Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் குற்றம் குறித்த உண்மைப்பதிவு! - நா பங்காரு தல்லி!

ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அதில் மூன்றில் ஒருவர் சிறுமி. பெரும்பாலும் இந்த குற்றங்களை செய்பவர்கள் அந்த பெண்களுக்கு அறிமுகமானவர்களாகவோ அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களாகவோதான் இருக்கிறார்கள்.

இவ்வளவு புள்ளிவிவரங்கள் வந்து முகத்தில் அறைந்தாலும், இன்றுவரை வெகுவாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சமீபத்திய மோசமான உதாரணம் டெல்லியில் நடந்த கார் ஓட்டுநரின் வன்செயல். இந்த சம்பவங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக சமீபத்தில் வெளியான தெலுங்குப் படம் 'நா பங்காரு தல்லி'.


தந்தை மீது அதிக பாசமும், படிப்பில் ஆர்வமும், நிறைய தைரியமும் குறும்புத்தனமுமாய் இருக்கும் பெண் துர்கா (அஞ்சலி பட்டில்). தன் மேற்படிப்புக்காக கிராமத்தில் இருந்து ஹைதராபாத் சென்று படிக்க விரும்புகிறாள். "நகரமெல்லாம் ரொம்ப கெட்டுக்கிடக்கு. அங்க வேலைக்கு போயிட்டு வர்ற எனக்கு தெரியாதா, அது பாதுக்காப்பில்லாததுனு" என துர்காவின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்கிறார் அவளது அப்பா. இருந்தும் அவரது கையெழுத்தை தானே போட்டு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கிறாள் துர்கா. சில நாட்களிலேயே துர்காவுக்கு ஒரு நல்ல வரன் வருகிறது.

"விரும்பும் வரை படிக்கணும். திருமணத்திற்குப் பிறகு கூட படிக்கணும்" என்ற துர்காவின் நிபந்தனைகளுக்கு மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவிக்க நிச்சயதார்த்தம் நடக்கிறது. நாட்கள் நகர்ந்த பின் ஹைதராபாத் கல்லூரியில் துர்காவிற்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வருகிறது. உடனே ஹைதராபாத் செல்ல வேண்டும். ஆனால், அவளை அழைத்துச் செல்ல தந்தை வீட்டில் இல்லை. ஹைதராபாத்தில் இருக்கும் அவரைத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. ’நான் உன் தந்தையிடம் பேசி உன்னை ரயில் நிலையத்துக்கு வந்து அழைத்துக் கொள்ளச் சொல்கிறேன். நீ கிளம்பு’ என் துர்காவை தனியாக ரயிலில் அனுப்புகிறாள் அவளது தாய். சொன்னது மாதிரியே அவளது தந்தை இரயில் நிலையம் வந்து அழைத்துக் கொள்கிறார்.

அவளின் தந்தை பல பெண்களுக்கு வேலை தருவதாக அழைத்து வந்து அவர்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட வைத்திருக்கிறார் என்ற அவரின் பின்புலத்துடன் நகர்கிறது இரண்டாம் பாதி. இது எதுவும் துர்காவுக்கு தெரியக்கூடாது என்ற பதைபதைப்புடன் அவளை ஒரு ஹோட்டலில் தங்க வைக்கிறார். அந்த நேரத்தில் அவர் அனுப்பி வைத்த பெண்கள் போலீஸில் மாட்டிக்கொள்ள, தனது தலைவனிடம் போய் சமாதானம் செய்து, அந்த பிரச்னையை தான் சரி செய்துவிடுவதாக சொல்கிறார். ஆனாலும் அந்த தலைவனுக்கு சந்தேகம் வருகிறது. மேலும், காலைவில் துர்காவை அழைத்து வந்ததை தவறாகப் புரிந்துகொண்டு தனியாக தொழில் தொடங்கப் போகிறானோ என அவன் யோசிக்க, சந்தேகம் இன்னும் வலுக்கிறது. எனவே அடியாட்களை அனுப்பி துர்காவைக் கடத்துகிறான். திரும்பி வரும் துர்காவின் தந்தை, ஹோட்டலில் இருந்த தனது மகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்கிறார். எல்லா இடங்களிலும் தேடுகிறார். கடைசியில் உண்மை தெரிய அவள் இருக்கும் இடம் தேடி செல்கிறார். ஆனால் அதற்குள் துர்காவை பலர் நாசம் செய்துவிடுகின்றனர். கடைசியில் துர்காவுக்கு தன் தந்தை பற்றிய உண்மை தெரிகிறது. ஒரு வழியாக அந்த கும்பலிடமிருந்து தப்பிக்கிறார். துர்கா தப்பிக்கவும், அவளின் தந்தை அங்கு வரவும் சரியாக இருக்கிறது. துர்காவைக் காணும் அவர் அவள் பெயரை உரக்க சொல்லி அழைத்தவாறு அவள் தப்பி செல்லும் காரின் பின்னாலேயே ஓடி பின் தடுமாறி நிற்கிறார்.

மறுநாள் விடியும்போது துர்கா அவளது வீட்டில் இருக்கிறாள். அவளது தாய் நலவிசாரிப்புகளை ஆரம்பிக்கிறார். துர்காவிடம் எதற்கும் பதில் இல்லை. அவளுக்கு காபி எடுத்து வர அவர் உள்ளே செல்ல, துர்காவின் தந்தை வீடு வந்து சேர்கிறார். அவளது அருகில் வந்தமர்ந்து அவள் கால்களைப் பிடிக்கிறார். "எட்றா கைய" என ஆத்திரத்தின் உச்சியில் கனல் தெரிக்கிறாள் துர்கா. எதுவும் பேசாது இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.

துர்காவின் தாய் கணவருக்கும் காபி எடுத்துவர மறுபடி உள்ளே செல்கிறார். துர்காவின் தந்தை நேராக வீட்டின் உள் அறைக்குள் செல்கிறார். ஒரு ஸ்டூல் கீழே விழும் சத்தம் கேட்கிறது. கணவருக்கு காபி கொடுக்க செல்லும் துர்காவின் தாய் அவர் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அலறுகிறார். அப்போது துர்கா மெலிதான கண்ணீருடன் நிம்மதியான ஒரு புன்னகை செய்கிறாள். அதோடு முடிகிறது படம்!

படம் தரும் அதிர்ச்சியைவிட இது ஒரு உண்மை சம்பவத்தின் பதிவு என அறிகையில் இன்னும் அதிர்ச்சி ஏற்படுகிறது. மொத்தப் படத்தையும் தனி மனுஷியாக சுமந்திருக்கும் அஞ்சலி பட்டில் இதற்கு முன் "வித் யூ விதவுட் யூ" படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர். இந்தப் படத்திலும் தன் நடிப்பிற்காக தேசிய விருது வென்றிருக்கிறார். மேலும் சிறந்த பின்னணி இசை, சிறந்த படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றுருக்கிறது படம். சில நாடகத்தனங்கள் இருந்தாலும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு "வினையருக்கும் காலம் வரும்" என்ற எச்சரிக்கை மணியடித்திருக்கிறது 'நா பங்காரு தல்லி'.

- பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்