மகேஷ் பாபு மகன் நடித்த படம் எது? - டோலிவுட் ஹீரோக்களின் கதை! #KingsOfTollywood Part - 3
தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரையில், பெரிய ஸ்டார்கள் பட்டியலில் கிருஷ்ணாவின் பெயர் தவறவிட முடியாதது. அந்த அந்தஸ்து, இப்போது அவர் மகனான மகேஷ் பாபு வரை தொடர்கிறது. இந்த இருவர் தவிர, சினிமா சம்பந்தப்பட்ட இன்னும் சிலர் இதே குடும்பத்தில் இருக்கிறார்கள். அதைப் பற்றித்தான் இந்தப் பாகத்தில் பார்க்கப்போகிறோம்...
அறுபதுகளின் தொடக்கத்தில் நடிகராக அறிமுகமானவர் சிவராம கிருஷ்ணா கட்டமனேனி. ஆரம்பத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தார். தயாரிப்புத் தரப்பு கொடுத்த அழுத்தத்தில் சில படங்களிலிருந்து கிருஷ்ணாவை நீக்கிய சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன. இருப்பினும் கிருஷ்ணாவை ரசிகர்களுக்குப் பிடித்துபோனது. சிவராம கிருஷ்ணா கட்டமனேனியை, கிருஷ்ணாவாக ஏற்றுக்கொண்டனர். அப்போது பெரிய நட்சத்திரங்களாக இருந்த என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வராவ் ஆகியோருடன் இணைந்தும் நடித்தார். பிறகு ஒவ்வொரு நட்சத்திரமும் தனக்கென ஒரு பாதையை வடிவமைத்துக்கொண்டு ஜொலிக்க ஆரம்பித்தனர். இந்த இணைப்பு, எல்லா மொழிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. தமிழில் ரஜினி-கமல் கொலாபரேஷன் நடந்தது போன்ற ஒன்றுதான் அப்போது அங்கு நடந்ததும்.
பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போன்ற கிருஷ்ணாவின் இந்த வளர்ச்சி, தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது வரை சென்றது. தனது பத்மாலயா நிறுவனம் மூலம் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கத் தொடங்கி அதிலும் வெற்றிபெற்றார். சமகாலத்திலேயே பல பெரிய நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்தபோதும் அவர்களுக்குள் ஆரோக்கியமான நட்பும் இருந்தது. அதற்கு சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
குருக்ஷேத்திரத்தை மையமாகவைத்து ஒரு படம் எடுக்க விரும்புகிறார் கிருஷ்ணா; அதற்கான அறிவிப்பையும் வெளியிடுகிறார். அறிவிப்பைப் பார்த்த என்.டி.ராமாராவுக்கு அதிர்ச்சி. காரணம், அவரும் அதே குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து படம் எடுக்கும் யோசனையில் இருந்தார். தனக்கு இருக்கும் நெருக்கடிகள் காரணமாக, இந்தப் படத்தை என்னால் கைவிட முடியாது என்கிற நிலையை என்.டி.ராமாராவிடம் தெரிவிக்கிறார் கிருஷ்ணா. இறுதியில் என்ன ஆனது தெரியுமா? கிருஷ்ணா `குருக்ஷேத்திரம்' என்ற பெயரிலும், என்.டி.ராமாராவ் `தன வீர சூர கர்ணா' என்ற பெயரிலும் படம் எடுத்தார்கள். இரண்டுமே பம்பர் ஹிட். இந்த அளவுக்கு துறையில் இருப்பவர்களுடன் நட்பிலும், ரசிகர்களை நடிப்பிலும் கவர்ந்திருந்தார் கிருஷ்ணா. பிறகு, இயக்குநர் அவதாரம் எடுத்தார். தமிழில் விக்ரம் நடிப்பில் சுசிகணேசன் இயக்கிய `கந்தசாமி' படத்தில் கிருஷ்ணாவை நீங்கள் பார்த்திருக்கலாம். விக்ரமின் சீனியர் ஆபீஸராக வருவாரே... அவரேதான்.
கிருஷ்ணாவுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். இதில் ரமேஷ் பாபு, மகேஷ் பாபு, மஞ்சுளா ஆகியோர் சினிமாவில் நுழைந்தார்கள். அதில் வெற்றிகரமாக கிருஷ்ணாவின் ரிலே ரேஸைத் தொடர்வது மகேஷ் பாபுதான். முதலில் நடிக்க வந்த, ரமேஷ் பாபுவுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதில் இரண்டு படங்கள் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடித்தது. யார் இயக்கினால் என்ன ரசிகர்களுக்குப் பிடிக்க வேண்டுமே! பிறகு, தந்தையின் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டார். குணசேகர் இயக்கி இவரின் தம்பி மகேஷ் பாபு நடித்த `அர்ஜுன்' படத்தைத் தயாரித்ததோடு சரி. அதன் பிறகு இணை தயாரிப்பு, வெளியீடு மட்டும்தான். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதுவும் இல்லை.
