Published:Updated:

``ஒரு ஒழுங்கே இல்லாம வியாபாரம் நடந்திட்டிருக்கு!''- `சர்வர் சுந்தரம்' சர்ச்சை குறித்து ஆனந்த் பால்கி

இயக்குநர் ஆனந்த் பால்கி
இயக்குநர் ஆனந்த் பால்கி

`சர்வர் சுந்தரம்’ படத்தின் பிரச்னை என்ன, என்ன நடந்தது எனப் பல விஷயங்களை இயக்குநர் ஆனந்த் பால்கியிடம் கேட்டோம்.

சந்தானம் நடித்த `சர்வர் சுந்தரம்’, பல போராட்டங்களுக்குப் பிறகு ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரச்னை என்ன, இதற்குப் பின்னால் என்ன நடந்தது எனப் பல விஷயங்களை இயக்குநர் ஆனந்த் பால்கியிடம் கேட்டோம்.

ஆமாம் அவர் அவ்ளோ பெரிய அப்பாடக்கர்தான்! - சந்தானம் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

படத்தோட ரிலீஸ் தள்ளிப் போயிட்டே இருந்தனால, படத்தை ஆடியன்ஸ் எப்படிப் பார்ப்பாங்கனு பயமா இருக்கா?

சர்வர் சுந்தரம்
சர்வர் சுந்தரம்

``என் படம் பிரியாணி மாதிரி. பிரியாணியை எப்போ சாப்பிட்டாலும் பிடிக்கும். அதே மாதிரிதான் இந்தப் படமும். எந்தப் பிரச்னையும் இல்லாம பிளான் பண்ண மாதிரியே 2017-ல் படம் ரிலீஸாயிருந்தாலும் `சர்வர் சுந்தரம்' ஆடியன்ஸுக்குப் பிடிச்சிருக்கும். இப்போ 2020 ஜனவரி 31-ம் தேதி ரிலீஸானாலும் கண்டிப்பா ரசிகர்களுக்குப் பிடிக்கும். ஏன்னா, `சர்வர் சுந்தரம்’ மாதிரியான ஒரு ஜானர் படம், இதுவரைக்கும் இந்திய சினிமாவுலே வந்ததில்லை. நான் ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்டூடன்ட் ப்ளஸ் சினிமா வெறியன். இந்த ரெண்டையும் சேர்த்து, ஒரு படம் பண்ணலாம்னு யோசிச்சு, மொத்த ஸ்க்ரிப்ட்டையும் எழுதவே ஒரு வருஷம் ஆகிடுச்சு. ஒரு மனுஷன் உயிர் வாழத் தேவையான முதல் விஷயம் மூச்சு. அதுக்கு அடுத்தது சாப்பாடுதானே. அதனால, சாப்பாட்டைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறனால, ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்கிற நம்பிக்கை இருக்கு.’’

படம் ஏன் ரிலீஸ் ஆகலைங்கிற கேள்வியை எப்படி எதிர்கொண்டீங்க?

"சிம்பிள். யாருக்கும் பதில் சொல்லலை. ஏன்னா, கேள்வி கேட்கிறதுக்கு ஒரு முடிவே இல்லை. ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டு அதுக்கு நாம் பதில் சொல்லிட்டா, அடுத்த கேள்வி கேட்பாங்க. இப்படி எத்தனை கேள்வி வேணாலும் கேட்டுக்கிட்டே போகலாம். அதுனாலதான் யாருக்கும் நான் பதில் சொல்லலை. ஆனால், சந்தானத்தோட ஃபேன்ஸ் பல பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. சில பேர் அழக்கூட செஞ்சாங்க. `என்னணா, டிரெய்லரை மட்டும் ரிலீஸ் பண்ணிட்டு இவ்வளவு நாள் படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கீங்க’னு கேட்டாங்க. அவங்ககிட்ட மட்டும் என்ன பிரச்னைனு எடுத்துச் சொல்வேன்.’’

சந்தானம் மட்டுமில்ல... ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் பரத் வரை இந்த லிஸ்ட்ல இருக்காங்க!

படம் ரிலீஸாவதற்கு சந்தானம் எந்தளவுக்கு சப்போர்ட் பண்ணினார்?

