‘பத்மாவதி’க்குக் காட்டும் கரிசனம் ஏன் ‘செக்ஸி துர்கா’ படத்துக்கு இல்லை..?

கோவாவில் நடந்துவரும் 48 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட நிராகரிக்கப்பட்ட செக்ஸி துர்கா திரைப்படம், கேரளா ஹைகோர்ட்டின் ஆணைப்படி கோவா திரைப்படவிழாவில் திரையிடப்படுமா என்கிற எதிர்பார்ப்பு திரைப்பட ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நிகழ்ந்து வரும் உலகத் திரைப்படவிழா கோவாவில் கடந்த 20 தேதி தொடங்கியது. மத்திய தகவல்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், ராஜ்குமார் ராவ், கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்ட இவ்விழா ஆரம்பம் முதலே சர்ச்சையுடன்தான் ஆரம்பித்தது. 

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கி சர்ச்சைக்குள்ளான பத்மாவதி படத்தின் பிரச்னை இங்கு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் இங்கு பேசினார். பத்மாவதி திரைப்படத்தின் மீதான விமர்சனம் படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்று முக்கியப் படைப்பாளிகள் கூக்குரலிட்டு வரும் நிலையில், கேரளாவிலிருந்து அனுப்பப்பட்ட செக்ஸி துர்கா படம் திரையிட அனுமதி மறுக்கபட்டது. இப்படம் தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை அதனால் திரையிடப்படவில்லை என்று கூறப்பட்டாலும், இதில் வரும் துர்கா என்ற பெயர் இந்துக்கடவுளை குறிப்பதாகவும், செக்ஸி துர்கா என்பது துர்க்கையை இழிவுப்படுத்தும் நோக்கில் உள்ளதாகவும் இதனாலேயே பாஜக ஆளும் கோவாவில் இது திரையிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது எனப் படைப்பாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதை தவிர்க்க படக்குழுவினர் இதன் தலைப்பை எஸ்.துர்கா என்று மாற்றி அனுமதி கோரியிருந்தார். இருப்பினும் விழாக்குழுவினர் இப்படத்தை திரையிட அனுமதிக்கவில்லை.

பல முன்னணி படைப்பாளிகள் பத்மாவதிக்குப் படத்திற்கு காட்டும் கரிசனத்தை செக்ஸி துர்கா படத்திற்கு காண்பிக்க தவறுவதிலிருந்து படைப்பாளிகளின் சுதந்திரம் என்பது பாராபட்சமின்றி அணுகப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரபல பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கய், Content தான் கிங் என்றார். தொடர்ந்து இப்படத்திற்கான எதிர்ப்புகுறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய பொழுது எஸ்.துர்கா ஒரு மட்டமான கருத்தைக் கொண்டுள்ளது என்று பதிலளித்தார். படத்தைப் பார்க்காமல் அவர் எப்படி இப்படி கூறலாம் என்று கேள்வி எழுப்ப, அவர் பாதியிலேயே நழுவிவிட்டார்.

இதற்கிடையே செக்ஸி துர்கா படத்தை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று அதன் இயக்குநர் சனல்குமார் சசிதரன் கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை எடுத்துக்கொண்ட கேரளா உயர்நீதிமன்றத்தின் ஒருநபர் பெஞ்ச், இப்படத்தை விழாவில் திரையிடவேண்டும் என்று தகவல்துறை அமைச்சகத்திற்கு ஆணையிட்டுள்ளது, நீதிமன்றத்தின் ஆணைப்படி இவ்வழக்கு திரையிடப்படுமா அல்லது மேல்முறையீடு செய்து தவிர்க்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

கருத்துச் சுதந்திரம் குறித்த விமர்சனங்கள் பத்மாவதி திரைப்படத்திற்கும் செக்ஸி துர்கா படத்திற்கும் மாறுபட்டு ஒலித்துகொண்டிருப்பது நடுநிலையாளர்களுக்கு மத்தியில் ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுபோன்ற விழாக்களில் அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!