Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

வினித்-சீனிவாசன்; அப்பா மகன் காம்போ கவர்கிறதா? `அரவிந்தன்டே அதிதிகள்’ படம் எப்படி? #AravindanteAthidhikal

மீபத்திய மலையாளப் படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் புதிய பாடங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் சீனிவாசன் அவர்களின் மகன் வினீத் சீனிவாசன் படங்களுக்குத் தனி இடம் உண்டு. இயக்குநராக மட்டுமன்றி ஒரு நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். அவரின் நடிப்பில் வெளி வந்திருக்கும் அரவிந்தன்டே அதிதிகள் (அரவிந்தனின் விருந்தினர்கள்) படம் எப்படி?

அரவிந்தன்டே அதிதிகள்

சிறு வயதில் தன் தாயால் கைவிடப்பட்ட அரவிந்தன் (வினீத் சீனிவாசன்) கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் அருகில் இருக்கும் லாட்ஜ் ஒன்றை வைத்திருக்கும் மாதவனால் (சீனிவாசன்) வளர்க்கப்படுகிறான். தன் தாய் தன்னை விட்டுச் சென்ற இடமாக அவன் அந்தக் கோயிலைக் கருதுவதால் வளர்ந்த பின்னரும் கோயிலின் உள்ளே செல்ல மறுக்கிறான். அவன் வாழ்க்கை எப்படி இருக்கிறது? வரும் விருந்தினர் அனைவரையும் அன்புடன் உபசரிக்கும் அவன், தன் கதை மூலம் தியேட்டருக்கு வந்த விருந்தினர்களை மகிழ்விக்கிறானா?

ஒரு நவராத்திரி தினத்தில் தொடங்கும் படம் மற்றொரு நவராத்திரி தினத்தில் முடிகிறது. இடைப்பட்ட நாள்களில் அரவிந்தனுடைய விருந்தினர்களுக்கும் அவனுக்குமான நெகிழ்ச்சியான உறவாடல் ஒரு கதை அல்லது கிளைக்கதை, அரவிந்தன் தொலைத்த தன் தாயை அவன் மீண்டும் காண்கிறானா, அவன் கோயிலுக்குள் சென்றானா என்பது இன்னொரு கதை அல்லது கிளைக்கதை.

விடுதிக்கு வரும் விருந்தினர்கள், புனிதத் தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தின் வாழ்வியல் போன்றவற்றை அழுத்தமாகப் பதிவு செய்கிறது அந்த `கிருபாஹரி தேவி' டைட்டில் பாடல். கொல்லூர் மூகாம்பிகை கோயிலைச் சுற்றியுள்ள இடங்கள், அங்கு உலவும் மனிதர்கள் என அதில் அவ்வளவு யதார்த்தம். பாடலின் இசையும் வரிகளும் அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. படத்தின் அந்த முதல் சில நிமிடங்களும் இறுதி சில நிமிடங்களும் எந்த வசனங்களும் இல்லாமல் முதலில் பதைபதைப்பையும் இறுதியில் நெகிழ்ச்சியையும் பார்வையாளர்களுக்குக் கடத்துவது இது ஒரு காட்சி ஊடகம் என்பதை அழுத்தமாக நிரூபிக்கிறது.

அரவிந்தன்டே அதிதிகள்

மூகாம்பிகை கோயிலையொட்டியுள்ள, 24 மணி நேரப் பாதுகாப்பு, சுடுநீர், சுத்தமான வீட்டுச் சாப்பாடு, இன்டர்நெட் வசதி, டிஸ்கவுன்ட் எல்லாம் கிடைக்கக்கூடிய (?) லாட்ஜின் ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக நச்செனப் பொருந்திப் போகிறார் வினித் சீனிவாசன். எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் கால்கள், வசீகரச் சிரிப்பு, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பேச்சு என்று தன் கவலை மறந்து திரிகிறார். தன் தாய் தன்னை விட்டுபோன அந்தச் சம்பவம் அவருக்குப் பெரிய சோகத்தை ஏன் தருவதில்லை என அவர் விவரிக்கும் காட்சிகள் நெகிழ்ச்சி. ``எங்கம்மா என்னை எல்லோரோட அம்மாகிட்டதானா (மூகாம்பிகை தேவி) விட்டுட்டுப் போயிருக்காங்க? அது ஒண்ணும் பிரச்னை இல்ல!" எனச் சமாளித்தாலும், இறுதிக்காட்சியில் சோகம், படபடப்பு, நெகிழ்ச்சி என மனிதர் வேறு தளத்துக்குச் செல்கிறார். அதுவும் இடைவேளையின்போது தன் சோகத்தைத் திரையிட்டு மறைத்துவிட்டு, ஆளே இல்லாத பேருந்து நிலையத்தில் தன் லாட்ஜிற்கு ஆள் பிடிக்கச் செல்லும் அந்தக் காட்சி அவரின் கதாபாத்திரத்தை மேலும் ரசிக்க வைக்கிறது.

அரவிந்தன் மூகாம்பிகை கோயிலுக்கு வரும் கதை (தவறவிடக்கூடாத முதல் மூன்று நிமிடங்கள்), லாட்ஜில் வரும் விருந்தினர்களை உபசரிக்கும் கதை, மூகாம்பிகை கோயில் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கதாநாயகி வந்து தங்கி இருவருக்குமான பிணைப்பு வெளிப்படும் காட்சிகள் என முதல் பகுதி முழுக்க விரிவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அரவிந்தனின் பிரச்னை இரண்டாம் பாதியில் எப்படிச் சரியாகப் போகிறது என்பதாக எடுத்துச்செல்லப்படுவது வரை நகைச்சுவையாக எழுதப்பட்ட திரைக்கதை சூப்பர் பாஸ். ஆனால், அதே திரைக்கதை இரண்டாம் பாதியில் ஒரு தேவையற்ற ட்விஸ்ட், கொஞ்சம் தேடல், நிறைய நாடகத்தனம் எனக் கொஞ்சம் சோதிக்கிறது. படத்தின் இறுதிக் காட்சி மீண்டும் ஓர் அற்புதமான வசனங்களற்ற காட்சிமொழி, வினித்தின் நடிப்பு என நமக்கு ஒரு ஃபீல் குட் படம் பார்த்த திருப்தியைத் தந்து அனுப்புகிறது.

