`சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்பேன்!' - ஹரிஷ் ராகவேந்திரா பாடிய இந்தப் பாடலைக் கேட்ட பலரும் சொல்வார்கள், `சர்க்கரை நிலவாக மனதைக் கரைக்கும் குரல் இதுவென்று'. இந்த வசீகரக்குரல், நம் 'கனா காணும் காலங்களை' கண்முன் நிறுத்தும்; `ஆகாயச் சூரியனை'ப்போல உள்ளத்தில் ஊடுருவும்; `அழகிய தீயாக' நெஞ்சை வாட்டும்; `மிகமிக ரகசியமானது காதல்' எனும் பேருண்மையை உணர்த்தும். குரல் வழியே நம் வாழ்வியலுக்கான உணர்வுகளைக் கடத்தும் மாயக்குரலோன் ஹரிஷ் ராகவேந்திராவிடம் உரையாடினோம்.

திருப்புமுனை வாய்ப்பு
``மியூசிக் ஃபீல்டுக்கு வந்த புதுசுல, 'இளையராஜா சாருக்கு ரெண்டு வரிகளாச்சும் பாடிடணும்'ங்கிறது என் கனவா இருந்துச்சு. பல மாதங்கள் காத்திருப்புக்கு அப்புறமா, வாய்ஸ் டெஸ்ட்டுக்காக அவர்கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. முதன்முறையா அவரைப் பார்த்த பிரமிப்புலயும் நடுக்கத்துலயும் அந்த வாய்ஸ் டெஸ்ட்டுல சரியா பாடினேனா இல்லையானுகூட எனக்குத் தெரியலை. 'நான் சொல்லியனுப்புறேன்'னு ராஜா சார் சொல்லிட்டார்.
நல்ல வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சே... இவர் மறுபடியும் கூப்பிட வாய்ப்பில்லைனுதான் நினைச்சேன். நாலு மாசங்களுக்குப் பின்னர் அவர்கிட்டேருந்து மறுபடியும் அழைப்பு வந்துச்சு. சில தொழில்நுட்பக் கோளாறுகளால அன்னிக்கும் ரெக்கார்டிங் சரியா நடக்கலை. ரெண்டாவது முறையும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன். மறுபடியும் சில மாசங்கள் கழிச்சு அவர்கிட்டேருந்து அழைப்பு வந்து, எல்லாம் சுமூகமா நடக்க, `பாரதி' படத்துல வரும் 'நிற்பதுவே நடப்பதுவே' பாடல் ரெக்கார்டிங் சிறப்பா முடிஞ்சது."
கனா காலம்
``காலேஜ் படிச்சுகிட்டிருந்தபோதும், காலேஜ் முடிச்சுட்டு வாய்ப்பு தேடி சில வருஷங்கள் மெனக்கெட்டு அலைஞ்ச தருணமும்தான், என் வாழ்க்கையில மறக்க முடியாத 'கனா காலம்'. அப்போ, 'தெளிவும் அறியாது முடிவும் தெரியாது' எதிர்காலம் பத்தின இனம் புரியா மயக்கத்துடன் சுத்திட்டிருந்தேன்.
'சினிமால அவமானப்படலைனா பெரிய வெற்றிகள் கிடைக்காது'னு நடிகர் கவுண்டமணி சார் பல இடங்கள்ல சொல்லியிருப்பார். அதுபோன்ற அனுபவங்களை வாய்ப்பு தேடிய காலகட்டத்துல நானும் எதிர்கொண்டேன். அந்த நேரத்துல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரும் நானும் பல இடங்கள்ல ஒண்ணாவே வாய்ப்பு கேட்டு அலைஞ்சோம். பின்னாள்ல அவர் எழுதிய நிறைய பாடல்கள் எனக்கு வெற்றியைக் கொடுத்துச்சு."

மெலடி ஹிட்ஸ்
``காலம் எவ்ளோதான் வேகமாவும் நவீனமாவும் மாறினாலும் மெலடி பாடல்கள் என்றென்றும் நிலைச்சு நிற்கும். அந்த வகையில நிறைய மெலடி ஹிட்ஸ் பாடியதுல எனக்கு அளவு கடந்த சந்தோஷம். இன்றைய காலத்துல துள்ளலான பாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறதால, அந்த மாதிரியான பாடல்களை சினிமால பாடினா, அது மூலமா சில கச்சேரிகள்ல கூடுதலா பாடலாம். ஓரளவுக்கு வருமானமும் பார்க்கலாம். துள்ளலான பாடல்களைப் பாடவும் எனக்கு விருப்பம்தான். ஆனா, என் குரலுக்கு அந்தப் பாடல்கள் சரியா வராதுனு நினைச்சு வாய்ப்புகள் கொடுக்கத் தயங்கிறாங்க. இருந்தாலும், கிடைச்ச வாய்ப்புகளும் எனக்கு நிறைவைக் கொடுத்திருக்கு."
மயக்கிய குரல்
``எல்லாப் பாடகர்களையும் எனக்குப் பிடிக்கும். ஆனாலும், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாரின் குரலுக்கு வெறி கொண்ட பக்தன் நான். இந்தக் காலத்துல என்னை ரொம்பவே கவர்ந்த குரல் ஸ்ரேயா கோஷலுடையது. பல மொழிகள்லயும் அந்தந்த மொழியைச் சார்ந்தவர்போலவே பாடுற அவரின் திறமையும் குரல்வளமும் அசாத்தியமானது. ராட்சச திறமைசாலி அவர்."

வார்த்தை உச்சரிப்பு
``தமிழ் மொழி மேல அலாதியான பற்று கொண்டிருப்பதால, இயல்பாவே எனக்குத் தமிழ் உச்சரிப்பு ஓரளவுக்கு நல்லா வரும். இதுக்காக தனிப்பட்ட பயிற்சினு எதுவும் எடுத்துக்கிறதில்லை. பாடல் வரிகளுக்கு ஏற்ப கொஞ்சம் கவனம் கொடுத்து உச்சரிப்பேன். அவ்ளோதான்.
ஒருமுறை ஓர் உணவகத்துக்குப் போனப்போ, அதிலிருந்து வெளியே வந்தார் முன்னோடி பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் ஐயா. அவர்கிட்ட ஆசி வாங்கினேன். 'நீ பாடுறப்போ தமிழ் உச்சரிப்பு நல்லாயிருக்குப்பா'னு அவர் சொன்னப்போ, வசிஷ்டரே பாராட்டியதுபோல பெருமிதமா இருந்துச்சு."
வாழ்க்கை
``வாழ்க்கைங்கிறது வெள்ளை நிறத்திலான திரை மாதிரி. அதுல தனக்கான வெளிச்சத்தையோ அல்லது வண்ணத்தையோ பாய்ச்சி உரிய வடிவம் கொடுக்க வேண்டியது அவரவர் பொறுப்பு. இந்த விதத்துல எனக்கான வெளிச்சம்தான் இசைத்துறை. 'நாமும் சினிமால பாடுவோமா?'னு கனவு கண்டது நிறைவேறி, 'நானும் ரவுடிதான்'னு இப்பவரைக்கும் களத்துல எனக்கும் இடம் கிடைச்சிருக்கிறது வியப்பா இருக்கு.
சினிமால புகழ்பெறுவதும், கிடைச்ச புகழைத் தக்க வெச்சுக்கிறதும் சுகமான சுமைதான். ‘பவுன்ஸான செக்கையெல்லாம் சேமிச்சு வைக்க, நான் ஒரு தனி வீடுதான் வாங்கணும்’னு ஆச்சி மனோரமா விளையாட்டா சொல்லியிருக்காங்க. அதுபோல என்கிட்டயும் செல்லாமல் போன செக் நிறைய இருக்கு. கலைஞர்களுக்கு இதுமாதிரியான ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாததா மாறிப்போன நிலை சரியானா, பலரின் வாழ்க்கையிலயும் பொருளாதார சிரமங்கள் குறையும்.

வாழ்க்கையில வேதனைகள் நிறைய வரும். அதுபோன்ற நேரத்துல தடுமாறி நின்னுட்டாலும், வலிகளை மறக்கத் தவறான பழக்க வழக்கங்களைக் கையாண்டாலும் வாழ்க்கை தடம் மாறிடும். அதுக்கு இடம் கொடுக்காம, வடிவேலு சார் சொல்ற மாதிரி ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா'னு காமெடியா சொல்ற மாதிரி இலக்கை அடைய வேறு ஒரு ரூட்டைப் பிடிச்சு வேகமா ஓடணும். அப்படித்தான் இப்பவரைக்கும் ஓடிகிட்டே இருக்கேன், நகைச்சுவை உணர்வு குறையாம! ரொம்ப முக்கியமான விஷயம், எந்த ஆதங்கமும் இல்லாம வாழ்க்கையில சந்தோஷமா ஓடிகிட்டிருக்கேன்!"
அவள் விகடனில் வெளியான ஹரிஷ் ராகவேந்திராவின் விரிவான பேட்டியைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.