சரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா! #Sammohanam

தெலுங்கில் அவ்வப்போது சில மனதைத் தொடும் படங்கள் அங்கே வருவது உண்டு. 'பெல்லி சூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி' போன்ற படங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். அப்படி இந்த வருட ஃபீல் குட் கோட்டாவில் வந்திருக்கிறது சம்மோஹனம் (Sammohanam). 

சரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா! #Sammohanam

திரடிக்கும் பன்ச் வசனங்கள், இயற்பியல் விதிக்கு எதிரான சண்டைக் காட்சிகள், கலர் கலர் செட்களில் எடுக்கப்பட்ட குத்துப்பாடல்கள்... ஒருகாலத்தில் இவை மட்டுமேதான் தெலுங்கு சினிமா. ஆனால், எளிய மனிதர்களின் இயல்பை மீறாத கதைகள், மனதைத் தொடும் காட்சிகள்... என்று அக்கட தேசத்தில் கலைத்துறையின் கலரையே மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 'பெல்லி சூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி' போன்ற சினிமாக்கள் அதற்கு ஆகச்சிறந்த உதாரணங்கள். அப்படியான ஃபீல் குட் கோட்டாவில் இந்த வருட வருகை, சம்மோஹனம் (Sammohanam). 

Sammohanam

சமீரா ரதோட் (அதிதி ராவ் ஹைதரி) தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல நடிகை. விஜய் (சுதீர் பாபு) ஓர் ஓவியன்! இருவரின் உலகங்களும் வெவ்வேறானவை. போதாக்குறைக்கு விஜய்க்கு சினிமா என்றாலே சுத்தமாக ஆகாது. ஆனால், இருவரையும் அருகில் வைத்து அழகு பார்க்கிறது சுதீர் பாபுவின் தந்தை நரேஷ் விஜய் கிருஷ்ணாவின் சினிமா ஆசை. ஆம், அதிதியின் அடுத்தப்பட ஷூட்டிங் சுதீர் பாபுவின் வீட்டிலேயே நடக்க, இருவருக்கும் உருவாகும் தொழில் சார்ந்த நட்பு, காதலாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ஆனால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள விடாமல் தடுக்கிறது அதிதியின் இறந்த கால ரகசியங்கள். நிகழ்காலத் தடைகளாக நிற்கும் அந்த ரகசியங்களை கடந்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?

படத்தின் இயக்குநர் மோகனகிருஷ்ண இந்திராகாந்தி, 'தேசிய விருது’ பெற்ற 'க்ரஹணம்', 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்', 'ஜென்டில்மேன் (2016)' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இந்த முறை அவர் கையில் எடுத்திருப்பது ஒரு ரொமான்டிக் காமெடி. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த 'நாட்டிங் ஹில்' (Notting Hill) திரைப்படத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நம் ரசிகர்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருக்கிறார். 

நாயகனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மூட்டைக்கட்டி வைக்கும் வகையில் எட்டிப் பார்க்கும் காதல், திரை நட்சத்திரமேயானாலும் நாயகி ஒன்றும் வானில் இருந்து குதித்தவள் இல்லை என்பதுபோல் அவளுக்குள் பூக்கும் காதல் என்று மிகவும் இயல்பாக நகர்கிறது கதை. அதிலும் படம் நெடுக வரும் காமெடிக் கலாட்டாக்கள் வெறும் சிரிப்பை மட்டும் வரவழைப்பதாய் இல்லாமல், தெலுங்குச் சினிமாவின் மசாலா பாணி, தெலுங்கே பேசத் தெரியாத நடிகைகள், கிளிக்-பெயிட் (Clickbait) கிசுகிசு இணையத்தளங்கள், இயல்பை மீறி ஹீரோயிசம் செய்யும் ஹீரோக்கள்...  என்று அனைத்தையும் கலாய்த்து கைதட்டல்களை அள்ளுகின்றன.

Sammohanam

இந்தியில் ஒரு சில படங்கள், தமிழில் 'காற்று வெளியிடை', தற்போது 'செக்க சிவந்த வானம்' என்று பிஸியான அதிதி ராவ் ஹைதரிக்கு தெலுங்கில் இது அறிமுகப் படம். அதுவும் சொந்தக் குரலில் வேறு பேசியிருக்கிறார். சரியாகத் தெலுங்கு பேசத் தெரியாத முன்னணி கதாநாயகி என்பதுதான் அவரின் கதாபாத்திரம்  என்பதால் அவருக்கு அது மிகவும் இயல்பாகப் பொருந்திப்போகிறது. நாக்கைத் துருத்திக்கொண்டு குறும்புகள் செய்வது, மழை நின்ற மொட்டை மாடியில் சுதீர் பாபுவுடன் ஃப்ளிர்ட் (flirt) செய்வது, தேங்கி நிற்கும் கண்ணீருக்குள் ரகசியங்களை மறைப்பது, காதல் வந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் தயங்கி நிற்பது... இப்படி நடிப்பில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பெறுகிறார். 

