Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

த்ரிஷ்யம் என்னும் த்ரில்லர்!

 

லையாள சினிமாவுக்கு இது அறுவடை சீஸன்தான். ஜூனியர் முதல் சீனியர் வரை சிக்ஸர் அடிக்கிறார்கள். இங்கே ஜில்லாவில் சோபிக்காவிட்டாலும் மோகன்லாலின் சமீபத்திய படம் 'த்ரிஷ்யம்’ வரலாறு காணாத ஹிட். இவ்வளவுக்கும் லாலேட்டனின், 'ஏடா மோனே தினேஷா’ என்ற டயலாக்கோடு ஆக்ஷன் காட்சிகள் படத்தில்  இல்லை. சொல்லப்போனால் போலீஸ் விசாரணையில் அடி வாங்கிக் கதறி அழும் சாமான்யத் தகப்பனாய் நடித்திருக்கிறார் லாலேட்டன்.

த்ரிஷ்யம் என்றால் காட்சி என்று அர்த்தம். 'காட்சி’யின் கதை இதுதான்...

மோகன்லாலின் பெயர் ஜார்ஜ் குட்டி. கஷ்டப்படும் மிடில் க்ளாஸ் மாதவன். நான்காம் வகுப்பு ட்ராப் அவுட். அவருக்கு மீனா போன்ற (மீனாவேதான்!) மனைவியும் ரெண்டு பெண்குட்டிகளும் உண்டு. அனாதையாக வளர்ந்ததால் காசை அளந்து செலவு பண்ணி வாழ்பவர். கிராமத்தில் ஒதுக்குப்புறமாக அமைதியாக வாழ்ந்துவரும் மோகன்லாலுக்கு, சினிமா என்றால் கொள்ளை இஷ்டம். வெறித்தனமாக சினிமாக்கள் பார்ப்பார். லோக்கல் கேபிள் டி.வி நடத்தி வருமானம் ஈட்டி, வறுமையின் பிடியிலிருந்து மீண்டுவரும் மோகன்லாலுக்கு சினிமாதான் எல்லாம். முக்கிய முடிவுகளை சினிமாவைப் பார்த்து எடுக்கும் அளவுக்கு சினிமாப் பைத்தியம். இப்படி டிப்பிக்கல் குடும்பச் சித்திரமாக திரையில் விரிந்துகொண்டிருக்கும் காட்சிகள் சடாரென  மாறுகிறது. ஆம். மோகன்லாலின் ப்ளஸ் டூ படிக்கும்  மகள் அன்சிபாவுக்கு ஒரு கொடூரம் நிகழ்கிறது. ஒரு கேம்ப்பில் ஒளித்துவைக்கப்பட்ட கேமரா மூலம் அன்சிபா குளிக்கும் காட்சியைப் படமாக்குகிறான் ஒரு கொடூரன். அவன் பெண் போலீஸ் ஐ.ஜி-யின் செல்ல மகன். அந்தப் படங்களை வைத்து அன்சிபாவை பிளாக்மெயில் செய்ய, இரவில் மோகன்லால் இல்லாத சமயத்தில் வீட்டுக்குவருகிறான். வந்த இடத்தில் மீனாவுக்கும் அன்சிபாவுக்கும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறான். எதிர்பாராதவிதமாக அவனைத் தாக்கியபோது இறந்துபோக, அதைக் கடைக்குட்டியும் பார்த்து விடுகிறாள். அவனை வீட்டின் பின்புறம் புதைத்து விடுகிறார்கள். மோகன்லாலுக்கு விஷயம் தெரிந்ததும், தன் சினிமா அறிவால் அந்தக் கொலையை மறைக்க நுட்பமாக முயற்சி செய்கிறார். இதே வேளையில் மகன் தொலைந்துபோனதால், தீவிரமாக விசாரணையைத் துவங்கும் அந்தப் பெண் ஐ.ஜி மெள்ள மெள்ள உண்மையை நெருங்குகிறார். மோகன்லாலையும் அவருடைய குடும்பத்தையும் தனித்தனியாக விசாரிக்கிறார். ஆனால் மோகன்லாலின் பக்காவான கேம் ப்ளானால் சொல்லிவைத்ததுபோல பொய்யை உண்மை போல் சொல்கிறார்கள். அதே நாளில் டூர் போனதாகத் திட்டம் போட்டு அதை நிரூபிக்க சாட்சியங்களையும் அளிக்கிறார். ஆனால் நடுவே காமக்கொடூரனின் காரை டிஸ்போஸ் பண்ணும் காட்சியைப் பார்த்த, மோகன்லாலுக்கு ஆகாத ஒருவன் போட்டுக்கொடுக்க, எல்லாமே சொதப்பலாகி விடுகிறது.

போலீஸ் கஸ்டடியில் மோகன்லாலின் மகள் அன்சிபா பிணம் புதைக்கப்பட்ட இடத்தைச் சொல்கிறாள். ஆனால் தோண்டிப் பார்த்தபோது கன்றுக் குட்டியின் பிணம்தான் கண்டெடுக் கப்படுகிறது. மோகன்லாலும் அவர் குடும்பமும் அப்பாவிகள் என நிரூபணம் ஆகி விடுவிக்கப்படுகிறார்கள். அந்தக் கொடூரனின் பிணம் என்னவானது? மோகன்லால் எப்படி இந்தக் கொலைக் குற்றத்தில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி னார் என்பது பரபர ஜிகுஜிகு த்ரில்லர் கிளைமாக்ஸ்.

படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப்புக்கு இது ஐந்தாவது படம். ஏற்கெனவே டிடெக்ட்டிவ், மெமரீஸ் என்று அசத்தலான த்ரில்லர் படங் களைத் தந்த நம்பிக்கை இயக்குநர். மலையாள சினிமா வரலாற்றில் நம்பர் ஒன் த்ரில்லர் என வர்ணிக்கப்படும் 1982-ல் ரிலீஸான கே.ஜி.ஜார்ஜின், 'யவனிகா’ படத்துக்கு அடுத்து ஆல் டைம் ப்ளாக் பஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற த்ரில்லர் படம் 'த்ரிஷ்யம்’தான் என்கிறார்கள். கலெக்ஷனில் கல்லா கட்டும் இந்தப் படத்தைத் தமிழில் தயாரிக்க இப்போதே போட்டா போட்டி.

'ஜில்லா’வில் நடித்ததால் ஒரு குட்டும் 'த்ரிஷ்யம்’மில் நடித்ததால் ஒரு ஷொட்டும் லாலேட்டனுக்கு!

- ஆர்.சரண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?