நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி நிற பிகினி உடை சர்ச்சையைக் கிளப்பி பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஆனால் தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் மும்பையில் கொண்டாடியுள்ளனர்.

அதில் கலந்துக்கொண்ட ஷாருக்கான் படத்தின் வெற்றி குறித்து பேசும்போது, “ ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்ததற்கு நன்றி. கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அந்த சமயத்தில் என் குடும்பத்துடனும், நண்பர்களுடனும்தான் நேரத்தை செலவிட்டேன். படங்களின் தோல்வியால் நான் வேறு தொழிலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ரெஸ்டாரன்ட் தொடங்கும் எண்ணத்தோடு சமையல் கூட கற்றுக்கொண்டேன்.
ஆனால் பதான் படம் எனக்கு சினிமாவில் மீண்டும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக அன்புடனும், சரியான நோக்கத்துடனும்தான் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினோம். நான் தோல்வியடைந்த சமயங்களிலும் என்னை நேசிக்க மில்லியன் கணக்கானோர் இருந்தது எனக்குக் கிடைத்த அதிஷ்டம். அதனால்தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி சோகமாக இருந்தாலும் சரி ரசிகர்களைச் சந்திப்பேன்" என்று ஷாருக்கான் பேசினார்