Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைஃபை ஆன் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்! டெம்பர் படம் ஓர் அலசல்!!

பாலியல் வன்கொடுமை செய்பவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். இந்த கருதான் 'டெம்பர்' படத்தில் அதிக பட்சமாக சொல்லியிருக்கும் ஒரு சீரியசான விஷயம். படத்தைப் பற்றிக் கூறும் முன்பு படத்தின் கதாசிரியர் பற்றி அறிமுகம்,வக்கன்தம் வம்சி தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வாண்டட் கதாசிரியர். இவர் கதையில் உருவாகும் பல படங்கள்  ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும். குறிப்பாக மகேஷ்பாபு நடித்த 'அதிதி', ரவிதேஜா நடித்த 'கிக்' (தமிழில் 'தில்லாலங்கடி', இந்தியில் 'கிக்'), ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'ஓசரவள்ளி', ராம்சரண் நடித்த 'யவடு', அல்லு அர்ஜுன் நடித்த 'ரேஸ்குர்ரம்' என எல்லாம் பாக்ஸ் ஆபீஸை பாம் வைத்து நொறுக்கிய படங்கள் தான். கண்டிப்பாக மினிமம் வசூலையாவது ஈட்டிக் கொடுத்துவிடும். இந்த ஹிட்லிஸ்டில் அதிக படங்களில் இவர் பணியாற்றியது சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தான். ஆனால், இந்த முறை பூரி ஜெகன்நாத் + வம்சி கூட்டணி. ஜூனியர் என்.டி.ஆர் இவர் கதையில் நடிப்பது இது இரண்டாவது முறை. இது தான் வக்கன்தம் வம்சியின் மினி பயோடேட்டா.

இப்போது கதைக்கு செல்லலாம், 

கதைப்படி பெற்றோர் இல்லாமல் வளரும் சிறுவன் தயா (ஜூனியர் என்.டி.ஆர்). பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்துடனே வளர்கிறான். ஒரு சந்தர்பத்தில் காவல் துறையில் சேர்ந்துவிட்டால் பல்வேறு வழியிலும் பணம் சேர்க்கலாம் என்று ஒரு சம்பவத்தின் மூலம் மனதில் பதிய வைத்துக் கொள்கிறான். அதே போல் காவல்துறை அதிகாரியாகிறான். நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் ஐ-போனுடைய அடுத்த மாடலின் பெயர்களா? எனக் கேட்கும் அளவுக்கு மோசமான ஒரு காவலதிகாரி.  திடீர் என சீமாந்திரா பகுதியில் இருந்து விசாகப்பட்ணத்திற்கு மாற்றல் ஆகிறான் தயா. அதற்குக் காரணம், தான் சொல்வதெல்லாம் செய்யும், ஒரு போலீஸ் தான் தன் ஏரியாவில் இருக்கவேண்டும் என்பது அந்த ஏரியா தாதா வால்டர் வாசுவின் (பிரகாஷ்ராஜ்) ஆசை. மந்திரியின் துணையால் அதை சாதித்துக் கொள்கிறான் வாசு. அதே போல ஜூனியர் என்.டி.ஆரும் கைது செய்து வைத்திருக்கும் பிரகாஷ்ராஜின் தம்பிகளை தப்பிக்க விடுகிறார். இதற்கு இடையில் காஜலுடன் காதல். அதுவரை பிரகாஷ்ராஜுக்கு துணை போகும் ஜூனியர் என்.டி.ஆர், ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் வருகிறது. அடிதடி, துப்பாக்கி தோட்டா, கத்தி, ரத்தம் மீதியை மானே தேனே போட்டு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். 


எந்த விஷயத்தையும் ஒரு கமர்ஷியல் பார்மெட்டுக்குள் வைத்தே சொல்லிப் பழகியவர்களில் முக்கியமானவர்கள் தெலுங்கு சினிமாகாரர்கள் (தமிழிலும் அப்படி படங்கள் இருக்கிறது, இருந்தாலும் தெலுங்கில் சற்று அதிகம்). அவர்களின் படங்களிலும் ஒரு கருத்து இருக்கும், ஆனால் அது ஹீரோ பேசும் பன்ச் சத்தத்தின் முன் மறந்துவிடும், நல்ல நடிகர்கள் இருப்பார்கள், அது ஐட்டம் சாங்குக்குப் பின் மறந்துவிடும். இதில் சற்றும் விதிவிலக்கில்லாமல் வந்திருக்கும் படம் 'டெம்பர்'.

பூரி ஜெகன்நாத்தின் பெரிய ப்ளஸ் அவர் படங்களில் வரும் வசனங்கள். கிட்டத்தட்ட அவர் ஹீரோக்கள் ஒரு சூப்பர் ஹீரோக்களுக்கு இணையாகவே இருப்பார்கள். அவர்களால் முடியாத காரியம் என எதுவும் இருக்காது. இதிலும் அந்த ஹீரோயிஸம் சற்று தூக்கல் தான். ஆனால், வசனங்கள் அவ்வளவு இம்ப்ரஸ் செய்யவில்லை. உதாரணமாக இரண்டு படங்களின் வசனங்கள் சொல்கிறேன். "உனக்கு ஈகோ உள்ள இருக்கலாம். ஆனா, என்னுடைய ஈகோ என்ன சுத்தி வைஃபை மாதிரி இருக்கும்டா", "என்னுடைய பேர் தயா (இரக்கம்/ கருணை), எனக்கு இல்லாத அது தான்". இவை 'டெம்பர்' படத்தில் வரும் பன்ச் வசனங்கள். "டிஸ்கவரி சேனல்ல சிங்கம் மான வேட்டையாட துரத்தும் போது கடவுளே அந்த மான் தப்பிச்சிடணும்னு வேண்டிப்போம். ஆனா, அது மான் மேல இருக்க இரக்கத்தால இல்ல, சிங்கத்துமேல இருக்க வெறுப்புல", "கடவுள கும்பிடறது கூட ஒரு பிஸ்னஸ் தான். கடவுள் நமக்கு பணம், வெற்றி, ஆரோக்யம் தரமாட்டார்னு தெரிஞ்சா, யாராவது கும்பிடுவாங்களா?" இது 'பிஸ்னஸ்மேன்' படத்தில் வரும் வசனங்கள். அவரின் வசனங்கள் மற்றவர்களை விட எதாவது சுவாரஸ்யமான சங்கதிகளோடு இருக்கும். ஆனால் 'டெம்பர்' படத்தில் அந்த நீதிமன்ற காட்சியில் (அதுவும் ஒன்றிரண்டு தான்) தவிர மற்ற எல்லாம் பில்டப் வசனங்களே இடம் பெற்றிருக்கிறது. உன்ன மாதிரி கெட்டவனுக்கெல்லாம் நான் சல்யூட் அடிக்கமாட்டேன் என வீராப்பாக இருக்கும் கிருஷ்ண முரளியின் கதாப்பாத்திர வடிவமைப்பு சூப்பர். ஆனால், அவர் காமெடியாக நடிப்பதா, சீரியஸாக நடிப்பதா என்ற குழப்பத்தோடு நடித்திருப்பதால் அதன் மீது பெரிதாக கவனம் திரும்பவில்லை. பிரகாஷ் ராஜ், காஜல் அகர்வாலுக்கும் கூட நடிக்க பெரிய வாய்ப்பு ஏதும் இல்லை. பிரகாஷ்ராஜை ஒரு காமெடி வில்லனாக்கி இருக்கிறார்கள் என்பது வருத்தம் தான். 

மற்றபடி முழுக்க மசால ரசிகர்களுக்காக தயாரான சுமாரான மசாலா படம் தான் இந்த 'டெம்பர்'!

பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement