வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (13/01/2015)

கடைசி தொடர்பு:19:41 (13/01/2015)

ஓ மை காட் - கடவுள் மீதே வழக்கு!

தெலுங்கு சினிமாவும் சற்று வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் காட்டுவதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான 'கோபாலா போபாலா'. இந்தியில் பரேஷ் ராவல், அக்‌ஷய் குமார் நடிப்பில் உமேஷ் சுக்லா இயக்கத்தில் வெளியான 'ஓ மை காட்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இது. 'ஓ மை காட்' பார்க்காதவர்களுக்கு படத்தின் கதை பற்றி சின்ன அறிமுகம் கீழே,

கடவுள் நம்பிக்கை இல்லாது, அதே சமயம் கடவுள் சிலைகளை விற்கும் தொழில் செய்து வருபவர் கோபால் ராவ் (வெங்கடேஷ்). அவரது மனைவி மீனாட்சி (ஸ்ரேயா) கடவுள் நம்பிக்கையிலேயே ஊறிப் போனவர். அவர் மட்டுமல்ல, அந்த தெருவில் அனைவருமே கடவுள் நம்பிக்கையில் கண்மூடித்தனமாகவும், கடவுளைச் சுற்றி நடக்கும் வியாபாரத் தந்திரங்கள் பற்றிய எதையும் அறிந்து கொள்ளத் தயாராகாதவர்கள்.ஒரு நாள் வெங்கடேஷின் கடை பூகம்பத்தால் இடிந்து விழுகிறது. சுற்றி உள்ள வேறு எந்த வீட்டிற்கோ கடைக்கோ சிறிய கீறல் கூட ஆகவில்லை. கடவுளை ஏளனம் செய்தவனுக்கு இப்படித்தான் ஆகும் என அனைவரும் வெங்கடேஷிடம் கூறுகின்றனர். ஆனால் கடையின் மீது காப்பீடு செய்து வைத்திருப்பதால் "எனக்கு நஷ்டம் ஏதும் வரவில்லை. என் கடைக்கு காப்பீடு இருக்கிறது. அதன் மூலம் நான் நஷ்டஈடு பெற்றுக் கொள்வேன்" எனக் கூறி காப்பீட்டு நிறுவனத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை அளிக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஏன் என்றால் இது கடவுளின் செயலால் (Act of God) ஏற்பட்ட சேதம். இதற்கு நஷ்டஈடு வழங்குவதில்லை என்று நாங்கள் எங்களுடைய விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். நீங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து தான் கையெழுத்து போட்டிருக்கிறீர்கள் எனக் கூற, கோபத்தோடு வெளியேறுகிறார் வெங்கடேஷ். 

இதற்கு நடுவில் கடன் கொடுத்தவர்கள் வெங்கடேஷிடம் கொடுத்த பணத்தை திரும்ப செலுத்துமாறு கூற, அந்த இடத்தை விற்க முயற்சி செய்கிறார். ஆனால் அது கடவுளால் சபிக்கப்பட்ட இடம் என யாரும் வாங்க முன்வரவில்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப்போக, கடைசியில் கடவுள் மேலேயே நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்கிறார். ஒன்று கடவுளை கொண்டுவந்து காட்டுங்கள். இல்லை எனக்கான நஷ்ட ஈட்டை தாருங்கள் என்பதே வெங்கடேஷின் வாதம்.

அர்ச்சனைத் தட்டில் ஆரம்பித்து ஆடியோ ரைட்ஸ் வரை விரிந்து கடவுள் பெயரால் நடத்தப்படும் வியாபாரத்தில் பிரச்னை ஏற்படும் என நினைக்கும் போலி சாமியார்கள், வெங்கடேஷை தீர்த்துக் கட்ட முடிவு செய்கின்றனர். அப்போது பவன் கல்யாண் ரூபத்தில் கடவுளே வந்து வெங்கடேஷைக் காப்பாற்றுகிறார்.

அதன்பின் நீதிமன்றத்தில் வெங்கடேஷின் வாதம் எடுபடுகிறதா, போலி சாமியார்களின் சதி வெல்கிறதா என்பதே மீதிக்கதை. சிறிது பிசகினாலும் நிறைய கேள்விகளை எழுப்பிவிடும் கதையை, மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வது பலமான திரைக்கதையும், வெங்கடேஷின் (பரேஷ் ராவல் அளவிற்கு இல்லை என்றாலும் நன்றாகவே நடித்திருக்கிறார்) நடிப்பும்தான். போலி சாமியாராக வரும் மிதுன் சக்கரவர்த்தியின் நடிப்பும் அருமை.

நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வெங்கடேஷ் சொல்லும் பதில்களும், முன் வைக்கும் வாதங்களும் பளிச் வசனங்களால் கவனிக்க வைக்கிறார்கள்.

கடவுளாக வரும் பவன் கல்யாண் சொல்லும் ஒரு வசனத்தோடு படம் நிறைவு பொறுகிறது. "நான் மனிதர்களை படைத்தது எனக்கு கோவில் கட்டி மரியாதை செய்ய இல்லை. இன்னொரு மனுஷனுக்குள்ள இருக்கும் என்னை நேசிக்க. அவனுக்கு கஷ்டம் வரும்போது உதவ!"


மனிதனுக்குள் இருக்கும் கடவுளை நேசிப்போம்!

- பா.ஜான்ஸன்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க