Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

2017-ல் அநியாயத்திற்கு சொதப்பிய மலையாள படங்கள்!

மலையாள படங்கள் என்றாலே `உலக சினிமா ரேஞ்ச்', 'சிலிர்ப்பனுபவம்'  என்று சிலாகிக்கும் பலரில் நானும் ஒருவன். ஆனால், மலையாள சினிமாவிலும் அவ்வபோது மக்கிப்போன மசால்வடைகளும் வரும் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். எக்கச்சக்கமாய் எதிர்பார்த்து மில்லியன் டன் கணக்கில் பல்பு வாங்க வைத்த சினிமாக்கள் இவை...

பஷீரின்டே பிரேமல்லக்கனம்: 

மலையாள சினிமா

அனீஸ் அன்வர் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசிலின் தம்பி ஃபர்ஹான் ஃபாசில் ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த படம் இது. படத்தின் டிரைலரைப் பார்த்ததும் 80களின் பேக்ட்ராப்பில் ஹிட்டடித்த 'என்னு நின்டே மொய்தீன்' போல செம காதல் கதையாக இருக்குமோ என எதிர்பார்ப்பைத் தூண்டியது. அண்ணன் ஃபஹத் நடிப்பில் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க தம்பி ஃபர்ஹானோ இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார் என்பதை ஆணித்தரமாக உறுதி செய்த படம் இது. வெளிநாட்டிலிருந்து கருப்பு வெள்ளை டிவி ஒரு கிராமத்துக்கு வந்தபிறகு அந்த ஏரியாவில் நடக்கும் மாற்றம் என்ற அழகான ஒன்லைன் பிடித்திருக்கிறார்கள். அதன் பின்னணியில் அழகான காதல்கதை என லீட் பிடித்திருந்தாலும் திரைக்கதையில் சொதப்பியதால் பல இடங்களில் செம போராக இருக்கும். ஆர்ட் டைரக்‌ஷனும் 80களை சுற்றிக் காட்டாமல் குழப்பியடித்த்தை சொல்லியே ஆகவேண்டும்.

வெளிப்பாடின்டே புஸ்தகம்:

மலையாள படங்கள்

தொடர்ந்து ஹிட் படங்களாக நடித்துக் கொண்டிருந்த மோகன்லாலில் சறுக்கல் சினிமா இது. ஹிட் இயக்குநர் லால் ஜோஸ் இயக்கிய படமென்றாலும் 'நம்மவர்' ஸ்டைல் கதைதான். தறுதலைக் காலேஜைத் திருத்தும் ஒற்றை வாத்தியார் கதைதான் என்றாலும் கடற்கரை கிராமம், அங்கு ஒரு கல்லூரி, முரட்டு மாணவர்கள் எர்ன ஓரளவு ரசிக்க வைத்தது. ஆனால், கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம் ஓடும் சினிமா, ஏதோ நான்குமணி நேரம் தாண்டியும் ஓடும் ஃபீல் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜவ்வு திரைக்கதையால் நூல் இல்லா பட்டம்போல் ஆங்காங்கே ஆகிவிடுகிறது. மோகன்லாலில் சாஃப்ட் நடிப்பு ஏனோ அவர் ரசிகர்களுக்கும் திருப்தி தரவில்லை. மோகன்லாலின் கெட்-அப் பார்த்துவிட்டு பதறினால் கம்பெனி பொறுப்பில்லை . படத்தின் ஒரே ஆறுதல் தமிழ்நாடுவரை ஹிட்டடித்த 'ஜிமிக்கி கம்மல்' பாட்டு மட்டும் தான்! 

வீரம்:

மலையாள படங்கள்

சந்து சேவகர் என்ற வீரம் நிறைந்த மலபார் மன்னரின் கதைதான் இப்படம். இயக்குநர் ஜெயராஜின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வந்த இந்த சினிமாவில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் குணால் கபூர் நடித்திருந்தார். போதாக்குறைக்கு படம் துவக்கவிழா பிரஸ்மீட்டில் ``இக்கதை ஷேக்ஸ்பியரின் 'மேக்பத்', ஃபியோடர் தாஸ்தாவ்ஸ்கியின் 'தி பிரதர்ஸ் கரமாசோவ்' கதையின் தழுவல்'' என்றெல்லாம் வறுவல் பேட்டி தட்டியிருந்தார் ஜெயராஜ். வித்தியாசமான சினிமாதான் என்றாலும் முழு படத்தையும் பார்த்து முடிப்பதற்குள் மூச்சுத் திணற நேரிடும். 

