ன, அங்கே அழகிரி என்னிடம் எப்படி நடந்துகொண்டார், கோபாலபுரத்திலிருந்து நான் ஏன் வெளியேறினேன், வைகோ எனக்குச் செய்த உதவிகள் என்ன... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!
- வெளியிடுவோம்...