அரவிந்தன்டே அதிதிகள்

சீனிவாசன் படத்தில் பெரும்பகுதி பேசாமலேயே நடிப்பால் கவர்கிறார். சாந்தி கிருஷ்ணாவின் (`கோடைக்கால காற்றே...' அதே `பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி கிருஷ்ணாதான்) தொலைபேசி அழைப்பைப் பார்த்த உடன் சீனிவாசன் தரும் பார்வையும், நிகிலாவின் கேள்விக்கு அவரின் மௌனமும், இறுதிக்காட்சியில் வினித்தை அழைத்துவரும் காட்சியும்… லால் சலாம் சேட்டா! அவருக்கு அடுத்து படத்தை தாங்கிப் பிடித்திருப்பது கதாநாயகியின் தாயாக வரும் ஊர்வசி. இடைவெளி இல்லாமல் பேசியே நம்மைச் சிரிக்க வைக்கிறார். வழக்கமான அம்மா கதாபாத்திரம்தான் என்றாலும், வெகு யதார்த்தமாக எல்லோரையும் லெஃப்டில் டீல் செய்யும் அவரின் நடிப்பு அற்புதம். அதுவும் சீனிவாசனின் புத்தகங்களைக் கீழே இறைத்துவிட்டு கூலாக அவரையே டீல் செய்யும் இடம், அப்ளாஸ்! அஜூ வர்கீஸும் நகைச்சுவையில் அதகளம். `பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி கிருஷ்ணா இரண்டாம் பகுதியில் குறைவான நேரம் வந்தாலும் நடிப்பில் அசத்துகிறார். 

முதல் பாதி முழுக்க ஒவ்வொரு வசனத்திலும் நகைச்சுவை அள்ளித் தெளித்திருப்பதில் திரையரங்கமே வயது வித்தியாசம் இல்லாமல் சிரித்துக் கொண்டாடுகிறது. வினித், சீனிவாசன் இருவரின் முக அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பது பற்றிய கமென்ட், ஊர்வசி லாட்ஜில் அடிக்கும் லூட்டிகள், அஜூ வர்கீஸ் செய்யும் காமெடி என முழுவதும் நகைச்சுவை கலாட்டாதான். மலையாள சினிமாக்களில் அடிக்கடி நக்கலடிக்கப்படும் உருப்பெருத்த கறுப்புத் தமிழர்களை வைத்துச் செய்யப்படும் நகைச்சுவை படத்தின் பெரிய நெருடல். அதைத் தவிர்த்திருக்கலாமே பாஸ்?

மூகாம்பிகை கோயில், கொடச்சேரி மலையின் பிரமாண்டம், உடுப்பி, கும்பகோணம், பரதநாட்டியம் போன்ற காட்சிகளில் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய பலம். அதிலும் கொடசேரி மலையின் பிரமாண்டத்தை காட்சிப்படுத்தியது அட்டகாசம். வசனங்களே இடம்பெறாத முதல் மற்றும் இறுதிக்காட்சிகளை இசை முழுக்க முழுக்க தூக்கிச் சுமக்கிறது. படம் நெடுக இசைக்கு முக்கியப் பங்குண்டு. வினித்தின் குரலில் தாயைப் பற்றிய வரிகள் மீண்டும் மீண்டும் பல இடங்களில் ஒலித்து காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. வினித்தின் நெருங்கிய நண்பரும் சமீபத்திய வைரலான ஜிமிக்கி கம்மலின் இசையமைப்பாளருமான ஷான் ரஹ்மானின் இசை படத்தின் பெரும் பலம். 

தட்டத்தின் மறயத்து, ஓர்மயுண்டோ ஈ முகம் (நடிகராக) என வினித்தின் முந்தைய படங்களில் ஓவியங்கள் எப்படி திரைக்கதையில் ஒரு தொடர்பு புள்ளியாக இருக்குமோ அப்படியே இந்தப் படத்திலும் ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களில் இடம்பெற்ற இடங்கள் அப்படியே இருப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர். படம் ஃபீல் குட் என்றாலும், தளபதி மற்றும் கர்ணன் கதையை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை! குழந்தைகளுடன் விளையாடும், பாடம் கற்பிக்கும், இயலாதவர்களுக்கு உதவும், அனைவரின் மீதும் அன்பைப் பொழியும் நாயகனை அருகிலேயே இருந்து அவன் மீது ஈர்ப்பு கொள்ளும் நாயகி. நாயகனின் சோகமயமான ஃபிளாஷ்பேக்கைக் கேள்விப்பட்டு அவன் மீதான ஈர்ப்பு, நேசமாக, காதலாக உருமாறுவது எனப் படம் முழுக்க பசுமையான க்ளிஷேக்கள் அதிகம். 

ஆனால், அரவிந்தன் தன்னுடைய அதிதிகளை (விருந்தினர்களை) எப்படி தன் லாட்ஜில் இருக்கும் சின்னச் சின்ன குறைகளையும் மறக்கச் செய்து திருப்தியடையச் செய்கிறானோ அதுபோலவே படம் பார்க்க வந்த அதிதிகளையும், படத்தின் குறைகளை மறக்கச் செய்து மகிழ்வித்திருக்கிறான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement