ஹாலிவுட்டில் 'அவனா இவன்?' | பாலா, அனுராக் காஷ்யப், கமல், ஜானிடெப், லியோ

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (22/08/2013)

கடைசி தொடர்பு:15:11 (22/08/2013)

ஹாலிவுட்டில் 'அவனா இவன்?'

'நான் பாலாவின் தீவிர ரசிகன்’ என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சொன்னாலும் சொன்னார், பாலாவின் பெருமை ஒரே நாளில் அகில உலகப் புகழ் பெற்றுவிட்டது. கமல் போகிறாரோ இல்லையோ, பாலா ஹாலிவுட்டுக்குப் போய்விட்டார். (ச்சும்மா ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோமே பாஸ்!) இனி என்னவெல்லாம் நடக்கும்... இதோ கற்பனைக் குதிரையைக் கல்லைவிட்டு எறிஞ்சு வெரட்டுவோமா?

முதலில் ஹாலிவுட்டின் விக்ரமான ஜானி டெப் மற்றும் ஹாலிவுட் லவ்வர் பாய் லியானர்டோ டி காப்ரியோ இருவரின் கால்ஷீட்டையும் இரண்டு வருடங்களுக்குக் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார். 'காட் ஃபாதர்’ படத்தின் கடைசி பார்ட் என்று அமெரிக்க மீடியாக்கள் வளைத்து வளைத்து எழுத, ''இது முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஜனரஞ்சகமான படம். டைட்டில்கூட சிம்பிளாக 'ஹீ அன்ட் ஹீ’ என்று வைத்திருக்கிறேன் பாருங்கள். நிச்சயம் 'ஹிஹி’ என தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்'' என்று பாலா தாண்டவம் ஸ்டார்ட்ஸ்...

வழக்கம்போல ஜானிடெப் மற்றும் லியோவின் ஹேர் ஸ்டைலைப் புல்வெட்டும் கத்திரிக்கோலால் சீரில்லாமல் தன் கையாலேயே வெட்டி எறிகிறார். ஜானிக்கு மண்டையில் யானைச் சாணி தெளிக்கப்பட்டு அடர் ஆரஞ்சு நிறத்துக்கு ஹேர் கலர் மாற்றப்படுகிறது. லியோ தலையில் ரோபோ ஒன்று மினி டிராக்டரைக்கொண்டு உழுகிறது. அப்புறம் என்ன பாஃப்தா, எம்மி, கிராமி, அகாடமி, ஆஸ்கர் என எந்தத் திரைப்பட விழாக்களுக்கும் குல்லா போட்டுத்தான் இருவரும் போகிறார்கள். படத்தின் கதை இலாகாவினர் படுரகசியமாக வைத்திருந்தும் லீக் ஆன படத்தின் ஒன்லைன் வேணுமா? கேட்டுக்குங்க!

ஜானி, அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் கடைக்கோடிக் கிராமத்தில் பிறந்த பாதி லூஸான பாசக்காரப் பயல். லியோ... கெண்டகி மாகாணத்தில் இருக்கும் கோழிப்பண்ணை ஒன்றில் கோழி திருடும் விளிம்புநிலை மனிதன். (ஆமா, கதவு ஓரத்தில, விளிம்புல நின்னுக்கிட்டே கோழியை லபக்கிடுவான்).  இருவரும் கொலரோடோ மாகாணத்தில் இருக் கும் ஒரு சிறையில் சந்திக்கின்றனர். அளவுக்கதிகமாகப் பொய்ப் பித்தலாட்டம் பண்ணும் லியோவுக்கு, சாந்த சொரூபியாக இருக்கும் ஜானியின் பேரமைதி பேருவகைகொள்ள வைக்கிறது. சிறையில் இருக்கும் சக கைதிகளைக் கலாய்ப்பதையே முழுநேர வேலையாகக்கொண்ட லியோவுக்கு, ஜெயிலுக்குள் எதிரிகள் முளைக்கின்றனர். ஒரு மத்தியான நேரத்தில் மட்டன் கட்லெட் சாப்பிட்டு மல்லாந்து படுத்துக்கிடக்கும் லியோவைக் குண்டுக்கட்டாகத் தூக்கிப்போய் டார்ச்சர் ரூமில் வைத்து வெளுத்தெடுக்கிறார்கள். நையப்புடைத்துக் கிழிந்த கோணிச்சாக்காய் லியோவை செல்லுக்குள் கொண்டுவந்துபோடுகிறது போலீஸ். வாய் கோணிப் படுத்திருக்கும் லியோ மீது ஜானிக்கு அன்பு பீறிடுகிறது. நட்புக் களிம்பு பூசுகிறார் ஜானி. இந்த இடத்தில் சின்னதாய் ஒரு ட்விஸ்ட்.

இவர்கள் இருவரையும் முகம் தெரியத ஒருவர் ஜாமீனில் எடுக்கிறார். டென்வர் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் 75 வயதான ஆன்டனி ஹாக்கின்ஸ்தான் அந்த ஜாமீன் பார்ட்டி. காரணம் புரியாமல் நாய்க்குட்டிபோல இருவரும் அவர் பின்னால் போகின்றனர். அப்புறம்தான் தெரிகிறது. இவர்கள் செல்லுக்குப் பக்கத்து செல்லில் இருந்தவர்தான் ஹாக்கின்ஸ் என்பது. தண்ணியடித்து ரோட்டில் படுத்திருந்ததால் ஒரு வாரம் செல்லில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அப்போது பக்கத்து செல்லில் இருந்த இருவரின் நட்பையும் கலைத் திறமையையும் கண்டு வியந்ததாகவும் அவர் வாயால் சொல்லக் கேட்டு நெகிழ்கிறார்கள். அப்புறம் என்ன... பாசப்பறவைகள் மூணாச்சு... ஜானிக்கும் லியோவுக்கும் வளர்ப்புத் தந்தை கிடைச்சாச்சு.

ஆனந்தக் கண்ணீரையே சைடு டிஷ்ஷாக தொட்டுக்கொண்டு ரம் அடித்து நட்பைக் கொண்டாடும் இவர்கள் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. கோழித் திருடன் லியோவை கோழிப்பண்ணை ஓனர் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்து கொரியர் சர்வீஸில் ஜானிக்கு அனுப்பிவைக்கிறான். பார்சலைப் பிரித்ததும் அமெரிக்காவின் பார்டர் தாண்டி கனடாவுக்கே கேட்கும் அளவுக்குப் பெருங்குரலெடுத்து அழுகிறான் ஜானி. முன்னாள் கவர்னர் ஜெனரல் ஹாக்கின்ஸை உறித்து உப்புத் தடவி நெவடா பாலைவனத்தில் கழுகுக்கு இரையாகப் போட்டுவிட்டுச் செல்கிறது அவரின் பங்காளி க்ரூப் ஒன்று. தன் மீது அன்பு வைத்திருந்த இரண்டு ஜீவன்களை அகாலத்தில் பறிகொடுத்த ஜானி எப்படி அந்தக் கொடூரன்களை குரல் வளையைக் கடித்துக் குதறிக் கொன்று, குடலை உருவி குருமா செய்து, சடலத்தை எரித்து அந்தச் சாம்பலை உடல் மீது பூசினார் என்பதே சிலிர்க்கவைக்கும் ஜிலீர் சுளீர் பகீர் க்ளைமாக்ஸ்!

'சரி, பாலா காமெடி படம்னுல்ல சொன்னாரு... ஒரே கொரவளையைக் கடிச்சித் துப்புற கதை யால்ல இருக்கு?’னு தானே கேட்குறீங்க மக்களே...? அதுக்குத்தான் தனி அஸோசியேட்ஸ் டீம் ரூம் போட்டு யோசிச்சு சீன் பிடிச்சு இருக்காங்க. சிறையில் இருக்கும்போது சிறைக் கைதிகளாக உள்ளூர் கூத்தாடி குரூப் ஒன்று வருகிறது. இது போதாதா? சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ, மடோனா, ஜெனிஃபர் லோபஸ் போல மிமிக்ரி செய்து ஆடிப் பாடுகிறது அந்தக் கும்பல். சமகால நடிகர்களின் மொக்கத்தனமான நடிப்பையும் கப்பித்தனமான டான்ஸையும் மார்லன் பிராண்டோ வாரு வாரு என வாருகிறார். சார்லி சாப்ளின் நம் ஊர் சந்திரபாபுவின் பாடலைப் பாடி ஆடுகிறார். இதுக்கு மேலயுமா ஒரு காமெடி வேணும்?

அப்புறம் என்ன, பாலா சாருக்கு ஒரு ஆஸ்கர் பார்சேல்!

-ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close