சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஏழ்மையில் பிறந்தது எனதுஇசை!

பாடகர் முருகவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
பாடகர் முருகவேல்

அக்காக்களைப் பற்றிப் பேசும்போது மகிழ்ச்சியில் மலர்கிறது முருகவேலின் முகம்.

“ஜோக்கர் படத்துல வர்ற ‘ஓல ஓலக் குடிசையில’ பாட்டைப் பாடி முடிச்சதும் ‘ரொம்ப லயிச்சுப் பாடுனீங்க முருகவேல்’ன்னு ராஜுமுருகன் சார் பாராட்டினார். அதுல உண்மையிருக்கு சார்... என் வாழ்க்கையும் நான் கடந்துவந்த வறுமையும் அப்படியே அந்தப் பாட்டுல இருக்கு. இப்பவும் அந்தப் பாட்டைக் கடக்கும்போது என் அம்மா முகம்தான் வந்துபோகும்... மழை வந்தா ஒழுகாத ஒரு நல்ல வீட்டுல வாழணும்ங்கிற கனவு சமீபத்துலதான் எங்களுக்கு நிறைவேறியிருக்கு...” - முருகவேலின் வார்த்தைகளில் அவ்வளவு நெகிழ்ச்சி!

முருகவேல், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகவியல் துறையில் ஆசிரியராக இருக்கிறார். நான்கு அக்காக்களோடு பிறந்தவர். அப்பா, ஒரு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளி. துயரங்களும் சோகங்களும் சூழ்ந்த வறுமை வாழ்க்கையைக் கடந்து, மேடேறிய முதல் தலைமுறைப் படிப்பாளி. இடதுசாரி மேடைகளில் ஒலித்த குரல் அடையாளம் தர, சினிமா சுவீகரித்துக்கொண்டிருக்கிறது. இப்போது ‘நெட்ஃபிளிக்ஸி’ல் வெளியான ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜியில் சுதா கொங்கரா போர்ஷனில் பாடிய ‘தங்கமே தங்கமே’ பாடல் முருகவேலைத் தேடவைத்திருக்கிறது. பல்கலைக்கழகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கையொட்டிய ஆலமர நிழலில், முருகவேலைச் சந்தித்தேன்.

பாடகர் முருகவேல்
பாடகர் முருகவேல்

“இதுதான் பாதைன்னு வழிகாட்ட ஆளில்லாம கண்பட்ட திசையில ஓடிக்கிட்டிருந்தவன் நான். கடலூர்ப் பக்கத்துல வில்வநகர்தான் எங்க ஊரு. அப்பா பக்கிரி, நான் அஞ்சாவது படிக்கும்போதே இறந்துட்டார். அதுக்கப்புறம் அவர் பார்த்த துப்புரவு வேலை அம்மாவுக்குக் கிடைச்சுச்சு. அதை வெச்சுத்தான் அம்மா என்னையும் நாலு அக்காக்களையும் வளர்த்தெடுத்துச்சு. ரெண்டு வேளை சோறு, ஒரு வேளை தண்ணின்னுதான் வளர்ந்தோம். அக்காக்களோட படிப்பெல்லாம் ஏழு, எட்டுல முடிவுக்கு வந்திருச்சு. நான் மட்டும் தட்டுத்தடுமாறி படிச்செழுந்தேன்.

அப்பல்லாம் எங்களுக்கிருந்த ஒரே சந்தோஷம், எங்க மூத்த அக்கா விஜயாவோட பாட்டுதான். நல்ல குரல் வளம் அக்காவுக்கு. ரேடியோவுல எல்லாம் பாடியிருக்கு. ஆனா, அந்தத் திறமையை வளர்த்துக்கிற வாய்ப்பு அக்காவுக்குக் கிடைக்கலை. வீடு, வேலைன்னே கரைஞ்சுபோச்சு. வரிசையா பொம்பளப் புள்ளைக இருந்ததால சீக்கிரமே அக்காவுக்குக் கல்யாணத்தையும் பண்ணி வச்சிட்டாங்க. அக்காகிட்ட இருந்து எனக்குக் கிடைச்சதுதான் இந்தப் பாட்டு...”

அக்காக்களைப் பற்றிப் பேசும்போது மகிழ்ச்சியில் மலர்கிறது முருகவேலின் முகம்.

