வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (01/01/2018)

கடைசி தொடர்பு:16:32 (01/01/2018)

டாப்-5 மலையாள படங்கள் 2017

 

5. நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா

 

சாந்தி கிருஷ்ணானுக்குப் புற்று நோய், இதை வீட்டினருக்குத் தெரியப்படுத்திவிட்டு சிகிச்சை எடுக்க ஆரம்பிக்க வேண்டும் என கணவர் சாக்கோவுடன் சேர்ந்து முடிவெடுக்கிறார். இதுதான் படம் முழுக்க நடக்கும். அதை அழுது வடிந்து கொண்டும் எடுக்க முடியும், மிக சகஜமாக ஒரு மென்மையான சிரிப்பை வரவழைக்கும் படியும் எடுக்க முடியும். இயக்குநர் அல்தாஃப் சலீம் இரண்டாவது முறையில் படத்தைக் கொடுத்திருந்தார். படத்தில் யாருக்கும் முதன்மை கொடுக்காமல் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக கையாண்டிருந்தது, அட்வைஸ், பாஸிட்டிவ் தாட்ஸ், ரூமி என்ன சொல்றார்னா... என ஃப்ரைட்ரைஸ் போடாமல் மிக இயல்பாக நகர்வதும் படத்தை ரசிக்க வைக்கும். 

நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா

4.மாயாநதி

 

மாத்தன், அபர்ணா இருவரும் காதலர்கள், ஆனால் பிரிந்துவிட்டார்கள். மாத்தன் மதுரையில் இல்லீகல் வேலைகள் செய்யும் ஒருவரிடம் வேலை செய்கிறான். அப்படி ஒரு வேலைக்காக செல்லும் இடத்தில் பிரச்னையாகிவிட சொந்த ஊருக்கு செல்கிறான். இப்போது மறுபடி அபர்ணாவை சந்திக்கிறான். அடிக்கடி சந்திக்கிறான். இந்த சமயத்தில் மதுரையிலிருந்து மாத்தனைத் தேடி போலீஸ் வருகிறது. போலீஸின் தேடலையும், அபர்ணா - மாத்தன் இடையிலான ஊடலையும் வைத்து மாயாநதி பின்னியிருப்பார் ஆஷிக் அபு. எந்த செயற்கையும் இல்லாமல், நீங்கள் எதிர்பார்ப்பதேதான் நடக்கும். ஆனால் அது உங்களுக்கு நிறைவையும் கொடுக்கும் என்பதுதான் மாயாநதியின் மேஜிக். 

 

3.டேக் ஆஃப்

TAKE OFF

 

குடும்பத்தின் பணத் தேவைக்காக ஈராக் செல்லும் பெண், அவளது திருமண சூழல், சென்ற இடத்தில் அவளுக்கு நேரும் சிக்கல், அங்கிருந்து தப்பித்தல் என அட்டகாச சினிமாவாக வந்தது டேக் ஆஃப். 2014ல் நடந்த நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான படம் என்பதால் ஆடியன்ஸுக்கு நெருக்கமான உணர்வையும் கொடுத்தது. கூடவே பார்வதி எனும் நடிப்பு தேவதை, அவ்வளவு அழகான நடிப்பைக் கொடுத்திருந்தது படத்துக்கு மிகப் பெரும் பலமாக அமைந்திருந்தது. படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயன் தன்னை சிறந்த இயக்குநராக அறிமுகம் செய்தும் கொண்டார்.

 

2.அங்கமாலி டைரீஸ்

அங்கமாலி டைரீஸ்

அங்கமாலியின் சில இளைஞர்கள், அவர்களின் தினசரி நடவடிக்கைகள் என  அங்கமாலியின் அத்தனையும் தான் படம். வின்சென்ட் பீப்பேதான் ஹீரோ. அவன் சந்திக்கும் பெண்கள், அவன் பார்க்கும் தொழில், அது சார்ந்து நடக்கும் பிரச்னைகள், அவனைச் சுற்றிய நண்பர்கள், அங்கமாலியின் உணவு இவ்வளவு தான் கதை. ஆனால், ஒவ்வொரு காட்சியையும் அமர்க்களப்படுத்தி செம்பன் வினோத் எழுதியிருந்த கதையை, அச்சு குலையாமல் படமாக்கியிருந்தார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி. மலையாள சினிமா விரும்பிகள் எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாத படம் இது. 

 

 

1.தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்

தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்

ஃபகத் பாசில் எனும் கலைஞனை நீங்கள் ஒரே படத்தில் உணர தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும் போதும். படத்தில் ஃபகத் ஒரு திருடன். ஒரு பேருந்து பயணத்தின் போது, நிமிஷா சஜாயனிடமிருந்து செயினை திருடிவிடுவார். நிமிஷாவும், சுராஜும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட ஜோடி. ஃபகத் திருடியதையும், நகையை விழுங்கியதையும் பார்த்த ஒரே நபர் நிமிஷா மட்டுமே. ஆனால், அடித்து நொறுக்கியும் ஃபகத் தான் திருடவில்லை என நிலையாய் இருக்கிறார். இனி என்ன நடக்கிறது என்பதுதான் கதை. படம் முழுக்க உங்களை அசத்த அத்தனை காட்சிகள் இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்