ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் நானிக்கு கை கொடுக்கிறதா? - 'மிடில் க்ளாஸ் அப்பாயி' படம் எப்படி?

`எவடே சுப்ரமணியம்', `பலே பலே மகாடிவோய்', `ஜெண்டில் மேன்' என வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த நானி, `மஜ்னு', `நேனு லோக்கல்', `நின்னு கோரி' என காதல் படங்களாக பேக் டூ பேக் கொடுத்தார். இந்த முறை எம்சிஏ மூலம் நானியின் டார்கெட், ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னர். படமும் அதை பிரதிபலிக்கிறதா? வாங்க பார்க்கலாம். 

நானி

அண்ணன்டா... தம்பிடா... எனப் பாசத்தை பொழிந்து வாழும் சகோதரர்கள் ராஜீவ் - நானி (படத்திலும் நானிதான்). ஆனால், அண்ணனின் திருமணத்துக்குப் பின் இந்த நிலைமை தலைகீழாகிறது. அதற்கு காரணம் அண்ணிதான் (பூமிகா) என நினைத்து வெறுப்பிலிருக்கிறார் நானி. கூடவே, வாரங்கலுக்கு பணிமாற்றமாகி செல்லும் பூமிகாவுக்கு துணையாக செல்லும் நிலை வர இன்னும் கடுப்பாகிறார். பூமிகா சொல்லும் வீட்டு வேலைகளை டென்ஷனுடனே செய்வது, முதல் சந்திப்பிலேயே "உன்ன எனக்குப் பிடிச்சிருக்கு. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?" எனக் கேட்கும்  சாய்பல்லவியைப் பார்த்துக் குழம்புவது என இருக்கும் நானி, ஒருகட்டத்தில் உள்ளூர் தாதா சிவா (விஜய் வர்மா) உடன் மோத நேர்கிறது. அது எதனால் என்பதை வழக்கமான மசாலாவுடன் கலந்து சொல்லியிருக்கும் படமே `மிடில் க்ளாஸ் அப்பாயி'.

Sai Pallavi

வீட்டு வேலைகள் செய்ய கடுப்பாவது, சாய் பல்லவியுடன் ரொமான்ஸ், வில்லனிடமிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற பதறுவது என எல்லாத்திலும் நானி சிறப்பு. குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான மெட்டீரியலாகவும் கலக்குகிறார். வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம்தான்  நானியிடம், எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் எனக் கேட்டு திகிலடைய வைப்பது, நானியை அலையவிடுவது என அழகோ, அழகு சாய் பல்லவி. சீக்கிரமே ஆந்திராவில் `சாய் பல்லவி ஆர்மி' வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுக்கு, டாய் ஏய் ஊய் எனக் கத்தாமல் ஒரு வில்லன் வேடம். எனவே நடிக்கவும் வாய்ப்பு குறைவு, அடியாள்களையே ஏவுவதால் அடிக்கவும் வாய்ப்பு குறைவு. நேர்மையான ஆர்.டி.ஓ ஆபீசர் வேடம் பூமிகாவுக்கு. படத்தின் பிரதான பிரச்னை அவர் மூலம் ஆரம்பமாகிறது என்பதைத் தவிர, படத்தில் அவரின் பெர்ஃபாமென்ஸுக்கு அதிக இடம் இல்லை. ராஜீவ், ப்ரியதர்ஷி ஆகியோருக்கு மற்றும் பலர் கதாபாத்திரங்கள்தான். நிறைய பேர் இருந்தாலும் நானியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முன்னோக்கி கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருப்பதைக் காட்டுகிறது. 

ஹீரோ வில்லனுக்கு இடையிலான பிரச்னையும், இருவருக்குமான சவாலும் பரபரப்பை ஆரம்பித்து வைக்கிறது. அதன் பின் இருவருக்குமான மோதல்களில் புத்திசாலித்தனமான நகர்வுகள் இல்லை என்பதால் வழக்கமான ஒரு தெலுங்குப் படமாகவே நின்றுவிடுகிறது எம்சிஏ. வில்லனின் வெற்றி மீதான பிடிவாதம், அதற்காக அவர் எடுக்கும் முடிவு எதிர்பார்க்காத ஒன்று. எந்த விஷயத்தையும் ஒரு முறை பார்த்தாலே நினைவில் வைத்துக் கொள்ளும் இயல்பு உடையவர் நானி. இந்த விஷயத்தை வைத்து பின்னால் பெருசா ஏதோ இருக்கு என எதிர்பார்க்க வைத்து, மிகச் சாதாரணமாக பயன்படுத்தியிருந்தது ஏமாற்றம். சண்டைக் காட்சிகள், நானிக்கான பில்டப் காட்சிகளில் மாஸ் படத்துக்கான உணர்வைக் கொடுக்கிறார் ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி. தேவி ஸ்ரீபிரசாத் இசை பெரிய ஈர்ப்பை உண்டாக்கவில்லை. கதையை ஆரம்பித்து, என்ன பிரச்னை என்பதைக் காட்டிய வரை சரளமாக நகரும் படம், அதற்குப் பிறகு சுவாரஸ்யமாக எதுவும் இல்லாததால் தடுமாறுகிறது. 

ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்து எடுத்திருப்பதால் அந்த தேவையை மட்டும் பூர்த்தி செய்கிறது படம். மற்றபடி வழக்கமான ஒரு தெலுங்குப் படம், அவ்வளவே. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!