ஸ்மிதாவின் அந்தக் கண்கள்... வாவ்! #SmitaPatil | Actress Smita Patil birthday special article

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (17/10/2017)

கடைசி தொடர்பு:15:54 (17/10/2017)

ஸ்மிதாவின் அந்தக் கண்கள்... வாவ்! #SmitaPatil

கறுப்பு- வெள்ளை டிவி-யில் விருது பெற்ற படங்களைப் புரிந்தும் புரியாமலும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஸ்மிதா பாட்டில் என்கிற பெயரை அவ்வப்போது படிக்காமலோ கேள்விப்படாமலோ இருந்ததில்லை. என்றாலும் கோவிந்த் நிகாலனியின் ‘அர்த் சத்யா' என்கிற படத்தை தியேட்டரில் பார்க்கிறேன். ஒரு பெண் கண்களால் பேசுவதை முதல் முறையாய் கவனித்தேன். அன்று இரவு அந்தக் கண்களால், தூங்கவே முடியாமல் நான் விழித்திருந்தேன் என்று நினைக்கிறேன். பின்னால் அரவிந்தனின் `சிதம்பரம்' என்கிற மலையாளப் படம் வருகிறது. அதில் ஸ்மிதா நிற்கிறார், நடக்கிறார், சிரிக்கிறார், பூப்பறிக்கிறார். சந்தர்ப்பம் இருக்கவே பல முறை அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்.

ஸ்மிதா

ஒரு நடிகை நமது கனவுக் கன்னியாகிவிடாமல் தப்பித்து சிந்தனையாய் இருந்து விடுகிற ரகசியம் அப்போது எனக்குப் புரியவில்லை. அவர் மிகச்சிறந்த நடிகை, அவர் தனது நடிப்பால் நமது மனதில் இடம் பிடிக்கிறார் என்கிற உண்மை சிறுகச் சிறுகப் புரிந்து வந்தபோது அவர் இந்த பூமியிலிருந்து விடைபெற்று சென்றுவிட்டார். 1986 டிசம்பர் மாதம் பிரசவ நெருக்கடியில் அந்த இறப்பு நிகழ்ந்தது. அப்போது அவரது வயது முப்பத்தி ஒன்று. அது சாகிற வயதா. மேதாவிலாசத்துக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் உறவோ என்கிற வரியைத்தான் நினைத்துக்கொள்ள வேண்டும்.

Smita

ஸ்மிதா மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர். மராத்தி படித்தவர். அவரது வீட்டில் கலைத்துறையைச் சேர்ந்தவர்களோ கலையின் பேரில் அபிமானம் மிகுந்தவர்களோ இல்லை. புனே திரைப்படக் கல்லூரியில் படித்து, செய்தி வாசிப்பாளராக இருந்த ஸ்மிதா மீது பலரின் கவனமும் திரும்பியது. இப்படிதான் அவர் நடிகையானார். நிஷாந்த் என்கிற ஷியாம் பெனகலின் படத்தில் சிறு பாத்திரத்தில் தோன்றினாலும் கவனிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. `மந்தன்', `பூமிகா' எல்லாம் வந்த பின்னர் தனித்துவம் பெற்றுவிட்டார். விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன. அவருக்கென ஸ்க்ரிப்டுகள் எழுதப்பட்டன. அவர் அழகுப் பதுமையாகவோ, நாலு பைட் நாலு பாட்டில் ஹீரோவுக்குப் பின்னால் ஒளியும் கொஞ்சும் கிளியாகவோ தனது வட்டத்தைச் சுருக்கிக் கொள்ளாமல் அசல் பெண்களைப் பிரதிபலிக்கிற பாத்திரங்களில் ஒளிர்ந்தார். இடைவிடாமல் பணிபுரிகின்ற அளவுக்கு வரிசையாய் படங்கள் இருந்தன என்றே சொல்ல வேண்டும். ஆன்ம பலமில்லாமல் பலவீனமாயிருந்த படங்களில்கூட அவரது இருப்பு அந்தப் படத்தை சமநிலை செய்வதை இன்றுமே கவனிக்க முடியும்.

