வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (13/02/2018)

கடைசி தொடர்பு:17:08 (13/02/2018)

அடல்ட் பட கேரக்டராக கவனம் ஈர்க்கிறாரா அஞ்சலி? ‘ரோசாப்பூ’ படம் எப்படி? #rosappoo

ஏதோ ஒருவகையில் ஒரு தொழிலை வெற்றிகரமாகச் செய்துவிடவேண்டும் எனத் துடிக்கும் இருவர் சந்திக்கும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் பற்றிச் சொல்கிறது, மலையாள பிளாக் காமெடி திரைப்படம் 'ரோசாப்பூ' #Rosappoo 

ரோசாப்பூ

ஷனு என்கிற ஷாஜஹான் (பிஜு மேனன்) கழுத்தளவு கடனில் சிக்கித் தவிக்க, கடன்காரர்களுக்கு ஏதேதோ காரணம் சொல்லி எஸ்கேப் ஆகிறார். ஒரு கட்டத்தில் லோக்கல் கேபிள் சேனலில் வேலை செய்யும் அம்ப்ரோஸுடன் (நீரஜ் மாதவ்) இணைந்து எம்.பி.ஏ படித்த பானு (பசில் ஜோசப்) பேச்சைக்கேட்டு முட்டை வியாபாரம் செய்கிறார்கள். அதிலும் நஷ்டமடைகிறார்கள். 

மீண்டும் பானுவின் பேச்சைக்கேட்டு பிரபல ஸ்டார் லைலாவை வைத்து ஒரு அடல்ட் படம் எடுக்க முடிவு செய்கிறார்கள். இதற்காக பலரையும் தாஜாசெய்து, ‘பெரிய லாபம் தருகிறேன்’ என்றுகூறி பணம் வாங்குகிறான் ஷனு. பரதன்போல் பெரிய இயக்குநராக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் அம்ப்ரோஸோ, ‘இந்த விஷயம் தன் காதலி சான்ட்ராவுக்குத் (ஷில்பா மஞ்சுநாத்) தெரிந்தால் பிரச்னை வரும்’ என்று பயப்படுகிறான். லைலாவை வைத்து படம் எடுப்பதற்காக சென்னை வரும் ஷனு, அம்ப்ரோசிற்கு புரொடக்ஷன் மேனேஜர் சஜீர்(சோபின் ஷஹிர்) உதவி செய்கிறார். அஞ்சலி எப்படி இவர்களுடன் இணைகிறார், இவர்களது கடன் பிரச்னைகள் தீர்ந்ததா, அம்ப்ரோஸ் - சான்ட்ரா காதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.

காமெடி, கலாய் என பிஜு மேனன் தனது கேரக்டருக்குத் தேவையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் வரும் 'முட்டை முட்டை' பாட்டில் ஆடுவதாகட்டும், தான் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் தலைகுனிந்து நிற்பதாகட்டும் அனைத்தும் யதார்த்தம். நீரஜ் மாதவ், ஒரு படத்தை இயக்குவதை கனவாகக் கொண்டிருப்பவனுக்குச் சூழ்நிலையால் பி கிரேடு படம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோமே என வெதும்பும்போதும், தன் காதலை சான்ட்ராவிடம் வெளிப்படுத்த தயங்கும்போதும், கவர்ச்சி நடிகையாக வரும் அஞ்சலியிடம் பேசக் கூச்சப்படும்போதும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். 

ரோசாப்பூ

ஷில்பா மஞ்சுநாத், சிறிது நேரமே வந்தாலும் நம்மைக் கவர்கிறார். எங்கெங்கோ செல்லும் படத்தை ஒரு புள்ளியில் நிறுத்த முயற்சி செய்திருக்கிறார் அஞ்சலி. 'மேக் அப், உடை... என அனைத்தையும் தாண்டி தானும் ஒரு பெண்தான்' என்று உணர்த்தும் வகையில் ஒரு கிளாமர் நடிகைக்கான யதார்த்ததை பிரதிபலிக்கிறார். ஏமாற்றுவதை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ப்ரொடக்‌ஷன் மேனேஜராக சோபின் ஷஹிர், அவ்வப்போது நமக்குக் கோபம் வரவைக்கிறார். 

'நோ லாஜிக் காமெடி’யாக ஆரம்பித்த படம், எல்லாவற்றைப் பற்றியும் பேசிவிடவேண்டும் என்ற நோக்கில் எங்கெங்கோ நம்மைக் கூட்டிச்செல்கிறது. இரட்டை வண்டியில் ஒற்றை சவாரி என்பதுபோல ஷனு மற்றும் அம்ப்ரோஸ் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னையில் ஆரம்பித்த இயக்குநர் வினு ஜோசப், கவர்ச்சி நடிகைகளின் வாழ்க்கையை ஏளனமாக எண்ணக் கூடாது எனப் பாடம் எடுத்தது, ஒரு சினிமா எடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என மிகவும் பொதுப்படையான விஷயங்களைக் கூறியது... என எதையும் முழுமையாய் ஆரம்பித்து முடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. நடிகர்கள் நன்றாகவே நடித்திருந்தாலும், ‘இதுதான் கதையின் மையப்புள்ளி’ என்று சொல்லமுடியாத வகையில் உள்ள ஸ்கிரிப்டால் மற்ற தொழில்நுட்ப விஷயங்களும் பெரிதாக எடுபடவில்லை. 

வசனங்கள் பவர்ஃபுல்லாக அமைந்திருந்தாலும், ஊகிக்கக்கூடிய காட்சிகள், திரைக்கதையைத் தொய்வடையவைக்கிறது. விட்டுப்பிரிந்த காதலியைப் பற்றி கவலைப்படாமல் அம்ப்ரோஸ் நடிகையுடன் காதல் கொள்கிறான். கடன் வாங்கி ஆரம்பித்த தொழிலை, இன்னொருவனை வைத்து பார்த்துக்கொள்ளும் ஷனு... எனக் கதாபாத்திர அமைப்பிலும் ஏகப்பட்ட முரண்கள். இதனால் ‘ரோசாப்பூ’ நமக்கு எவ்வித உணர்வையும் தரத் தவறுகிறது. இரண்டாம் பாதியில் வரும் அஞ்சலியின் நடிப்புக்காக ‘ரோசாப்பூ’வை ஒருமுறைப் பார்த்து வரலாம். 

 

 


டிரெண்டிங் @ விகடன்