அவருக்கு அடுத்து படத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பவர் சுதீர் பாபுவின் அப்பாவாக வரும் நரேஷ்! மனிதர் இயல்பின் உச்சியில் நின்று நடித்திருக்கிறார். நடிகனாக தனக்கு கொடுக்கப்பட்ட முதல் காட்சியிலேயே டேக் ஓகே வாங்குவது, அது திரையில் வராமல் போக தியேட்டரிலேயே நின்று அலம்பல் செய்வது, இரண்டாம் பாதியில் பெரிய ரவுடியாக ஓவர்ஆக்ட் செய்து பயமுறுத்துவது, சினிமாவில் ஆர்வம் கொண்டவராக, மகனுக்கு எதிர் துருவமாக நிற்பது என ரணகளப்படுத்துகிறார். 

Sammohanam

கதை, திரைக்கதை எப்படியிருக்கிறது என்ற விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு படத்தில் பல காட்சிகள் உணர்வுப்பூர்வமாகத் தனித்து நிற்கின்றன. அதுவரை நடிகை என்ற உலகத்தில் வாழ்ந்துவிட்ட அதிதி, முதன்முறையாக ஓர் இயல்பான பெண்ணாக சுதீருடன் வெளியே செல்லும்போது தன் புகைப்படம் கொண்ட விளம்பர பேனர்கள், பத்திரிகைகள் போன்றவற்றை பார்த்து ஒரு சாதாரண பெண்ணாகப் பிரமிப்பது, சுதீரின் தாயாக வரும் பவித்ரா லோகேஷ், தன் கணவரின் நடிப்பார்வத்தைக் கிண்டல் செய்தாலும், அவர் முதன்முதலில் நடிக்கும்போது தன்னை அறியாமல் பதற்றம் கொள்வது, காதல் தோல்வி அடைந்த மகனிடம் தன் இறந்தகால காதல் தோல்விக் கதையைப் பகிர்ந்துகொள்வது... இப்படி படம் முழுக்க ஹைக்கூ காட்சிகள் ஏராளம். அதிலும் மொத்தப் படத்தின் சாரத்தையும் ஓவியனாக சுதீர் வெளியிடும் புத்தகத்தின் ஒருசில ஓவியங்களில் புதைத்தது, பின்னர் அதே கதையை அதிதி வேறோர் கோணத்தில் கூறுவது போன்றவை பாராட்ட வேண்டிய இடங்கள்.

இத்தனை பிளஸ்கள் இருந்தும், முதல் பாதியில் இருந்த அந்த மேஜிக், இரண்டாம் பாதியில் முற்றிலும் மிஸ்ஸிங். அதிலும் அதிதியின் அந்த முக்கியமான ஃப்ளாஷ்பேக் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. அதையும் வெறும் வசனங்களால் அவரின் உதவியாளர் ஹரி தேஜா விவரிக்கும் காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கும் இடங்கள். அதிதியும் சுதீரின் தந்தையும் நடிப்பில் மிரட்ட, சுதீர் மிகவும் செயற்கையாக வந்து போகிறார். ஒரு சில காட்சிகளில் ஸ்கோர் செய்தாலும், படத்திற்குப் பக்கபலமாக அவர் மாறவே இல்லை. அவரின் நண்பர்கள், தந்தை நரேஷ், அதிதி போன்றோரே அவர் தோன்றும் காட்சிகளைக் காப்பாற்றுகிறார்கள்.

Sammohanam

இயல்பாக நகர்ந்து முடிந்த முதல் பாதிக்கு பிறகு, சோகங்கள், தோல்விகள் என்று வரும்போது கதாநாயகனின் பிரச்னைகளை சீரியஸாக அணுகிவிட்டு, அவர் தந்தையின் பிரச்னைகளை மட்டும் காமெடியாக அணுகுவது, இதையும் மசாலா படமாக மாற்றி விடுகிறது. ஆரம்பத்தில், எதிர்த்துப் பேசி கிண்டல் செய்த தெலுங்கு சினிமா கிளிஷேக்களுக்குள் இறுதியில் இந்தப் படமும் விழுந்துவிட்டதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை! 

இருந்தும், சரவெடி காமெடி, அதிதியின் நடிப்பு, அந்த ஃபீல் குட் ரொமான்ஸ்... இதற்காகவே 'சம்மோஹனம்' (Sammohanam) படத்தைக் கொண்டாடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!