அவர் நடித்த முக்கியமான படங்கள் அனைத்தையுமே பார்த்திருக்கிறேன். ‘பூமிகா' படத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. தேவதாசி குலத்தைச் சேர்ந்த ஒரு நடனப் பெண்ணாய் வருவார். கட்டுக்கடங்காத நடனமும் அதைப் போன்றே காவல்களை மீறும் சீற்றமுமாய் வந்தாலும் சட்டென முகங்களை மாற்றிக்கொள்ள அவரால் முடிந்தது. உதாரணமாய், `சிதம்பரம்' படத்தில் அவர்தான் எல்லாம். உலகம் தெரியாத ஒரு தமிழ்ப் பெண்ணாய் வளைய வருவது என்னவென்று சொல்லவியலாத அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்தும். அந்தக் கண்களில் இருக்கிற அறியாமையை மறக்கவே முடியாது. அப்படித்தான் `மிர்ச் மசாலா'வில் ஓடிக்கொண்டே இருக்கிற சோன்பாயின் மருண்ட கண்கள். இதை எல்லாம் ஊதித்தள்ளி அப்படியே `மண்டி' படத்தில் ஒரு வேசியாய் குலுக்கவும் தளுக்கவும் செய்தார். இப்படி அவர் படங்களை வரிசையாய் பார்க்க முடியும். கிளீஷேவான ஒரு புழங்கு மொழியில் சொல்ல வேண்டுமானால் பல பாத்திரங்களிலும் வாழ்ந்து தள்ளியிருக்கிறார்.

பெரிதாய் பணம் சம்பாதிக்கிற நோக்கமின்றி செயற்பட்டதால் கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு சில பொதுச்சேவை நிறுவனங்களுடன் இருந்து பணியாற்றியிருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை பல சிக்கல்களில் இருந்தன. ஒரு குடும்பத்தில் பதுங்கிக்கொள்ளாமல் பொதுவெளியில் பணியாற்றுகின்ற பெண்களையே பீடிக்கக் கூடிய தனிமை, பதற்றம் ஆகியவை அவருக்கு இருந்திருக்க முடியும். சினிமாவில் பாதம் முதல் தலை வரை அரசியல்தான். அதை எல்லாம் தாக்குப் பிடிக்க தர்மசங்கடமாய் இருந்திருக்கும். கை விட்டுப் போகிறவர்களின் துரோகத்தை, கை நீட்டி குற்றம் சொல்லுகிற மந்தைகளின் அபவாதத்தை எல்லாம் சகித்துக்கொள்ள முடிந்திருக்காது. அந்த மாதிரி பலவீனமான சந்தர்ப்பத்தில் எடுத்த முடிவாகக்கூட இருக்கலாம், வேறு ஒரு குடும்பம் இருந்த ராஜ் பாப்பரை அவர் திருமணம் செய்துகொண்டார். அது அவ்வளவாய் அவர் தேடின நிம்மதியைக் கொடுக்கவில்லை. ‘சமூகத்துக்கு இருப்பது ஒரு வேட்டைக்காரனின் மனது’ என்கிற வரியை இங்கே நினைத்துக் கொள்ளலாம்.

Smita Patil

குழந்தை பிறப்பின் காலத்தில் அவர் மரணமடைந்தது, சினிமாவுக்கு அதிலும் நல்ல சினிமாக்களுக்குப் பேரிழப்பாய் இருந்தது. இன்று புற்றீசல் போல கிளம்பி மறைகிறார்கள். வந்தவர், போனவர் பெயர்கள் கூட பல நேரங்களில் தெரிவதில்லை. அதற்கெல்லாம் இன்றைய காலம் கூட காரணமாக இருக்கலாம். சினிமாவில் ஒரு நடிகையாய், அதிலும் நடிப்புக்காக நின்ற நடிகையாய் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்கிற ஓர்மையைதான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒரு குறுகிய காலத்தில் பல பெண்களின் முகம் தரித்து அவர் நம்மிடம் உரையாடியிருக்கிறார். நினைப்பிருந்தால் பலரிடமும் அவரை அடையாளம் காண முடியும். 

அறிமுகத்திலேயே அரசியல் நையாண்டியில் புகுந்து விளையாடிய துணிச்சல் டிம்..! - #HBDTimRobbins


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close