ஹனிபீ 2: 

மலையாள படங்கள்

மலையாள நடிகர் லாலின் மகன் லால் ஜூனியர் 2013-ல் இயக்கி மெஹா ஹிட்டடித்த `ஹனிபீ' படத்தின் இரண்டாம் பாகம் இது. செம மொக்கையான அனுபவத்தைத் தரும். முந்தைய படத்தில் நடித்த ஆசிஃப் அலி, பாவனா ஜோடியை இதில் பார்க்கவே சகிக்கவில்லை. இருவருக்கும் வயது ஆனதைச் சொல்லவில்லை. காமெடி என அரதப்பழசான ஃபார்வர்டு ஜோக்குகளை படம் நெடுகிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். செண்டிமெண்ட் என்ற பெயரில் கழுத்தறுப்பு க்ளிஷே காட்சிகளும் படத்தை தியேட்டரைவிட்டு நம்மை விரட்டிவிடும் அளவுக்கு இருப்பதால் கவனம் மக்களே! 

டீம் 5:

மலையாள படங்கள்

 நம்ம கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் நடித்த படம் என்று பார்த்தால் உயிர் பிழைப்பதே கஷ்டம் அளவுக்கு ஆகிவிட்டது. முகத்தில் ஒரு சிறு எக்ஸ்பிரஷனும் இல்லாமல் ஒரு பைக் ரேஸராக நடித்திருக்கிறார் தலைவர். இவ்வளவுக்கும் நிக்கி கல்ராணி என்ற அழகான ஹீரோயின் இருந்தும் கெமிஸ்ட்ரி, பயாலஜி என எதுமில்லாமல் யாரோ போல ரொமான்ஸ் காட்சியில் தேமே என வந்து போகிறார் ஶ்ரீசாந்த். நிஜத்தில் ஹர்பஜன் சிங்கைக் கடித்துவிட்டு அழுதவருக்கு சினிமாவில் அழவே தெரியவில்லை. சோகக் காட்சிகளில் சிரித்த முகத்தோடும் இருக்கிறார். பைக் ரேஸ் கதை என்று ஆர்வத்தோடு போனால் பைக்கௌ ஊருகாய் போல காட்டுகிறார்கள். டீஸர் காட்டிய விறுவிறுப்பு கொஞ்சமும் இல்லாமல்,  மோசமான கேமரா கோணங்கள், சொதப்பல் எடிட்டிங், நாரச பின்னணி இசை என எல்லாமே நெகட்டிவாகவே படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தை விளையாட்டாகக்கூட பார்த்து விடாதீர்கள். 

புல்லிக்காரன் ஸ்டாரா: 

மலையாள படங்கள்

மம்மூட்டி சமீபத்தில் நடித்த ஃப்ளாப் படங்களிலேயே வொர்ஸ்ட் ஃப்ளாப் இதுவாகத்தான் இருக்கும். டீச்சர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டின் வாத்தியார் ரோலில் என்னதான் வெரைட்டி காட்ட முடியும்? அதே 'ஆனந்தம்' தமிழ்ப்பட ஸ்டைலில் 'தாங்க மாட்டீங்கடா சொன்னா தாங்க மாட்டீங்க..!' என்று படம்பூராவும் கேமராவைப் பார்த்து பேசுகிறார். கொட்டாவி விட்டால் ஒரு ஈ மட்டுமல்ல பத்துப் பதினைந்து கொசுவும் போய் குடும்பம் நடத்திவிட்டு வந்துவிடும். அம்புட்டு தூக்கம் பாஸ்! 
ஆக, இனிமேல் இதுபோன்ற படங்களைப் பார்க்கும் முன்  உங்க மண்டை பத்திரம் பாஸ்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement