என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் - சப்தமஸ்ரீ தஸ்கரா ! | சப்தமஸ்ரீ தஸ்கரா , பிரித்விராஜ், மலையாளம்

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (23/09/2014)

கடைசி தொடர்பு:12:30 (23/09/2014)

என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் - சப்தமஸ்ரீ தஸ்கரா !

ஏழு பேர் கொண்ட குழு ஒன்று பெரிய கொள்ளை ஒன்றை நிகழ்த்தக் கிளம்பினால் அதுவே 'சப்தமஸ்ரீ தஸ்கரா'.
இதற்குமுன் 'நார்த் 24 காதம்' படம் மூலம் காமெடியாய் மனிதம் சொன்ன அனில் ராதகிருஷ்ணன் மேனன், இப்படத்தில் ஒரு கொள்ளை கும்பலின் காமெடி கலாட்டாவைக் காட்டியிருக்கிறார்.


மனைவியின் மரணத்திற்குக் காரணமானவனைக் தாக்கிய குற்றத்திற்காக கிருஷ்ணன் உன்னியும் (பிரித்விராஜ்),  வேறொருவனை நம்பி சீட்டுகம்பெனி திவால் ஆனதால் நேபல் ஏட்டனும் (நெடுமுடி வேணு), சர்கஸில் மெஜீஷியனான தன்னை அவமானப்படுத்தியதால் ஒருவனைத் தாக்கியதற்காக சலாமும்  (சலாம் புஹாரி), பேட்டை ரௌடியான லீஃப் வாசு ஒரு மல்லுகட்டு விவகாரத்தினாலும் (சுதீர்), சிறைக்கு செல்லக் காரணமாக இருந்தவனைத் தாக்கியதற்காக ஷபாவும் (ஆசிஃப் அலி), கோவில் உண்டியலில் நகை திருடிய குற்றத்திற்காக மார்ட்டினும் (செம்பன் வினோத்), கடைசியாக சோப்பு டப்பாவில் கேமிராவை வைத்து ஆர்வக் கோளாரில் அதன் மேலே தன் கடையின் விலாசத்தையும் ஒட்டிக் கொடுத்து, பின் அந்த கேமிரா ஒரு பெண்ணின் குளியலறைக்கு செல்ல நாரயணன்குட்டி (நீரஜ் மாதவ்) ஜெயிலுக்கு செல்கிறான்.

இவ்வாறாக ஒவ்வொருவரின் ஃபிளாஷ் பேக்கோடு காமெடி, ட்ராஜிடியாய் கடக்கிறது முன்பாதி படத்தின் காட்சிகள். ஒரு கட்டத்தில் பிரித்விராஜ் மனைவியின் இறப்பிற்கு காரணமானவனும், நெடுமுடி வேணுவின் சீட்டுக் கம்பெனி திவாலாக காரணமானவனும் ஒரே ஆள் எனத் தெரிகிறது செவன் மேன் ஆர்மிக்கு. அவனிடம் பணம் இருப்பதால் தானே இவ்வளவு செய்கிறான் பணம் மொத்தத்தையும் நாம் கொள்ளையடித்துவிட்டால் என யோசனை வரவும் ஒவ்வொருவராக ஜெயிலில் இருந்து விடுதலையாகவும் சரியாக இருக்கிறது.

இடைவேளைக்குப் பின் ஏழு பேரும் சும்மா புகுந்து விளையாடப் போகிறார்கள் என எதிர்பார்த்தால் நீங்க ஏப்ரல் ஃபூல் தான். அதன் பிறகும் காமெடியாகவே நகர்கிறது திடீர் கொள்ளையர்களின் திட்டங்கள். இந்த குரூப்பிலே ப்ரித்விராஜும், நெடுமுடிவேணுவும் வில்லனால் (ஜோய் மேத்திவ்) நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், அவனுக்கு நன்கு பரிச்சயமானவர்களும் கூட. அதனால் அவர்களால் பின்னிருந்துதான் இயங்க முடியும், மீதமிருப்பவர்களில் ஒரு முரடன், முன்கோபி, முட்டாள் திருடன், ஆர்வக்கோளாறு  எலெக்ட்ரீஷியன், லேசாக மனப்பிறழ்வு கொண்ட முன்னாள் பேட்டை ரௌடி இருக்க, இவர்களை வைத்து எப்படி நடக்கப்போகுது அந்தக் கொள்ளை? என்ற ஒரே பதைபதைப்பில் சுவாரஸ்யமாக நகர்ந்து க்ளைமாக்ஸில் திடீர்  ட்விஸ்டுடன் முடிகிறது படம்.பிரித்விராஜூக்கு இந்த மாதிரி கேரக்டரெல்லாம் ஜுஜுபிதான் என்றாலும் அதை அசட்டையாக செய்யாமல் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயிலைப் பார்த்து மிரள்வதும், மனைவியுடனான காட்சிகளில் காதல் பொழிவதும், அத்தனை பெரிய அமௌண்டை அலேக்காக திருட திட்டமிடுவது என வேறு வேறு உணர்ச்சிகளை அழகாக, இயல்பாக காட்டுகிறார்.

சில காட்சிகளிலே வந்தாலும் ரீனு மேத்திவ்ஸ், சனுஷா மனதில் நிற்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக  சிசிடிவி கேமிரா பொருத்தி அதன் வீடியோவை சரிபார்க்கும் போது  ஓடிவந்து,
"ஹேய் என்ன படம்?"

"ஹையோ இது அந்த படம் இல்ல",

"ஓ! இது அந்த படம் இல்ல, அப்ப நல்ல படம்!" எனக் கூறும்  மனப்பிறழ்வு கொண்ட முன்னாள் முரட்டு ரௌடி கதாபாத்திரத்திற்கு சுதீர் அத்தனைப் பொருத்தம். ரெக்ஸ் விஜயன் இசையில் பாடல்கள் சிறிதுசிறிதாக காட்சிகளோடு கடந்துவிட்டாலும், சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை அசத்துகிறது குறிப்பாக கொள்ளையடிக்கும் காட்சிகளில் நம் மனதை படபடக்க வைக்கிறது. ஜெயேஜ் நாயரின் ஒளிப்பதிவில் ஜெயில் கம்பிகளின் இடையில் கூட புகுந்து விளையாடுகிறது.

இந்த மொத்த கதையும் ஏழுபேரில் ஒருவனான மார்டின் பாவ மன்னிப்பு கேட்கப் போன பாதிரியாரிடம் சொல்வதாக விரிவது அனில் ராதகிருஷ்ணன் மேனனின் திரைக்கதை பலம்.

தமிழர்கள் மீது என்ன கோவமோ தெரியவில்லை, இந்தப் படத்திலும் அதைக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் எல்லா கதாப்பாத்திரமும் மலையாளிகள், ஆனால் கழிவுகளை சுத்தம் செய்பவர்கள் மட்டும் தமிழர்களை காட்டியிருப்பது நெருடல். பெங்களூர் டேஸ் படத்தில் மருமகளைப் பற்றி தவறாக மாமியாரிடம் போட்டுக்கொடுக்கும் வேலைக்காரி வேடத்தில் ஒரு தமிழ் பெண். எப்போது தான் இது போன்ற சித்தரிப்புகளுக்கு முடிவு வருமோ.

மொத்தத்தில் காமெடியாய், ஜாலியாய் ஒரு படம் விரும்புபவர்களுக்கு 'சப்தமஸ்ரீ தஸ்கரா' பக்கா என்டர்டெயின்மென்ட் பேகேஜ்.

-பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்