தி எண்ட்... தெலுங்கில் ஒரு பீட்ஸா! | the end, telugu, movie, தெலுங்கு, தி எண்ட்,

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (31/12/2014)

கடைசி தொடர்பு:10:14 (31/12/2014)

தி எண்ட்... தெலுங்கில் ஒரு பீட்ஸா!

ஒரு குறிப்பிட்ட வகைப் படம் வெளியானதும் அதே பாணியிலான படங்கள் நிறைய வெளிவருவது சினிமாவில் வழக்கமான ஒன்று. 'சுப்ரமணியபுரம்', 'பருத்திவீரன்' படங்கள் வெளியாகி ஹிட்டாக அதைத் தொடர்ந்து அதே வகை படங்கள் பல வந்தன. அடுத்து 'சிவா மனசுல சக்தி' வெளியாகி வெற்றி பெற அதே டைப்பில் காமெடியை மையமாக வைத்து படங்கள் வந்தன. அதில் சந்தானம் அதிகமாக இருந்ததும் ஒரு ட்ரெண்ட் தான். அதன் பிறகு 'முனி' வெளியாகி திகில் + காமெடி கலவையை காண்பிக்க, இன்று வரை தொடர்கிறது பேய் படங்களின் ட்ரெண்ட்.


இது ஒரே மொழிக்குள் மட்டுமில்லாமல் மற்ற மொழிக்கும் பொருந்தும். தமிழில் 'பீட்ஸா' வெளியாகி ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தெலுங்கிலும் இதே டைபில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் படம் தான் 'தி எண்ட்'. கிட்டத்தட்ட 'பீட்ஸா'வில் நாம் பார்த்த அதே திரைக்கதை பாணிதான். கதை பயணிப்பது மட்டும் வேறு களத்தில்.


ப்ரியா - ராஜீவ் புதிதாக திருமணமான தம்பதி. ராஜீவைப் பார்ப்பதற்காக அவரது நண்பர் கௌதம் அவர்கள் வீட்டிற்கு வருகிறார். கௌதமை வரவேற்று தன் புதுவீட்டை சுற்றிக்காண்பிக்கிறார்கள் ப்ரியா - ராஜீவ் தம்பதி. கட்டுமான வேலைகளில் சில வேலைகள் பாக்கி இருக்க அதுவும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மாடியில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண் தவறி காலியாக இருக்கும் நீச்சல் குளத்தில் விழுந்து இறக்கிறார். அதைப் பார்த்ததில் இருந்து சற்று பயத்திலேயே இருக்கிறாள் ப்ரியா.


திருமணமானதற்கும், புது வீடு வாங்கியதற்காகவும் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கிறார் ராஜீவ். அங்கு ரேகாவைப் பார்க்கிறான் கௌதம். சில சந்திப்புகளுக்குப் பிறகு இருவரும் நெருக்கமாகின்றனர். இருவரும் வெவ்வேறு வேலைகளுக்காக கோவா வரை செல்லவிருப்பதை அறிந்ததும் ஒன்றாகவே தங்கியிருக்கிறார்கள். பின்பு ஒரு நாள் திடீரென ப்ரியாவிடமிருந்து ஒரு போன்கால் வருகிறது. ராஜீவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவள் கூற உடனே அங்கிருந்து கிளம்பி சென்று நண்பனைப் சந்திக்கிறான். ராஜீவ் தன் மனைவி ப்ரியாவிற்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறுகிறான். அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான் கௌதம். பிறகு அவள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்ததும் அதை அவனும் நம்புகிறான்.


ஒரு நாள் ப்ரியா, கௌதமைக் கண்டபடி திட்ட கோவமாகும் ராஜீவ் அவளின் தலையில் பலமாக அடித்துவிடுகிறான். அதில் அவள் இறந்து போகிறாள். நண்பனைக் காப்பாற்ற நினைத்து அந்தக் கொலையை மறைக்க அந்த பிணத்தை ஒரு கவரில் சுற்றி வீட்டிலிருக்கும் நீச்சல் குளத்தில் போட்டு விடுகின்றனர். மறுநாள் அந்தபிணத்தை அரசு மருத்துவமனையில் இருக்கும் சவக்கிடங்கில் சேர்த்துவிடலாம். பிணத்தை யாரும் வாங்க வராததால் அவர்களே அதை எரித்துவிடுவார்கள் எனத் திட்டம் போடுகின்றனர் ராஜீவும் - கௌதமும். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு பிணத்தை நீச்சல் குளத்திலிருந்து எடுக்க செல்லும்போது ப்ரியாவின் பிரேதம் அங்கே இல்லாமல் போகிறது. ப்ரியாவின் பிரேதம் என்ன ஆனது? கொலை செய்த ராஜீவ் என்ன ஆகிறார் என்ற கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கிறது மீதிக் கதை.


அடுத்தடுத்து வரும் பிரச்னைகளையும், வெவ்வேறு நபர்கள் "ப்ரியா எங்கே?" எனக் கேட்கும் கேள்விகளையும் சமாளிக்க முடியாமல் மிரளும் சுதீர் ரெட்டியின் (ராஜீவ்) நடிப்பு நன்று. நண்பனுக்காக கொலையை மறைக்க யோசிப்பதும், தடுமாறுவதும் என கௌதமும் (யுவா சந்திரா) முடிந்தவரை நடித்திருக்கிறார். ப்ரியா (பவானி ரெட்டி), ரேகா (கஸல் சோமையா) குறைந்த காட்சிகளே வந்தாலும் அழகு.

படத்தின் பெரிய பலவீனம், பயமுறுத்த முயற்சி செய்து அதில் தோற்றிருப்பதுதான். முடிந்தவரை திணரத் திணர ஒரு த்ரில்லர் கொடுப்பதற்கான எல்லா விஷயங்களும் இருந்தும் அதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் ராகுல். படத்தின் திரைக்கதையில் நாம் தமிழில் பார்த்த 'பீட்ஸா'வின் ஸ்டைல் பிரதிபலிப்பது எளிதில் உணரமுடிகிறது. அதைக் படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வரை பயன்படுத்தியிருப்பது பலவீனம்.
சின்னச் சின்ன ட்விஸ்டுகளால் கதை நகர்வது, ப்ரியாவின் பிரேதம் என்ன ஆனது? என்ற கேள்வியோடு அதைச் சார்ந்த பிரச்னைகளையும் காட்டி திரைக்கதை செல்வதால் படத்தின் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. ஆக்சன் படங்களில் மங்கிக் கொண்டிருக்கும் தெலுங்கு சினிமாவுக்கு 'தி எண்ட்' ஒரு புதிய முயற்சி. இன்னும் உழைத்திருந்தால் ஒரு ட்ரெண்ட் செட்டராகவே மாறியிருக்கும்!


- பா.ஜான்ஸன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்