“இதுக்குதான் இந்தப் படத்தை ஒப்புக்கிட்டீங்களா ரவிதேஜா?” - ‘டச் சேஸி சூடு’ படம் எப்படி? #TouchChesiChudu

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் குடும்பம், காதல், ஏரியா தாதா எனப் பல அத்தியாயங்கள்... கட்டுக்கோப்பான குடும்பஸ்தன், ஃப்ளாஷ்பேக்கில் ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரி... என்ற வழக்கமான ஒன்லைனைக் கதையாகச் சொல்கிறது, ரவிதேஜாவின் 'டச் சேஸி  சூடு' திரைப்படம். 

எதற்கும் அசராத, நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனராகக் கார்த்திகேயா (ரவிதேஜா). கார்த்திகேயாவின் காதலியாகப் புஷ்பா (ராஷி கண்ணா), 'தன் மகன் என்றைக்காவது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள மாட்டானா?' என ஏங்கும் கார்த்திகேயனின் அப்பா (ஜெயபிரகாஷ்), அம்மா (ஜெயசுதா). பாட்டியாக அண்ணபூர்ணா. ஏ.சி.பி. கார்த்திகேயாவிற்குப் பயப்படும் போலீஸ் கமிஷனராக முரளி ஷர்மா. முதல்வராக விஜய்குமார். முதல்வரே பயப்படும் அளவிற்கு ஒரு தொகுதி; அதன் எம்.பி. ரௌஃப் லாலா. ரௌஃப் லாலாவிற்கு இரண்டு மகன்கள், ஒருவர் இர்ஃபான் லாலா. மற்றொருவர், மனநிலைக் குறைபாடுடையவர். காமெடிக்காக ரௌஃப் குடும்ப நண்பராக வரும் ஜீவா, சத்யம் ராஜேஷ், வெண்ணிலா கிஷோர் ஆகிய கேரக்டர்களை முதன்மையாகக்கொண்டு தயாராகியுள்ளது, 'டச் சேஸி  சூடு'. 

ரவி தேஜா

குடும்பத்தின் மீது அதீத பாசம்கொண்ட கார்த்திகேயா, பாண்டிசேரியில் வசித்து வருகிறான். தனது கம்பெனி வேலையாட்களிடமும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை நிதமும் கூறி வருகிறவர். தன் குடும்பத்தின் சந்தோஷத்தை மட்டுமே பிரதானமாகக்கொண்ட கார்த்திகேயா, ஒருகட்டத்தில் கல்யாணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்கிறார். அதற்கு அவரது குடும்பத்தார் பார்க்கும் பெண்தான், ராஷி கண்ணா. இருவருக்கும் இடையே மோதல், காதல், மோதல் காதல் என்று மாறி மாறி வர... தனது குடும்பத்தாரிடம் பொய் சொன்னார் என்பதற்காக ராஷியை வெறுத்து  ஒதுக்குகிறார். 'இப்படி ஒரு மகனா?' என்று எல்லோரும் ஆச்சர்யப்படும் வேளையில், கார்த்திகேயாவின் தங்கை ஒரு கொலையைப் பார்க்கிறாள். கொல்லப்பட்டவன் ஹீரோவிற்கு மிகவும் பிடித்த ஒரு மாணவத் தலைவன். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், ஃப்ளாஷ்பேக்கில் கார்த்திகேயா என்ன செய்தார், அவர் குடும்பத்தோடு பாண்டிசேரிக்கு வந்த காரணம் என்ன... இப்படிப் பல கேள்விகளுக்கான பதிலைச் சொல்கிறது, விக்ரம் ஶ்ரீகொண்டா இயக்கத்தில் வெளிவந்துள்ள 'டச் சேஸி சூடு'.

'ராஜா தி கிரேட்' படத்திற்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால் இப்படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. சில நல்ல காட்சிகள் படத்தில் இருந்தும், பரபரப்பூட்டாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால் படம் தொய்வடைகிறது. 'விக்ரமார்க்குடு' என்ற ரவிதேஜாவின் முந்தைய போலீஸ் படத்தின் சாயல் இருப்பதால், இப்படத்தை ரவிதேஜா ஒப்புக்கொண்டாரா என்று தெரியவில்லை. படம் அந்த அளவுக்கு இல்லையென்றாலும்,  குறைந்தபட்சம் அந்தப் படம் மாதிரியாவது இருந்திருக்கலாம். 
 
பெரிய நடிகர் பட்டாளம், ஓளிப்பதிவு, இசை இவையெல்லாம் ஒருபக்கம் குறைகளை மறக்கடிக்க உதவினாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் என்னவென்று எளிதில் யூகிக்கும் வகையில் இருப்பதும், ஏன் எதற்கு என்று தெரியாமல் வரும் கதாபாத்திரங்கள், காட்சிகள், பாடல்கள் என அனைத்தும் பலவீனமாகவே இருந்தன. 'நான் இந்த ஏரியாவிற்கே சிங்கம்' என வில்லன் கூற, அதற்கு நாயகன் 'நான் குளோபல் வார்மிங்டா' என்பது போன்ற வசனங்கள், படம் மிகவும் மேம்போக்குத்தனமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. ராட்சஸ கிரேனில் இருக்கும் சங்கிலியை இழுத்து அனைவரையும் அடிப்பது டிரெடிஷனல் தெலுங்கு ரகப் படம்!.      

ஆங்காங்கே வரும் காமெடிக் காட்சிகள் மட்டுமே நம்மைத் தட்டி எழுப்புகிறது. மற்றபடி கதை எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு முடிகிறது என்று ஒரு வரையறையில் இல்லை. கமர்ஷியல் மசாலாப் படங்களை விரும்பும் ரசிகர்களுக்குக்கூட இப்படம் சலிப்பை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!