இந்தி ஒண்ணு தெலுங்கு ஒண்ணு! | ரேஸ் குர்ரம், அல்லு அர்ஜூன், ஸ்ருதிஹாசன், 2 ஸ்டேட்ஸ், அலியா பட், அர்ஜூன் கபூர், race gurram, allu arjun, shruthihaasan, 2 states, alia bhatt, arjun kapoor

வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (03/05/2014)

கடைசி தொடர்பு:15:01 (03/05/2014)

இந்தி ஒண்ணு தெலுங்கு ஒண்ணு!

சென்ற வாரம் ஒரு தெலுங்குப் படமும் ஒரு இந்திப் படமும் காணும் வாய்ப்பு கிட்டியது. தெலுங்கு 'ரேஸ் குர்ரம்’. இந்தி '2 ஸ்டேட்ஸ்’ 

'2 ஸ்டேட்ஸ்’. அழகான பிராமின் பொண்ணுக்கும் 'ஹட்டா கட்டா’ பஞ்சாபிப் பையனுக்கும் இடையே பூக்கும் காதலும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் காமெடி மற்றும் எமோஷனல் சம்பவங்களுமே கதை. வடக்கே பாப்புலர் ரைட்டரான சேத்தன் பகத்தின் '2 ஸ்டேட்ஸ்’ நாவலைப் படித்தவர்களுக்கு இந்தப் படத்தின் மேக்கிங் பிடிக்காதோ என்று தோன்றுகிறது. அலுப்பு தட்டும் நீள நீளக் காட்சிகள் கொட்டாவி வர வைக்கின்றன. சப்-டைட்டில் இல்லாமல் பார்க்கும் அனுபவம் கொடூரத்தின் உச்சம்.

படத்தின் ஒரே ஆறுதல் ஹாட்டான ஜோடி அர்ஜூன் கபூரும் அலியா பட்டும்தான். காதல் காட்சிகளில் கிக் ஏற்றுகிறார்கள். ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் இவர்களது மீட்டிங் டேட்டிங் காதல், கண்ணுக்கு விருந்து. ஆனால் இரண்டாம் பாதி முழுக்க கலாசாரத்தால் பிரிந்து கிடக்கும் பெற்றோர்கள் வசம் போய்விடுவதால்,  எமோஷனல் போர்ஷனுக்குள் நம்மை வலுக்கட்டாயமாகத் தள்ளி விடுகிறார்கள். ஆனாலும் சேத்தன் பகத்தின் நாவலை டைரக்டர் அபிஷேக் வர்மன் சினிமாவாக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்காக படத்தைப்  பார்க்க லாம். ஷங்கர் இஷான் லாய்யின் மியூஸிக் அருமை. இந்தி தெரிந்தவர்கள் பார்க்கக் கடவது!

 

'ரேஸ் குர்ரம்’ (ரேஸ் குதிரை) பந்தயத்தில் செமையாய் ஓடுகிறது.  அண்ணன் ஷாமும் தம்பி அல்லுவும்  எதிரெதிர் குணம்கொண்டவர்கள். சின்சியர் சிகாமணியான அண்ணன் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆகிறார். வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் ஜாலி கேலிப் பையன் அல்லு. இருவரும் வீட்டுக்குள் சண்டை போட்டுக்கொண்டாலும் பாசக்காரப் பசங்கதான். விளையாட்டாகத் தம்பி அல்லு செய்யும் காரியம் அண்ணனைப் பிரச்னைக்கு உள்ளாக்குகிறது. அதற்கு பிராயச்சித்தம் தேட முயல்கிறான் தம்பி.

படத்தில் தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் காரமும் காதல் ஸ்வீட்டும் பர்ஃபெக்ட்டாய் மிக்ஸ் ஆகி இருக்கிறது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி சொல்லி அடித்திருக்கிறார். ரிலீஸான 9-ம் நாள் படத்தின் பட்ஜெட்டான 45 கோடியை அள்ளி இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக ஆந்திர தியேட்டர்களை நிரப்பிவருகிறது.

காமெடிக் கதைக்கு அல்லு அர்ஜுன் செம ஃபிட். அல்லு செய்யும் கியூட் குறும்புகள் அள்ளுகிறது. படமெங்கும் தேவுடா தேவுடா என எக்ஸ்பிரஷன் காட்டுகிறார். போரடித்தாலும் அல்லு ரசிகர்கள் விசில் அடிக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் கிளாமராய் வந்துபோகிறார். படத்தின் ஸ்டில்களில் காட்டிய கவர்ச்சி பாடல்களில் இல்லை. எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே. ஷாம் 'கிக்’கில் பார்த்த அதே போலீஸ். நிறைய கேரக்டர்கள் நிரம்பி வழிந்தாலும் பிரகாஷ்ராஜ்  ஸ்கோர் செய்கிறார். எம்.எல்.ஏ-வாக இருந்து உள் துறை அமைச்சராக மாறும் வேடத்தில் வரும் கிருஷ்ண முரளி சூப்பர். இவர் கேரக்டரை வடிவமைத்த விதம் டைரக்டர் டச்.

இன்டெர்வெல்லுக்குப் பிறகு பிரம்மானந்தம் ராஜ்ஜியம்தான். படத்தின் காமெடி ஏரியாவில் பட்டையைக் கிளப்புகிறார். படத்தில் அவர் பெயரே 'கில்பில் பாண்டே’ போலீஸ் ஆபீஸராக அதிரிபுதிரி பண்ணுகிறார். படத்தின் ஹைலைட்களில் ஒன்று தமனின் இசையில் 'சினிமா சூபிஸ்தா’ என்ற பாட்டு. அல்லு வில்லாக வளைந்து ஆட அவருக்கு செம டஃப் கொடுத்து ஆடி இருக்கிறார் ஸ்ருதி. படத்தை அந்த டான்ஸுக்காகவே பார்க்கலாம் பாஸ்!

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close