Published:Updated:

`நீட் கோச்சிங், மொபைல் தண்ணியில விழுந்துடுச்சு!- மகள் குறித்த சர்ச்சைக்கு அனிதா-குப்புசாமி விளக்கம்

அனிதா குப்புசாமி
அனிதா குப்புசாமி

இன்று புகார் தரப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் நேற்றே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அபியூசர்' எனக் குறிப்பிட்டு ஒரு தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டிருந்திருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதியின் மகளைக் காணவில்லை எனப் பரவும் தகவல் பரபரப்பைப் கிளப்பியுள்ளது.

இந்தத் தம்பதியின் மூத்த மகள் பல்லவி. மருத்துவப் படிப்பு முடித்துள்ளார். இவரைக் காணவில்லை எனக் குப்புசாமி தரப்பிலிருந்து சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டதாகவும், போலீஸ் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

'வீட்டில் சகோதரியுடன் சண்டை போட்டுக்கொண்டு கோபத்தில் வெளியேறிய பல்லவி வீடு திரும்பவில்லை' எனப் புகாரில் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில், மேற்படி விஷயத்தின் உண்மை நிலவரம் குறித்துத் தெரிந்துகொள்ள முதலில் அனிதா குப்புசாமியிடம் பேசினேன்.

''யார் இப்படிக் கிளப்பி விடறாங்கன்னே தெரியலையே, காலையிலதான் நீட் கோச்சிங் போறேன்'னு கிளம்பிப் போயிருக்கா" என்றார் அனிதா.

அனிதா இப்படிச் சொல்கிற அதே நேரம், புஷ்பவனம் குப்புசாமியின் பேச்சோ இதிலிருந்து முரண்படுகிறது.

அனிதா
அனிதா

''பொண்ணு ஃபிரெண்ட் வீட்டுக்குப் போறதா சொல்லிவிட்டுப் போயிருக்காங்க. வழியில மொபைல் தண்ணியில விழுந்திடுச்சு. அதனால தொடர்புகொள்ள முடியாம அவங்கம்மாவுக்குப் பதட்டமாகிடுச்சு. இப்ப எல்லாம் சரியாகிடுச்சு. வந்திடுவாங்க' என்றவர், தான் காவல் நிலையைத்தில் புகாரே தரவில்லை என மறுக்கிறார்.

அம்மா 'நீட் கோச்சிங் போயிருப்பதாகச் சொல்ல, அப்பாவோ மொபைல் தண்ணீருக்குள் விழுந்துவிட்டதாகச் சொல்கிறார். இன்று புகார் தரப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் நேற்றே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அபியூசர்' எனக் குறிப்பிட்டு ஒரு தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டிருந்திருக்கிறார். தற்போது அந்தப் பதிவை நீக்கிவிட்டு 'வதந்திகள் பரவுகிறது' நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு