தம்பி வந்தாச்சு

ஸ்டீவ் லோபஸைத் தெரியுமா? தெரியாவிட்டால் பரவாயில்லை. ஃபர்ஹான் பாசிலைத் தெரிந்து கொள்ளுங்கள். நஸ்ரியாவைக் கரம்பிடித்திருக்கும் மலையாள சினிமாவின் சென்சேஷனல் ஹீரோவான ஃபஹத் பாசிலின் சொந்தத் தம்பி. இப்போது 'ஞான் ஸ்டீவ் லோபஸ்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார். படத்தின் இயக்குநர், அவரது அண்ணனை வைத்து 'அன்னாயும் ரசூலும்’ ஹிட் கொடுத்த ராஜீவ் ரவி. இவர், பாலிவுட்டின் படா இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ஆஸ்தான கேமராமேன். வான் கா ஓவிய ஸ்டைலில் இருக்கும் 'ஞான் ஸ்டீவ் லோபஸ்’ படத்தின் போஸ்டர்கள் இப்போது இணையத்தில் அதிகம் ஷேர் ஆகின்றன. அண்ணன் முன் வழுக்கையோடு மலையாள சினிமாவில் கலக்கி எடுக்கிறார் என்றால், தம்பி ஃபர்ஹான் 'ரஹே’ ஹேர் ஸ்டைலில் கலக்குகிறார். அனுராக்கின் படம் முடிந்த கையோடு இந்தப் படத்தை எடுக்க மும்பையிலிருந்து கொச்சின் வந்துள்ளார் ராஜீவ் ரவி. ஆகஸ்ட்டில் படம் ரிலீஸாகிறது. மலையாள சீனியர் நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள் அஹானாதான் படத்தின் ஹீரோயின். படத்தை ரகசியமாக ஷூட் செய்தாலும் படம் ரொமான்டிக் த்ரில்லர் என்கிறது யூனிட். இன்றைய இளைஞர்கள் காதலை எப்படி எளிதாய் ஹேண்டில் செய்கிறார்கள் என்பதும் காதலின் அழகே நம்பிக்கை என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஒரே நாளில் நடக்கும் கதை இது என்றும் தொலைந்துபோன தன் காதலியைத் தேடி அலையும் ஒருவனின் கதை என்றும் சொல்கிறார்கள்.

''நடிக்கும் ஆர்வம் எனக்குத் துளியும் இல்லை. ராஜீவ் ரவி சார்தான் இந்தக் கதைக்கு நீ பொருத்தமாக இருப்பாய். ஹீரோவாய் நடிக்க முடியுமா? எனக் கேட்டார். சந்தோஷத்துக்குப் பதில் பயமே வந்தது. ஆனால், அண்ணன்தான் என்கரேஜ் செய்தார். அன்னாயும் ரசூலும் போல ஓவர் எமோஷனல் நடிப்பைக் காட்ட முடியுமா என்னால் என்ற தயக்கம் இருந்தது. ஆனால், படத்தில் என் கேரக்டர் என் நிஜ கேரக்டரையே பிரதிபலிப்பதாக இருந்தது. அதனால் டபுள் ஓகே சொன்னேன். கேமராவைப் பார்த்ததும் நடிப்பு அவ்வளவு எளிது இல்லை என்பதை முதல் ஷாட்டில் உணர்ந்தேன். ராஜீவ் ரவி சார் பொறுமையாக சொல்லிக் கொடுத்து நடிப்பை வரவழைத்தார்'' என்கிறார். பையனுக்கு இப்போதுதான் 23 வயது.

ராஜீவ் ரவியிடம் வாழ்த்து சொல்லி படத்தின் ஒன்லைன் கேட்டால், ''அன்னாயும் ரசூலுக்கும் அப்படியே நேர் எதிரான கதை இது. இந்தப் படத்துக்காகவே அனுராக்கின் ஒரு படத்தை மிஸ் செய்தேன். ஆனால், படம் ரிலீஸானதும் ஏன் மிஸ் செய்தேன் என்பது உங்களுக்கு விளங்கும்.'' என்கிறார்.

கலக்குங்க சேட்டா!

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!