ஜேம்ஸ்பாண்டுக்கே ஆப்பு!

‘பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்..!’ உலகின் பிரபல பன்ச் வசனத்தின் 24-வது ரவுண்டு ஆரம்பம்!

‘பாண்ட்-24’ என்ற பெயரில் தடதடத்துக்கொண்டிருக்கிறது அடுத்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ சினிமா. கடைசியாக வந்த பாண்ட் சினிமா ‘ஸ்கைஃபால்’. ‘அமெரிக்கன் பியூட்டி’ படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வென்ற சாம் மென்டீஸ்தான் ‘ஸ்கைஃபால்’ இயக்குநர்.

பெரும் ஆரவாரத்துடன் வெளியானது ‘ஸ்கைஃபால்’. ஆனால், இந்தியாவில் அந்தப் படம் பற்றி தாறுமாறு விமர்சனங்கள். ‘படம் நெடுக வழக்கமான அதிரடி ஆக்‌ஷன் இல்லை’, ‘பாண்ட், சுடப்பட்டுக் கீழே விழுகிறார்; அல்லது வில்லனிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறார்’, ‘லேடி எம் மீதான அம்மா சென்டிமென்ட் காரணமாக அழுதுகொண்டே இருக்கிறார்’, ‘மெகா சீரியல்போல பேசிக்கொண்டே இருக்கிறார்கள்...’ என ஏகப்பட்ட அன்லைக்ஸ் குவித்தது படம். ஆனால், நம்புங்கள், பாண்ட் படங்களிலேயே அதிகபட்ச வசூல் சாதனை படைத்தது ‘ஸ்கைஃபால்’தான்!

‘ச்சே... ஜேம்ஸ் பாண்டுக்கு இவ்வளவு ஈர மனசா?’, ‘இப்போதுதான் நிஜத்துக்கு நெருக்கமாக உயிரும் உணர்வுமாக இருக்கிறார் ஜேம்ஸ்’ என்றெல்லாம் வெளிநாடுகளில் பாராட்டுகளைக் குவித்து வசூல் அள்ளியது ‘ஸ்கைஃபால்’. அந்த ஆரவாரத்துடனேயே இயக்குநர் சாம் மென்டீஸையே ஜேம்ஸ் பாண்டின் அடுத்த இரண்டு படங்களையும் இயக்கச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் சாம்.

‘எனக்கு மேடை நாடகம்தான் உயிர். நான் நாடகம் இயக்கப் போறேன். ஜேம்ஸ் பாண்டுக்கு கதை பிடிச்சு, திரைக்கதை பண்றது பெரிய பேஜார்’ எனச் சொல்லி விலகிவிட்டார். பாண்ட் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்ச வசூல் குவித்த படத்தின் இயக்குநரை அப்படி ‘ஜஸ்ட் லைக் தட்’ விட்டுவிட முடியுமா? ‘இரண்டு பாகங்கள் இப்போதைக்கு வேண்டாம். முதல் பாகம் மட்டும் முடித்துக்கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லி, தாஜா செய்து அவரைச் சம்மதிக்க வைத்தார்கள்.

அடுத்து திரைக்கதை பஞ்சாயத்து. ஜேம்ஸ் பாண்ட் பட உருவாக்கத்தில் மிகப் பெரிய சவால், அதன் திரைக்கதைதான். ஏனென்றால், கதை என்ற வஸ்து எதுவும் படத்தில் இருக்காது. வில்லன்களை வேட்டையாடும் ஆக்‌ஷன் அத்தியாயங்களுக்கு நடுவில் சில ரொமான்ஸ் தழுவல்கள். அவ்வளவுதான் கதை. திரைக்கதைதான் ஒவ்வொரு படத்திலும் ஜேம்ஸ் பாண்டுக்கான சவாலையும் சாகசத்தையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். இந்த நிலையில் ‘பாண்ட்-24’க்கு என வடிவமைக்கப்பட்ட திரைக்கதை, தயாரிப்பாளர், இயக்குநர் என எவரையும் திருப்திப்படுத்தவில்லை.

‘அப்டிங்களா... சந்தோஷம். அப்படியே நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்’ என திரைக்கதை குழு தப்பிக்க முயல, அவர்களையும் தாஜா செய்து கூடுதல் நபர்களைக் குழுவில் சேர்த்து ‘பட்டி, டிங்கரிங்’ பார்த்து சுவாரஸ்யமான திரைக்கதையைத் தேற்றிவிட்டார்கள். இங்கு முக்கியமான விஷயம், படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட காலக்கெடு 10 மாதங்கள்தான். ஆனால், திரைக்கதை அமைக்க மட்டும் முழுதாக இரண்டு வருடங்கள்.\

அடுத்த இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஹீரோவாக நடிக்க டேனியல் கிரேய்கிடமே ஒப்பந்தம் போட்டுவிட்டு, ‘பாண்ட் கேர்ள் யார்?’ என ஹீரோயின் வேட்டையில் இறங்கினார்கள். உலகம் முழுக்க பல ஹீரோயின்கள், ஏகப்பட்ட ஸ்க்ரீன் டெஸ்ட்டுகள்... ம்ஹும்..! பலகட்ட பரிசீலனைக்குப் பிறகு ‘மிஷன் இம்பாஸிபிள்’, ‘ப்ளூ இஸ் த வார்மஸ்ட் கலர்’ படங்களில் நடித்த லியா தேர்ந்தெடுக்கப்பட்டார். பல விருதுகள் குவித்த அபார திறமைசாலி லியா.

‘சும்மா அழகுப் பொம்மையாக வலம் வராமல் நடிக்கத் தெரிந்த பெண்தான் எனக்கு வேண்டும்’ என்ற இயக்குநரின் கெடுபிடி காரணமாக லியாவை ஏகப்பட்ட சம்பளத்துக்கு வளைத்திருக்கிறார்கள். ஆனால், இவருக்கு முன்  பட்டியலில் டாப் இடம் பிடித்திருந்தவர், ‘ஹாரிபாட்டர்’ புகழ் எம்மா வாட்சன். சமீப காலமாக ‘பெண்ணியம்’ பற்றியெல்லாம்  தீவிரமாகப் பேசி, பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் அவரை, ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தில் ‘எந்த அளவுக்கு’ப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற சந்தேகம் காரணமாக அவரை டெலீட்டிவிட்டார்கள். 

பல பஞ்சாயத்துகளைச் சமாளித்து படப்பிடிப்புகளில் பரபரத்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத திசையில் இருந்து முளைத்தது புது சிக்கல். ‘பாண்ட் - 24’ படத்தின் அதிகாரபூர்வ டீஸர் என அரைநிமிட வீடியோ ஒன்று வெளியானது. டேனியல் கிரேய்க் கம்பீரமாக நிற்க, முகம் தெரியாத பெண் சோகமாக நிற்க... தடாலடி இசையுடன் ‘கம் அண்டு டைவ்’ என அதிரடித்தது அந்த வீடியோ. ‘அட வித்தியாசமா... நல்லாத்தான் இருக்கு’ என லைக்ஸ் குவிய, ‘அது அதிகாரபூர்வ டீஸர் இல்லைங்க. எவனோ பக்காவா தமாஷ் பண்ணியிருக்கான்!’ எனப் பதறி அறிக்கை விட்டிருக்கிறது பாண்ட் படக்குழு.

அகில உலக ஆக்‌ஷன் ஸ்டாருக்கே ஆப்பு வைக்கிறாங்களே!

-பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!