மலையாள உலகை சமீப காலமாக கலக்கும் சிறந்த 5 ஹீரோக்கள்! | மலையாள சினிமா, டாப் 5 ஹீரோக்கள், malayalam top five heros

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (20/01/2015)

கடைசி தொடர்பு:15:08 (20/01/2015)

மலையாள உலகை சமீப காலமாக கலக்கும் சிறந்த 5 ஹீரோக்கள்!

இந்திய திரையுலகின் மிக முக்கிய கருத்தம்சமுள்ள படங்களை, தனித்துவத்துடனும், தனக்கேயுள்ள பாணியில் படமாக்கும் மலையாள சினிமா, 2014ல் பல இளம் நடிகர்களை உருவாக்கி அவர்களுக்கென தனி இடத்தினையும் தந்திருக்கிறது. இந்தவகையில் பல வெற்றிப் படங்களும் மலையாள சினிமாவில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இதன் அடிப்படையில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த ஹீரோக்கள் இவர்களே,

நிவின் பவுலி:

2010ல் “மலர்வாடி ஆர்ட் கிளப்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கடந்த ஆண்டு, “ஓம் சாந்தி ஓஷானா”,“1983”,“பெங்களூர் டேஸ்” மற்றும் “விக்ரமாதித்யன்” என்று நான்கு வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களின் பேவரைட் கதாநாயகனாகவே வலம் வருகிறார். எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் நிவின். அழகுடன் நடிப்பது இவரின் ப்ளஸ். ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான்:

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனாக திரையுலகிற்கு வந்து 2012ல் “செகண்ட் ஷோ” என்ற படத்தின் மூலம் தன் தடம் பதித்தவர். இவர் நடித்து வெளிவந்த ‘உஸ்தாட் ஹோட்டல்’ தேசிய விருதுகளையும், ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றுத் தந்து துல்கர் சல்மானை நட்சத்திர நடிகராக உயர்த்தியது. கடந்த வருடம், பெங்களூர் டேஸ், ‘சலாலா மொபைல்ஸ்’,‘ பட்டம் போலே’ என ஆறு வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தினைப் பிடித்தவர். வாயைமூடிப் பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகநாயகனாக வந்து ஹிட் அடித்தவர்.

மம்மூட்டி:

மலையாள சினிமாவின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும், கேரளா மாநில திரை விருதினை ஐந்து முறையும் பெற்றவர். 11 முறை ஃபிலிம் ஃபேர் விருதினையும் பெற்று நடிப்பில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே என்று இந்திய திரையுலகமே பாராட்டும் சிறந்த நாயகன். கடந்த வருடம், ஏழு படங்கள் இவருக்கு வெளிவந்தது. அதில் முன்னறிவிப்பு மற்றும் வர்ஷம் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டு இளம் நடிகர்கள் மட்டுமே கலக்கிய மலையாள சினிமாவில் முன்னனி ஹீரோவாக இருந்தாலும் என்றும் தனக்கான தனி இடத்தினை தக்கவைப்பவர்.

ப்ரித்வி ராஜ்:

சிறந்த ரோலர் கோஸ்டர் ஹிட் அடித்தப் படங்கள் “சவன்த் டேஸ்”, மற்றும் “சப்தமாஸ்ரீ தஸ்கரகா”. தமிழில் காவியத் தலைவன் போன்ற படங்களின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திழுப்பவர். தமிழில் ஏற்ற அளவிற்கு வரவேற்ப்பில்லாவிட்டாலும் மலையாளத்தில் இவருக்கான ரசிகர் பட்டாளமே தனி தான். ரசிகர்கள் எதிர்பார்க்கும்,  மேஜர் ரவி இயக்கத்தில்  “பிக்கெட் 43” படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அதில் ப்ரித்வி ராஜ் ராணுவ வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திலிப்:

உதவி இயக்குநராக தன்னுடைய சினிமா பாதையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக அறிமுகமானவர். உதவி இயக்குநராக ஏழு படங்களில் பணியாற்றியவர். பல படங்களை தயாரிக்கவும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில விருதினை மூன்று முறைபெற்று ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு சினிமாவை தருவது இவரின் ப்ளஸ். கடந்த வருடம், நான்கு படம் இவர் நடிப்பில் வெளிவந்து, ‘அவதாரம்’ மற்றும் “வில்லாலி வீரன்” என்ற இரண்டு படங்களும் ஹிட் அடித்து பேசப்பட்ட படங்களாகும். இளம் ஹீரோக்களுடன் போட்டி போடமுடியாமல் பல முன்னனி ஹீரோக்கள் மறைந்து போனாலும் இன்றும் களத்தில் சொல்லி அடிக்கும் கில்லி திலிப்.

மோகன்லால், சுரேஷ்கோபி, ஃபகத் ஃபாசில் போன்றோர் தங்களது நடிப்பையும், திறமையும் சிறந்த முறையில் வெளிபடுத்தினாலும் சென்ற வருடம் இவர்கள் ஹீரோவாக நடித்த படங்கள் ஏதும் சரிவர போகவில்லை. எனவே கமர்ஷியல் ரீதியாகவும், அதிக படங்கள் ஒரு வருடத்தில் கொடுத்தவர்கள் மற்றும் ஹிட் போன்ற அடிப்படையில் மேலே குறிப்பிட்ட 5 நடிகர்கள் தான் முன்னனியில் உள்ளனர். இது இந்த வருட இறுதியில் மாறவும் வாய்ப்பிருக்கிறது. 

- பி.எஸ்.முத்து -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்