மலையாள ரீமேக் எனும் மாயவலை! | மலையாள சினிமா, சினிமா, malaiyala cinema

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (24/02/2014)

கடைசி தொடர்பு:14:52 (24/02/2014)

மலையாள ரீமேக் எனும் மாயவலை!

சமீப காலமாக மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிறமொழிகளில் வெளியான நல்ல படங்களை மற்ற மொழி ரசிகர்கள் தவறவிடக்கூடாது என்ற நோக்கில் இது இருந்தாலும், அவ்வாறு வெளிவரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை (ஒரு சில படங்கள் தவிர்த்து) பெறவில்லை என்பதே உண்மை.

இதற்கு முன் 'மனுசித்திரத்தாழ்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'சந்திரமுகி', 'டிராஃபிக்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'சென்னையில் ஒருநாள்' போன்ற  ஒரு சில படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதற்குப் பின் வெளியாகிய படங்கள் அந்த அளவு ரசிகர்களைக் கவரவில்லை. சமீபத்தில் மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட சில படங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்,

'ஜன்னல் ஓரம்':
சுஜீத் இயக்கிய 'ஆர்டினரி' எனும் படமே இதன் அசல். அரசுப் பேருந்து ஓட்டுநரும் நடத்துனருமான, பிஜூ மேனனும், குஞ்சக்கோபனும் ஒரு விபத்து செய்துவிட அதில் ஒருவர் இறந்து போகிறார். அது யார்? உண்மையிலேயே என்ன ஆனது? இது தான் கதை. இது தமிழில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க 'ஜன்னல் ஓரம்' எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. கதையில் எந்த மாற்றமும் இல்லாமல் இது வெளிவந்த போதிலும் 'ஆர்டினரி'யில் இருந்த உயிர்ப்பு இதில் இல்லாமல் போனது, மலையாளத்தில் வெளியாகி வெற்றிகண்ட ஒரு படம் இங்கே கவனிக்கத்தக்க இயக்குநர் இயக்கியும் சரிவர ஜெயிக்காமல் போனது!

'மாலினி 22 பாளையங்கோட்டை':
ஆஷிக் அபு இயக்கத்தில் ரீமா கல்லீங்கல், ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி எல்லோரின் பாராட்டையும், பல விருதுகளையும் பெற்ற படம் '22  ஃபீமேல் கோட்டயம்'.  வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் அதற்கு காரணமானவர்களைப் பழிதீர்ப்பதே கதை. தமிழில் ஸ்ரீபிரியா இயக்கத்தில், நித்யா மேனன், கிரிஷ் நடிக்க 'மாலினி 22 பாளையங்கோட்டை' என்ற பெயரில் வெளியானது.

தன் இயல்பான நடிப்பால் ஏற்ற வேடத்தினை மிக அருமையாக செய்து மொத்தப் படத்தினையும் தனி ஆளாக சுமந்து நிற்பார் ரீமா கல்லீங்கல். தமிழிலும் அதையே எதிர்பார்த்த அனைவரின் முகத்திலும் ஏமாற்றமே. 'மாலினி 22 பாளையங்கோட்டை'. ஒவ்வொரு தனி கதாபாத்திற்கும் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை அத்தனை அழகாய் வெளிப்படுத்த இடம் கொடுத்திருந்தது திரைக்கதை, ஆனால் அதை மாற்றி தேவையில்லாமல் சில கேரக்டர்கள் செய்யும் அதிக பிரசங்கித்தனம், சரியான கதாப்பாத்திர தேர்வின்மை போன்ற காரணங்கள் மொத்த கதையின் கனத்தையும் கெடுத்தது. இந்த படம் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை என்கிற கவலை துளியும் வரவில்லை. நல்ல படத்தை ரீமேக் என்ற பெயரில் சரியாக் எடுக்கவில்லையே என்கிற வருத்தம் தான் மிஞ்சியது.

'புலிவால்':
சமீர் தாஹீர் இயக்கி, ஃபஹத் ஃபாசில் மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் முதன்மை கதாபாத்திரங்களாய் நடித்து வெளிவந்து அனைவரையும் கவர்ந்த படம் “சாப்ப குரிஷு”. எதேச்சையாக ஃபஹத்தின் அந்தரங்க வீடியோ இருக்கும் ஐஃபோன் வினித்தின் கைக்கு கிடைக்கிறது. அந்த மொபைலை ஃபஹத் திரும்ப பெற செய்யும் முயற்சிகளும், வினித் அவரை அழைக்கழிப்பதுமாய் நகர்ந்து கொண்டிருக்கும் போது அந்த வீடியோ யூடியூபில் வெளியாகிவிடும். பின் ஃபஹத் வினித் நிலை என்ன என்பது கிளைமாக்ஸ்.

இதன் தமிழ் ரீமேக் சமீபத்தில், மாரிமுத்து இயக்கத்தில் பிரசன்னா, விமல் நடித்து 'புலிவால்' எனும் பெயரில் வெளியானது. கச்சிதமான திரைக்கதை தமிழில் கண்டபடி மாற்றப்பட்டு, கதாபாத்திர குணாதீசையங்களையும் மாற்றி, காமெடிக்கென ஒரு கேரக்டரை உருவாக்கி கமர்ஷியலாக ஒரு கிளைமாக்ஸை வைத்து மொத்த உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கும்.

ஒரு ரீமேக் அதன் அசலின் அப்பட்டமான காப்பியாக இருக்கவேண்டும் என்று கூறவில்லை. சில மாற்றங்கள் செய்யவேண்டியது தான். எப்போது? அந்த மாற்றங்கள் மொத்தப் படத்தையும் பாதிக்காத போது. இதே நிலை தொடர்ந்தால் ரீமேக் என்பதே சினிமாவிற்கு வியாதியாகிவிடும். இனி அதிகமாக எதிர்பார்க்கப்படும் உஸ்தாத் ஹோட்டல், திர்ஷ்யம் போன்ற படங்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதை சற்று பதற்றத்துடன் காத்திருந்து தான் தெரிந்துகொள்ளவேண்டும்.

- பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்