`வாழ்வதற்கு எப்போதும் போராடிக்கொண்டேயிருக்க வேண்டும்!' மனிஷா கொய்ராலா #HBDManishaKoirala

மனிஷா கொய்ராலா

திரைப்படத்தில் ஜொலிப்பவர்கள் தங்களது அடுத்த இலக்காக, அரசியலில் குதிப்பது இந்திய அளவில் மிகப்பெரிய ஃபேஷன். ஆனால், அரசியல் குடும்பப் பின்னணியிலிருந்து சினிமாவில் நுழைந்து, அழகாலும் திறமையாலும் 1990-களில் ரசிகர்கள் மனதில் ஆட்சி செய்தவர், மனிஷா கொய்ராலா. அவரது பிறந்தநாள் (ஆகஸ்ட் 16) இன்று. 48 வயதைத் தொடும் இவர், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்தார். இவரின் தாத்தா, பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா. நேபாளத்தின் முன்னாள் பிரதமர். தந்தையான பிரகாஷ் கொய்ராலா, முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். சகோதரரான சித்தார்த் கொய்ராலா நடிகர்.

1989-ம் ஆண்டு, நேபாள சினிமாவில் அறிமுகமானார் மனிஷா கொய்ராலா. 1991-ல், `சாடுகர்' என்ற ஹிந்தி படம் மூலம், பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். 1995-ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில், `பாம்பே' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படம் அவரின் சினிமா வாழ்க்கையின் மைல்கல். தமிழ், ஹிந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார்.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் `இந்தியன்', ரஜினிகாந்த் ஜோடியாக `பாபா', அர்ஜூனுடன் `முதல்வன்' எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து அசத்தினார். சிறு இடைவெளி விட்டு, தனுஷின் மாமியாராக `மாப்பிள்ளை', ஒரு மெல்லிய கோடு ஆகிய படங்களில் நடித்தார். 2010-ம் ஆண்டு, தொழிலதிபர் சாம்ராட்டைத் திருமணம் செய்துகொண்டவர், 2012-ம் ஆண்டில் விவகாரத்து பெற்றார். திருமண பந்தம் மூலம் அன்பை எதிர்பார்த்தவருக்குப் பெரும் ஏமாற்றமே கிடைத்தது. எதுவொன்றுக்காகவும் தன் சுயமரியாதையை இழந்துவிடக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பவர்.

இவருக்குக் கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, நியூயார்க் நகரின் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் சிகிச்சைபெற்று மீண்டார். தற்போது, அந்நோய் குறித்து விழிப்புஉணர்வில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். ``வாழ்க்கையை வாழ எப்போதும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்து நோயை எதிர்த்துப் போராடினேன். வாழ்க்கை ஒரு பரிசு. அதை மதித்து அனுபவித்து வாழ வேண்டும்" என்பார் மனிஷா கொய்ராலா.

மனிஷா

சமீபத்தில் வெளியான ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `சஞ்சு'வில், சஞ்சய் தத்தின் தாய் நடிகை நர்கீஸ் தத் வேடத்தில் நடித்தார். நர்கீஸ் தத், புற்றுநோய் பாதிப்பால் இறந்தவர். மனிஷா அந்நோயிலிருந்து மீண்டவர். எனவே, அதன் கஷ்டங்களை உணர்ந்து நடிக்க முடியும் என அவரை நர்கீஸின் பாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தாகப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கூறியுள்ளார்.

ஓய்வு நேரத்தில் நடைப்பயிற்சி, தோட்டப் பராமரிப்பு, படிப்பது, எழுதுவது, படங்கள் பார்ப்பது, பயணம் செய்வது தவிர குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவார் மனிஷா. தனது வாழ்க்கை வரலாற்றை சக ஆசிரியர் ஒருவருடன் இணைந்து எழுதி வெளியிட இருப்பதாகவும், பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்கப்போவதாகவும் கூறியுள்ளார். புற்றுநோய் தாக்குவதற்கு முன் பல படங்களில் புகைப்பிடிப்பதுபோல நடித்தவருக்கு, நோயின் கொடூரத்தில் சிக்கியதும்தான் புகையினால் ஏற்படும் தீங்குப் பற்றி முழுவதாக உணர்ந்தார். ஆனபோதும், மற்ற நோய்களைப் போல கேன்சரும் குணமாக்கக் கூடிய ஒன்றுதான் என்பதை மக்களிடையே விழிப்பு உணர்வு அளிக்க வேண்டியதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

1999-ம் ஆண்டில் நேபாளம் சார்பில், ஐ.நாவின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். நேபாள நாட்டிலிருந்து இளம்பெண்களை அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்துவோர்க்கு எதிராகப் போராடி பல பொதுசேவைகளையும் செய்துவருகிறார்.

மனிஷா கொய்ராலா தன் வாழ்க்கை மூலம், பெண்கள் ஒரு துறையில் சாதிக்கப் போராட வேண்டும் என்பதை மட்டும் சொல்லவில்லை. உயிரே போய்விடலாம் எனும் சிக்கல் வந்தாலும், அஞ்சாமல் எதிர்கொண்டு முன்னேறி வர வேண்டும். சிறிய தயக்கமும் நம் நம்பிக்கையை உடைத்துவிடும் என்பதையும் சொல்லிவருகிறார். 

வாழ்த்துகள் தன்னம்பிக்கை நாயகியே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!