ஆன்லைன் சினிமா டிக்கெட்: வசூலை காட்டும்...வரி ஏய்ப்பை ஒழிக்கும்! | ஆன்லைன் சினிமா டிக்கெட், online ticketing

வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (12/01/2015)

கடைசி தொடர்பு:20:04 (12/01/2015)

ஆன்லைன் சினிமா டிக்கெட்: வசூலை காட்டும்...வரி ஏய்ப்பை ஒழிக்கும்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'லிங்கா'. கடந்த சில நாட்களாக  விநியோகஸ்தர் - தயாரிப்பாளர் மோதலாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறது 'லிங்கா' திரைப்படம்.

சுமார் 45 கோடியில் படம் தயாரிக்கப்பட்டு (நடிகர் ரஜினி சம்பளம் நீங்கலாக) 220 கோடி வரை படம் வியாபாரம் செய்யப்பட்டு இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இதில், சுமார் 30 - 45 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர்  புலம்புகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.
 

 

தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தைக் கொடுத்த படமா லிங்கா?

சென்னையில் சத்யம், மாயாஜால், தேவி உள்ளிட்ட சில திரையரங்குகளில்  மட்டுமே, முதல் மூன்று நாட்கள் புக்கிங் செய்ததன் மூலமே, சுமார் 3-5  கோடி ரூபாய் அளவுக்கு லிங்கா வசூலித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆன்லைன்  புக்கிங்கையும் சேர்த்து மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி அளவுக்கு வசூலித்து இருக்கிறது லிங்கா. ஆனால், அதன் பிறகு படத்துக்கு நெகடிவ் விமர்சனங்கள் அதிகரித்ததால் லிங்கா வசூல் குறைந்து அடுத்த 20 நாட்களில் உலகம் முழுவதும் 50-80 கோடி அளவுக்கு மட்டுமே வசூலித்ததாக சொல்கிறார்கள். இன்று வரை  லிங்கா திரைப்படம் 500 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என கணக்கு காட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள். எனவே, விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூற்றுப்படி லிங்கா திரைப்படம் 150-180  கோடி அளவுக்கு வசூலித்துள்ளது திட்டவட்டமாகிறது.
 
45 கோடியில் எடுத்த  படம் கிட்டத்தட்ட நானூறு சதவீதம் லாபம் வசூலித்திருக்கிறது, ஆனால் விநியோகஸ்தர்கள் - தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் நஷ்டம் ஏற்பட்டதாக  சண்டையிட்டு கொள்கிறார்கள். இது ஏன் என உற்று நோக்கினால் ஒரு விஷயம் தெளிவாக புலப்படும். ரஜினி என்ற பிரம்மாண்ட பிம்பத்தை வைத்து கிட்டத்தட்ட 300 கோடி அளவுக்கு வசூல் எடுக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள் ரஜினியும், லிங்கா பட தயாரிப்பாளர்களும். ஆனால், அவர்கள் திட்டமிட்ட அளவுக்கு லாபம் வரவில்லை. இதற்கு காரணம் லிங்கா படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் பேராசைதான் காரணம்.

இன்றைய சூழ்நிலையில், ரஜினி படத்தை தவிர வேறு எந்த நடிகரின் படமும் குறைந்த நாட்களில் 100 கோடி அளவுக்கு வசூல் எடுப்பதில்லை. எந்திரன் திரைப்படம் 300 கோடி அளவுக்கு வசூல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. ரஜினி பெயரை மட்டும் வைத்துகொண்டு,  மக்களிடம் ஏமாற்றி சுமாரான ஒரு படத்தை எடுத்து கொள்ளை லாபம் பார்க்க பேராசைப்பட்டவர்களுக்கு எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதே சமயம் படம் கிஞ்சித்தும் நஷ்டம் அடையவில்லை. மாறாக இப்போதும் தயாரிப்பு செலவை காட்டிலும் 400 மடங்கு லாபம் ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொருள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும் போது அந்த பொருளின் தயாரிப்பு செலவை விட எவ்வளவு மடங்கு லாபம் எடுக்கிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, பல நூறு மடங்கு லாபம் எதிர்பார்த்துவிட்டு அதில் ஏமாற்றம் சந்தித்தால் நஷ்டம் என புலம்புவது கேலிக்கூத்தானது. 

வினியோகஸ்தர்கள் லிங்கா லாபத்தில் இருந்து தங்களின் நஷ்ட ஈட்டை  கேட்கலாம்.  ஆனால், லிங்கா படம் தோல்வி அடைந்தது போல ஒரு மாயை கிளப்புவது சந்தேகத்துக்கு உரியது. லிங்கா படத்துக்கு முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட தென்மாவட்டத்தில் உள்ள சில  திரையரங்குகள் 6 காட்சி வரை ஓட்டியிருக்கிறார்கள். இதில் 300-600 வரை டிக்கெட் விற்று இருக்கிறார்கள். இதன் மூலம் ஒரே நாளில் கிட்டத்தட்ட (மூன்று நாட்களின் வசூல் 18 காட்சிகள்) அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஒட்டி கொள்ளை லாபம் சம்பாதித்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
 
சினிமாவில் ஒரு படத்துக்கு எவ்வளவு செலவாகிறது எவ்வளவு லாபம் கிடைத்தது? அரசாங்கத்துக்கு முறையாக வரி சென்றடைந்ததா? ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது? என பல கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் இல்லை. சினிமாவில் வெளிப்படைத்தன்மைக்கு வழி ஏற்பட்டால் மட்டுமே சினிமாவில் தலைவிரித்தாடும் கருப்பு பணம் முடிவுக்கு வரும்.
 
சினிமாவில் கருப்பு பணம் ஒழிய என்ன செய்யலாம்?