குடும்பத்துடன் பாடகர் முருகவேல்
குடும்பத்துடன் பாடகர் முருகவேல்

“தற்குறியாத்தான் இசைக்குள்ள நுழைஞ்சேன். என்ன செய்றோம்னே தெரியாம பாண்டிச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்துல கர்நாடக சங்கீதம் படிப்புல சேர்ந்தேன். ஆனா, அது நான் நினைச்ச மாதிரியில்லை. இது நமக்கான விஷயமில்லையோங்கிற எண்ணத்தோடவே படிப்பை முடிச்சேன். என் அறிவுக்கு அடிப்படையான சில விஷயங்கள் மட்டும்தான் மண்டையில ஏறுச்சு. படிப்பு முடிஞ்சதும் அம்மாவோட சுமையைக் குறைக்க ஏதாவது வேலைக்குப் போயே ஆகணுங்கிற நிலை... ஆனா, படிச்ச படிப்பை வச்சுக்கிட்டு எதுவும் செய்யமுடியலே. ‘நாடகத்துக்குள்ள இசைக்கான வாய்ப்பு நிறைய இருக்கு. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துல அந்தப் படிப்பு இருக்கு... சேர்ந்திடு’ன்னு சிலர் சொன்னாங்க. ‘இன்னும் நாலைஞ்சு வருஷத்துக்கு நான் குடும்பத்தைப் பாத்துக்கிறேன்... நீ படி ராஜா’ன்னு அம்மாவும் சொன்னுச்சு...” - கண் கலங்குகிறது முருகவேலுக்கு.

கே.ஏ.குணசேகரன், ராஜு போன்ற ஆளுமைகள் நாடகவியல் துறையில் முருகவேலின் ஆசிரியர்களாக அமைந்தது நல்வாய்ப்பு. பாட, நடிக்க, இசையமைக்க எனப் பலதளங்கள் விரிந்தன.

“ராஜு சார்தான் எனக்கு ஆசிரியர். மேக்கப்ல இருந்து, காஸ்ட்யூம் வரைக்கும் தியேட்டரோட எல்லா விஷயங்களையும் எனக்குப் பழக்கப்படுத்தினார். எனக்குப் பாடவும் வருங்கிறது கூடுதல் வாய்ப்புகளைத் தந்துச்சு. கே.ஏ.ஜி சார், ‘பலியாடுகள்’ நாடகத்துல திருநங்கையா என்னை நடிக்கவச்சார். அப்படியே இசையமைக்கவும் ஆரம்பிச்சேன். இமையத்தோட ‘பெத்தவன்’, ‘போலீஸ்’, ‘அணையும் நெருப்பு’ன்னு பல கதைகளை ராஜு சார் நாடகமாக்கினார். எல்லாத்துக்கும் நான்தான் இசையமைச்சேன்.

ஒரு இடதுசாரி மாநாட்டுல ‘பெத்தவன்’ நாடகம் போட்டோம். இறுதியில, ‘காதலைப் பற்றி என்ன கவலை ஜாதியே உனக்கு’ன்னு ஒரு பாட்டு வரும். மு.ஆதிராமன் எழுதிய அந்தப் பாட்டை நான் கம்போஸ் பண்ணிப் பாடினேன். சிறப்பு விருந்தினரா வந்திருந்த ராஜுமுருகன் சார், ‘ஜோக்கர்’ எடுத்தப்போ அழைச்சு ‘ஓல ஓலக் குடிசை’ பாட்டைத் தந்தார். பாட்டு வெளிவந்தபிறகு கடலூருக்குப் போனேன். ‘நம்ம கதையையே பாடியிருக்கியேய்யா’ன்னு அம்மா என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதுச்சு.

‘பெத்தவன்’ கதையை களஞ்சியம் சார், ‘முந்திரிக்காடு’ன்னு படமா எடுக்கிறார். அதுல இறுதிக்காட்சியில வர்ற பாடலை என்னையே பாடச்சொன்னார். அதுக்குப்பிறகு பல்கலைக்கழகத்துல மூழ்கிட்டேன். வாய்ப்பு தேடணும்னு தோணலே. நம்ம குரல், பாத்திரத்துக்குப் பொருத்தமா இருந்தா கூப்பிடுவாங்கன்னு நினைப்பு. ஒருநாள் ‘பாவக் கதைக’ளுக்காக அழைப்பு வந்துச்சு. ஒரு திருநங்கை பாத்திரத்தோட உணர்வுல இருந்து எழும்புற பாடல்... நிறைய பேர் கூப்பிட்டுப் பாராட்டினாங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு...” என்கிறார் முருகவேல்.

முருகவேலின் மனைவி மங்களகௌரி செவிலியர். முகிலன், லிஸியா என இரு பிள்ளைகள்... குடும்பம், பாட்டு, நாடகமென வண்ணமாகியிருக்கிறது முருகவேலின் வாழ்க்கை!