நாங்களும் வெப்போம்ல பொங்கல்!

வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (14/01/2015)

கடைசி தொடர்பு:12:23 (14/01/2015)

நாங்களும் வெப்போம்ல பொங்கல்!

கொசுவம் வெச்சு புடவை கட்டின பொண்ணுங்க... பொங்குற பானை... பலூன் கட்டின காளை... அதை பிடிக்க வர ஹீரோ... இதையெல்லாம் சினிமாவுல மட்டுமில்ல; நெசத்துலயும் பாத்து வளந்த பயப்புள்ளைங்கதான் நாங்களும். 

பொங்கல் வந்தா நாங்களும் கெத்து காட்டுவோம்ல கெத்து..!’’ என மீசையை முறுக்கிக்கொண்டு தாங்கள் செய்த பொங்கல் அட்ராசிட்டிகளை அரக்க பரக்கப் பரப்புகிறார்கள் இந்த பிரபல  பறக்காஸ்கள். 

வாங்க... இவிய்ங்க என்ன சொல்றாங்கன்னு ஒரு எட்டு பாக்கலாம்.

காளிவெங்கட்

சாதாரணமா நான் காளிவெங்கட். ஆனா பொங்கல், வீரம்னு வந்துட்டா எம் பேரு ‘காளை வெங்கட்’!.கோவில்பட்டி பக்கத்துல ஒரு சின்ன கிராமம்தான் எனக்கு சொந்த ஊரு. 15 வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல கொண்டாடின பொங்கலை எப்பவுமே மறக்க முடியாது. ஹலோ... நான் ஃப்ளாஷ்பேக் சொல்றேனேனு என்னை சீனியர் சிட்டிசனா ஆக்கிடாதீங்க. ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல... ஓகே... எதுல விட்டேன். ஆங்... பொங்கல்னு வந்துட்டா எங்க ஊர்ல நான் பண்ற அலப்பறை இருக்கே, அதை எப்படியும் என் வாயாலதான் சொல்லணும். சொல்றேன். (ஸ்ஸ்ஸப்ப்பா)

எங்க ஊரு விவசாயம் செழிப்பா இல்லாத ஊருங்க. அதனால மாட்டுப் பொங்கல் வந்தா ஊர்ல கொண்டாடுற மாதிரி நிறைய மாடுங்க இருக்காது. இருக்குற ஒத்த மாட்டுக்கு ஏழெட்டு பேரு போட்டி போடுவாங்க. அதனால தடிமாட்டுப் பயலேன்னு எப்பவோ வாத்தியார் சொன்னதை ஞாபகம் வெச்சிக்கிட்டு என் இடுப்புல அரைஞாண் கயிறு கட்டிவிட்டு, அதுல கலர் கலரா பலூன் கட்டிட்டு என்னை ஓடவிட்டு பலூன் உடைக்குற போட்டியை நடத்தி பயலுக சந்தோசப்படுவானுங்க. 

அப்புறம், வழுக்கு மரத்துல ஏறி கம்பத்தோட உச்சியில் இருக்குற எவர்சில்வர் பக்கெட்டை அறுத்துட்டு வரணும். அப்படி செஞ்சா அந்த பக்கெட்டும் அதுல இருக்குற 100 ரூபாயும் நமக்குதான். ஆனா கிரீஸ் தடவுன கம்பத்துல ஏறி ஏறி வழுக்கி விழுந்ததுதான் மிச்சம். எனக்கு தெரிஞ்ச அந்த காலத்து பக்கெட் சேலஞ்ச் இதுதான். அப்புறம் ஒருதரம் உறி அடிக்கிறேன்னு கண்ணைக் கட்டிக்கிட்டு கையில கம்போட கிளம்பினேன். இப்டி போ... அப்டி போன்னு ரூட்டை மாத்தி மாத்தி சொல்லி கடைசியா பக்கத்து ஊர் வரைக்கும் கொண்டுபோயிட்டாங்க. கண்ணைத் தொறந்து பாத்தா ஒரு கிழவன் கெக்கபெக்கேன்னு சிரிக்கிறாரு. அப்புறம் என்ன விடு ஜூட்தான்!"