* சினிமாத் துறையை முறைப்படுத்துவது அரசின் கடமை. தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு திரையரங்கமும் அதன் வசதிகளை பொறுத்து ஒரு காட்சிக்கு, ஒவ்வொரு வகுப்புக்கும், ஒரு சீட்டுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்? என்பதை அரசாங்கம் குழு அமைத்து ஆய்வு செய்து இணையதளத்தில் பட்டியல் வெளியிட வேண்டும்.

* ஏற்கனவே மல்டிப்ளக்ஸ், மால்கள், சாதாரண திரையரங்குகள் குறிப்பிட்ட அளவுதான் ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அது சாமான்யர்களுக்கு தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள குக்கிராமத்தில் இருக்கும் தியேட்டர்கள் முதற்கொண்டு அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைன் வெப்சைட் இருக்க வேண்டியதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும்.

* தமிழக அரசு சினிமாவுக்கு என பலமான சர்வர்களை கொண்டு ஒரு கணினி மையம் அமைக்க வேண்டும்.

* அரசாங்கத்தின் இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளின் வெப்சைட்டையும் இணைக்க வேண்டும். தமிழகத்தின் எந்த மூலையில் உள்ள தியேட்டரும் அரசாங்க வெப்சைட்டில் லாக் செய்து அதில்தான் டிக்கெட் புக் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆன் லைனில் நேரடியாக புக் செய்தாலும் தியேட்டரில் நேராக சென்று டிக்கெட் வாங்கினாலும் அரசாங்க இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யப்பட்டு இருக்கும்.

* தியேட்டரில் உள்ளவர்கள் அரசாங்க இணையதளத்தில் புக் செய்ததற்கு கொடுக்கப்படும் கணினி மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட ரசீதை டிக்கெட் வாங்கும் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும். இந்த ரசீதில் குறிப்பிட்ட திரையரங்குக்கு குறிப்பிட்ட வகுப்புக்கு எவ்வளவு கட்டணம்? இதில் அரசாங்கத்துக்கு எவ்வளவு ரூபாய் வரி சேருகிறது ஆகிய விவரங்கள் இருக்கும். இதன் மூலம் தியேட்டர்கள் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க முடியாது. அதே சமயம், குறைவாக வசூலித்ததாக சொல்லி அரசாங்கத்தை ஏமாற்ற முடியாது.

அரசு முன்வருமா?

ஆன்லைன் மூலம் ரசிகர்கள் நேரடியாக டிக்கெட் புக் செய்தால் அவர்களுக்கு புக்கிங் கட்டணம் உண்டு. தியேட்டர்களுக்கு சென்று டிக்கெட் எடுத்தால் புக்கிங் கட்டணம் கிடையாது. இந்த திட்டத்தின் மூலம் வருங்காலத்தில் எந்த ஒரு படமும் எத்தனை தியேட்டர்களில் ஓடியது? எவ்வளவு பேர் பார்த்தார்கள்? எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? வரி மூலம், எவ்வளவு தொகை அரசாங்கத்துக்கு கிடைத்தது உள்ளிட்ட தகவல்கள் மக்களுக்கு எளிதாக தெரிய வரும்.

சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என யாருமே இந்த முறையில் ஏமாற்ற முடியாது. ஒவ்வொரு வருடமும் 500 முதல் 1000 கோடி அளவுக்கு கண்டிப்பாக அரசாங்கத்துக்கு வரி மூலம் வருமானம் கிடைக்கும். தியேட்டர்களில் முறையாக கட்டணம் வசூலித்தால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், திருட்டு டிவிடிகள் குறையும். தியேட்டர் உரிமையாளர்கள்  தியேட்டரில் கூடுதல் விலை விற்பதை கண்டுபிடிக்க அரசு மக்களுக்கு இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிவித்து தகவல்கள் அடிப்படையில் அவ்வப்போது ரெய்டு நடத்தினால் தியேட்டர்களில் செய்யப்படும் முறைகேடு வெளிச்சத்துக்கு வெளியே வரும்.
 
இந்த திட்டத்தில் உள்ள பின்னடைவு?

1. அனைத்து தியேட்டருக்கும் அரசாங்கம் வலுவான இணைய இணைப்பு தர வேண்டும்.

2. தியேட்டர்கள் அரசாங்க இணையதளத்தில் புக் செய்யாமல் பார்வையாளர்களை அனுமதிக்க முடியும். அரசாங்கம் கண்டுபிடிக்கும் வரை இந்த முறைகேடு நடக்கலாம்.

3. அரசாங்கத்தின் இணைய தளம் ஹேக் செய்ய முடியாதவாறு வலுவாக  இருக்க வேண்டும் 
 
சினிமா ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்?


1. அரசாங்கம் விதித்த கட்டணம் பில்லில் இருக்கிறதா என செக் செய்து வாங்க வேண்டும்.

2. தியேட்டர்களில் ப்ளாக்கில் விற்பதோ, கூடுதல் விலைக்கு விற்பதோ தெரிந்தால் ரகசியமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து விடவும்.

3. முடிந்தவரை  நேரடியாகவே ஆன்லைனில் டிக்கெட்  எடுத்து கொள்ளவும். இதன் மூலம்  தியேட்டர்கள் முறைக்கேட்டில் ஈடுபட வாய்ப்பு குறையும்.
 
சினிமா தியேட்டர்களை ஒன்றிணைக்கும் இந்த திட்டம் வெற்றியடைந்தால் அடுத்ததாக பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான கோடி முறைகேட்டையும் இதே முறையில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.

கல்லூரி கட்டணம், பள்ளி கட்டணம், சினிமா கட்டணம் போன்றவற்றில் ஊழல் செய்பவர்களை தொழிநுட்பம் உதவியுடன் அழிக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை! 
 
  -பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close