"இந்தப் படத்தோட கதையை முதலில் சந்தானம் சார்கிட்டதான் சொன்னேன். அவர்தான் தயாரிப்பாளரை ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். அதுக்கப்புறம்தான் இந்தப் படம் அடுத்தடுத்த லெவலுக்கு போச்சு. அவரோட உதவியாலதான் என் ஸ்கிரிப்ட் இப்போ படமா மாறியிருக்கு. ஒரு ஹீரோவா இந்தப் படத்துகான எல்லா உதவியையும் அவர் பண்ணிக் கொடுத்தார். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல. அது உதவி பண்றதுலையும் இருக்கு. அவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம் வெச்சிருக்கார்; அவரை நம்பி நிறைய பேர் இருக்காங்க; அடுத்தடுத்து படங்கள் பண்றார்னு அவருக்கும் பல வேலைகள் இருக்கு. ஒரு கட்டத்துக்கு மேல இந்தப் படத்துல இவ்வளவு பிரச்னைகள் இருக்குனு அவருக்கும் தெரிஞ்சுடுச்சு. அதுக்குமேல எல்லாத்துக்கும் நான் அவர்கிட்டபோய் நிற்க முடியாது. அதனால நானே எல்லா பிரச்னைகளையும் ஃபேஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இந்த ரெண்டு வருஷத்துல பல பிரச்னைகள். அதுனால எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்துச்சிங்கிறது ஒரு பக்கம். இதனால நான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்னு சொல்லலாம். ஒரு வேளை, `சர்வர் சுந்தரம்’ பிளான் பண்ண மாதிரி ரிலீஸ் ஆகி, பெரிய ஹிட்டாகியிருந்தா அந்த வெற்றியை நான் தலைக்கு ஏத்தியிருக்கலாம். ஆனா, இப்போ என் மைண்ட் டோட்டலா மாறியிருக்கு. இந்த அனுபவத்தை எல்லாம் வந்த பிரச்னைகள் மூலம் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கார்னு நினைக்கிறேன்.’’

அப்படி என்னதான் பிரச்னை?

`` `சர்வர் சுந்தரம்’ படத்துக்கு இருந்த மிகப் பெரிய பிரச்னை, அதுல பிரச்னையே இல்லாததுதான். இப்படி நான் சொல்றது உங்களுக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும்னு எனக்குப் புரியுது. ஆனா, உண்மையாவே இந்தப் படத்துல எந்தப் பிரச்னையும் இல்லை. இதை விநியோகம் பண்றதுக்காக ஒரு கம்பெனிகிட்ட கொடுத்தோம். அவங்க எல்லா ஊர்களிலும் இருந்த விநியோகஸ்தர்களுக்குப் படத்தைக் கொடுத்தாங்க. அதுல சிலர், அவங்களோட சொந்தப் பிரச்னைக்காக எங்களுடைய படத்தை அடகு வெச்சிட்டாங்க. அடகு வாங்கினவங்ககிட்ட, `அது எங்களுடைய படம். அதைக் கொடுங்க’னு கேட்டா, `காசு கொடுத்துட்டு வாங்கிட்டுப் போங்க’னு சொல்றாங்க. அவங்க சைடுல இருந்து பார்த்தா, அவங்க கேட்குறதும் நியாயம்தான். அதுக்கப்பறம் ஃபெப்சி சிவா சார் தலையிட்டு இந்தப் பிரச்னையை முடிச்சி வெச்சிருக்கார். நான் சினிமாவுக்குப் புதுசுதான். ஆனா, 15 வருஷமா பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். அதை வெச்சு சொல்றேன்... சினிமா ஒரு மிகப் பெரிய வியாபாரம். அதைச் சரியா பண்ணா ரொம்பவே சிறப்பா பண்ணலாம். ஆனா, இங்க ஒரு ஒழுங்கே இல்லாம வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க.’’

நாகேஷ் நடிச்ச `சர்வர் சுந்தரம்’ படத்துக்கும் இந்தப் படத்துக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கு?

பிஜேஸ்
பிஜேஸ்

``படத்தோட பெயரைத் தவிர பெருசா எந்த ஒற்றுமையும் இருக்காது. அதேமாதிரி, நாகேஷ் சாரோட பேரன் பிஜேஸ் இதுல நடிச்சிருக்கார். இந்தப் படத்தில் நாகேஷ் சார் மாதிரி ஒரு கேரக்டர் தேவைப்பட்டுச்சு. ரெண்டு மாசமா இந்த கேரக்டருக்கான ஆளை தேடிட்டு இருந்தோம். ஒரு நாள், நாகேஷ் சாரோட பையன் ஆனந்த் பாபு அண்ணாவுக்கு கால் பண்ணி, `உங்களை மீட் பண்ணணும் வீட்டுக்கு வர்றேன்’னு சொன்னேன். அவர்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், அவரோட பையன் பிஜேஸைக் கூப்பிட்டார். பிஜேஸ் நடந்து வரும்போது, என் கேரக்டரே நடந்து வர மாதிரி இருந்துச்சு. அவருக்குள்ள நாகேஷ் சாரோட பாடி லாங்குவேஜும் இருந்துச்சு. `நீதான் என் படத்துல நடிக்கிற’னு சொல்லிட்டு வந்துட்டேன். படத்துலேயும் அந்த கேரக்டருக்கான நியாயத்தைச் சேர்த்திருக்கார்.’’

"எனக்குள்ளேயும் வடிவேலு, சூரி, சந்தானம் எல்லாரும் இருக்காங்க!" - மனம் திறக்கும் ராஜ்கிரண்
பின் செல்ல