பிக் எஃப்.எம். பாலாஜி

பொங்கல்னா ஊர்லதான் கெத்துன்னு யார்ங்க சொன்னது? பொங்கல் வந்துட்டா இந்த பாலாஜிதான் எங்க ஃப்ளாட்ஸ் பக்கம் மாஸ். சிட்டிப் பையன்னாலும் ’பொங்கலை பொங்கலை வெச்சு மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி’ பாட்டு எனக்கு அவ்ளோ மேட்ச் ஆகிப் போகும்ங்க. எப்படின்னா எங்க வீட்டு வழக்கப்படி மாட்டுப் பொங்கலை எனக்காகவே கொண்டாடுவாங்க. நோ... இது கடி ஜோக் இல்ல. சகோதரிகள் சகோதரனுக்காக சாமி கும்பிட்டு வேண்டிப்பாங்க. அந்த வகையில் மாட்டுப் பொங்கல் அன்னைக்கு என் தங்கச்சி வேண்டிக்குறதால அது என்னோட நாள்னு சொல்ல வந்தேன். அன்னைக்கு வீட்ல செம சாப்பாடு பொரியல் அது இதுன்னு சாமிக்கு வைக்கிற படையல் சூப்பரா இருக்கும்.

எங்க ஃப்ளாட்ஸ்ல இருக்குற 250 பசங்களும் ஆளுக்கு 20 பேர்னு குரூப்பா பிரிஞ்சிக்குவோம். தீபாவளின்னா எந்த குரூப் பசங்க ஃப்ளாட் முன்னாடி பட்டாசு வெடிச்ச குப்பை நிறைய இருக்குதோ அவங்கதான் கெத்து. அதேபோல யாரோட ஃப்ளாட் முன்னாடி நல்லா மென்னு துப்பிப் போட்ட கரும்பு சக்கை இருக்கோ அவங்கதான் வின்னர்ஸ். 

இதுக்காகவே டி.வி-யில நடக்குற பட்டிமன்றம் ரெண்டு புதுப்படம் இதையெல்லாம் தியாகம் பண்ணிட்டு காலையில 11 மணிக்கு ஆரம்பிச்சு சாயங்காலம் 7 மணி வரைக்கும் வாய் வீங்கி ரத்தம் வர்ற அளவுக்கு கரும்பு கடிச்சு மென்னு துப்பிட்டு ஒருவழியா ’கரும்பு துப்பி வின்னர்ஸ்’ ஆகிடுவோம்.

ஒரு தரம் கிராமத்துல நடக்குற பொங்கல் எப்படியிருக்கும்னு பாத்திருக்கேன். சினிமாவுல ஒரு காளையை ஒருத்தன்தான் அடக்குறான். ஆனா, நிஜத்துல ஒரு காளையை பத்து பேருக்கு மேல அடக்குறாங்க. எனக்கு விஜயகாந்த் சார் மாதிரி ஒண்டிக்கு ஒண்டியா நின்னு காளையை அடக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா முடியாதுன்னு முன்னாடியே தெரிஞ்சதால அந்த பத்தோட 11வதாவாச்சும் காளையை அடக்கிறணும்யா!""

இமான் அண்ணாச்சி

ஏலே... இமானுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கப்படாது. நாங்க கிறிஸ்துமஸ், பொங்கல் ரம்ஜான்னு எல்லா பண்டிகையுமே கொண்டாடுவோம்ல. எங்க சொந்த ஊரு திருவழுதிநாடார்விழை. வாய்ல நொழையலன்னு பொலம்பப்படாது. அந்த அழகான ஊருக்குப் பக்கத்துலதான் தேக்கடி இருக்கு. காணும் பொங்கல் அன்னைக்கு கூட்டம் கூட்டமா வர ஜனங்கள்ட்ட எப்டியாச்சும் பந்தா காட்டணும்னு நான் பண்ண சேட்டை இருக்கே... அதை சத்தம் போட்டு சொல்லிராதீங்கப்பு. அப்ப எனக்கு 12 வயசு இருக்கும். வர போற சனங்களையே வாயைப் பொளந்துக்கிட்டு பாத்துட்டு இருப்பேன். 

ஆனா, ஒரு புள்ளையும் நம்மள கண்டுக்குறாதுங்க. எப்டியாச்சும் நம்மள பாக்கற மாதிரி ஏதாச்சும் பண்ணணும் முடிவு பண்ணி பட்டம் வுடுறது, கபடி ஆடுறதுன்னு என்னன்னமோ பண்ணேன்.