அடுத்து நடிக்க வந்தவர் மகேஷ் பாபுவின் அக்கா மஞ்சுளா. சிபி மலையாளி இயக்கிய `சம்மர் இன் பெத்லகேம்' என்கிற மலையாளப் படம் மூலம் அறிமுகமானார். பிறகு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் `ராஜஸ்தான்' படத்தில் சின்னக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த `ஷோ' படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது வென்றது. அதன்பிறகுகூட குட்டிக் குட்டிக் கதாபாத்திரங்களே கிடைத்தன. இவரின் கணவரான சஞ்சய் ஸ்வரூப் திரைப்படத் தயாரிப்பாளர், நடிகரும்கூட. ராம்சரண் நடித்த `ஆரஞ்ச்' படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடித்திருப்பார்கள். சென்ற வாரம் வெளியாகிக் கொண்டாடப்படும் `அர்ஜுன் ரெட்டி' படத்தில்கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சஞ்சய் ஸ்வரூப். `ஷோ' படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு, மஞ்சுளாவை ஒரு தயாரிப்பாளராகவும் அறிமுகம் செய்துவைத்தது. அதன் பிறகு, தனது `இந்திரா க்ரியேஷன்ஸ்' மூலம், மகேஷ் பாபு நடித்த `நானி', `போக்கிரி', கௌதம் மேனன் தெலுங்கில் இயக்கிய `ஏ மாய சேசாவே' (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன்) போன்ற படங்களைத் தயாரித்தார். அதன் பிறகு நடிப்பு, தயாரிப்பு இரண்டிலிருந்தும் சற்று தள்ளியே இருக்கிறார்.
மஞ்சுளாவுக்குப் பிறகுதான் மகேஷ் பாபு என்ட்ரி. அப்பா கிருஷ்ணா, அண்ணன் ரமேஷ் பாபு ஆகியோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், `ராஜகுமாருடு' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான நந்தி விருது கிடைத்தது. `யுவராஜ்', `வம்சி', `முராரி' எனச் சில படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் `ஒக்கடு'. கிருஷ்ணா போலவே மகேஷுக்கு என ஒரு ரசிகர் வட்டம் உருவாகியது. இதில் `வம்சி' மகேஷுக்கு ஸ்பெஷலான படம். காரணம், அதில் மகேஷுக்கு ஜோடியாக நடித்த நம்ரதாவைத்தான் திருமணம் செய்துகொண்டார். மகேஷின் கரியர் கிராஃப் கொஞ்சமும் கணிக்க முடியாதது. `போக்கிரி' மிகப்பெரிய ஹிட், அடுத்த படங்களான `சைனிகுடு', `அதிதி' படங்கள் தோல்வியடைந்தன. அதன் பிறகு, இரண்டு வருட இடைவெளி. காரணம், மகேஷுக்கு அவரது பாட்டியின் மரணம் பெர்சனலாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டுவந்து நடித்த `கலேஜா' படமும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. அடுத்த படமான `தூக்குடு' பெரிய ஹிட்டானது.
இப்படி ஹிட்-ஃப்ளாப் என வரிசையாகச் சென்றுகொண்டிருக்க, தன் குடும்பத்திலிருந்து அடுத்து நடிக்க வர இருப்பவருக்கான அறிமுகத்தையும் நடத்திவிட்டார் மகேஷ். தான் நடித்த `நேனொக்கடினே' படத்தில் தன் மகன் கௌதமை நடிக்கவைத்து ஆடியன்ஸ் மனதில் ஒரு விசிட்டிங் கார்டு வீசியிருக்கிறார்.
மகேஷ் பாபுவின் தங்கை ப்ரியதர்ஷினி. இவருக்கு நடிப்புமீது பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், அவரது கணவரான சுதீர் பாபுவுக்கு நடிப்பில் ஆர்வம். மஞ்சுளா தயாரித்த `ஏ மாய சேசாவே' படத்தில் சமந்தாவின் அண்ணன் ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். `சிவா மனசுல சக்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான `சிவா மனசுலோ ஸ்ருதி' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இப்போது இந்தக் குடும்பத்திலிருந்து நடித்துக்கொண்டிருப்பது மகேஷ் பாபு மற்றும் சுதீர் மட்டுமே. அடுத்த பாகத்தில் இன்னொரு குடும்பம் பற்றிப் பார்க்கலாம்.
- இங்க்க உந்தி...