ஆனா, அப்பவும் ஆடியன்ஸ் கொஞ்சமாதான் வந்தாங்க. பொம்பளைங்க கூட்டமே கண்டுக்காம போயிடுச்சுக. அப்புறம், ஒரு மரத்துக்கடியில உட்கார்ந்துட்டு ஒத்தையாளா பாட்டுப் பாட ஆர்ம்பிச்சிட்டேன். கூட்டம் பிச்சிக்கிட்டு வந்துச்சு. அப்பவே என்னைப் பாத்து, என் கண்ணைப் பாத்து, என் கலரைப் பாத்து கறுப்பு விஜயகாந்த்னு புகழ்ந்து தள்ளிட்டாங்கல்ல... அப்டியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி இப்ப உங்க முன்னாடி நிக்குறோம்ல. இப்படிதாங்க பொங்கலுக்கும் நமக்கும் அவ்ளோ நெருக்கம் இருக்கு. 

டிவி சினிமால்லாம் பாத்தாச்சு. அடுத்து நம்ம ஆட்டம் அரசியல்லதான். ஆனா, டேபிள் மேட்தான் உங்க சின்னமான்னு கேட்டெல்லாம் கலாய்க்க கூடாது சொல்லிப்புட்டேன்.

ஈரோடு மகேஷ்:

பொங்கல்னா கோயில் கோயிலா அன்னைக்கு நடக்குற பட்டிமன்றங்கள்தான் ஞாபகம் வரும். இந்த மகேஷ் சின்னப் பிள்ளையா இருந்தப்ப... இப்பவும்  சின்னப் பிள்ளைதான். மேல சொல்றேன் கேளுங்க... அப்பவெல்லாம் படிய வெச்ச தலையோட வேட்டியும் சட்டையுமா வெள்ள வெளேர்னு பட்டிமன்றங்கள்ல போய் பேசுவேன். அடா அடா அடா... இந்த தம்பி என்னம்மா பேசுதுய்யான்னு ஆளாளுக்கு டிபன் சாப்பிடுறியாப்பா காப்பி சாப்பிடுறியாப்பான்னு, தோள்ல இருக்குற துண்டை விரிச்சு உட்கார வெச்சு ஊட்டி விட ஆரம்பிச்சாங்க. 

நானும் பேமண்ட் தருவாங்க தருவாங்கன்னு பாத்தா, ஒருத்தரும் கண்டுக்குற மாதிரி தெரில. அய்யய்யோ பஸ்ஸுக்குப் போறதுக்காச்சும் ஏதாச்சும் பாத்துப் போட்டுக் கொடுப்பாங்கன்னு பாத்தா ’இன்னும் கிளம்பலையா நீயி’ன்னு கேட்டு அசிங்கப்படுத்திட்டாங்க. அப்புறம் பஞ்சாயத்து தலைவர்கூட பக்கத்துலயே பாய்ல படுத்துக்கிட்டு, காலையில எழுந்ததும் அவரோட சொம்புல தண்ணியை புடிச்சி குடிச்சிட்டு, சைக்கிள்ல போறவன்கிட்ட எல்லாம் லிஃப்ட்டு கேட்டு வீடு வந்து சேர்ந்திருக்கேன்.

அப்புறம் நான் ஆறாங்கிளாஸ் படிச்சப்ப, பொங்கல் அன்னைக்கு கூட படிச்சப் பொண்ணு ஒண்ணு  என்கிட்ட 'ஐ லவ் யூ' ன்னு சொல்லி லட்டர் கொடுத்துருச்சு. நான் ரொம்ப நல்ல புள்ளயா ஸ்கூல் பிரின்ஸிபால்கிட்ட மாட்டிவிட்டுட்டேன். அந்த புள்ள துப்பிட்டு போயிடுச்சு. அப்புறம் ரொம்ப நாளா ஃபீல் பண்ணி மறந்துட்டேன்(!). அதெல்லாம் ஒரு ஜாலியான பொங்கல்ங்க. 

இப்ப கல்யாணத்துகுப் பிறகு வீட்டுக்காரம்மா பொங்கல் செய்யட்டுமான்னு கேட்டா மொதல்ல எதாவது செய்மா... சாப்ட்டு பாத்தப் பிறகு, அது பொங்கலா... களியா... கேசரியா... இல்ல, மைசூர் பாகான்னு நான்தான் முடிவு பண்ணணும் சொல்லி அடிக்கடி அவங்ககிட்ட அடி வாங்குவேன். டிவியில பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளோடு பொங்கல் பண்டிகை ரொம்ப சிறப்பாவே போயிட்டுருக்குங்க!

பொங்கலோ பொங்கல்!


-பொன்.விமலா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்