சன் ஆஃப் சத்யமூர்த்தியும், த்ரிவிக்ரமும் சிறு பார்வை

"எங்க அப்பா எனக்கு அனுபவிக்க விலைமதிப்பில்லாத சந்தோஷம் கொடுத்தார்,
தீர்த்து வைக்கறதுக்கு ஒரு பிரச்சனைய கொடுத்தார்,
காதலிக்க ஒரு பொண்ண கூட கொடுத்தார்,
இது எல்லாத்தோட சேர்த்து ஜெயிக்கறதுக்காக ஒரு யுத்தத்தையும் கொடுத்தார்!"

இது சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தின் டிரெய்லரில் வரும் வசனம். இது தான் படமும். வழக்கமான தெலுங்கு சினிமா. எந்த குறையும் இருக்கக் கூடாது என குடும்பம், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன், காதல் என எல்லாத்தையும் கலந்து ஒரு படம். இதில் எந்த குறையும் சொல்ல முடியாது, ஏனென்றால் இது த்ரிவிக்ரம் படம். அவரின் முந்தைய படங்களில் உள்ள அதே பேர்டனிலிருந்து கொஞ்சமும் நழுவாமல் தான் இருக்கிறது இந்தப் படமும்.

வீராஜ் ஆனந்துக்கு (அல்லு அர்ஜுன்) திருமணம் நிச்சயமாகிறது, இந்த சமயத்தில் அவரது தந்தை சத்யமூர்த்தி (பிரகாஷ்ராஜ்) விபத்தில் இறந்துவிட எல்லாம் தலைகீழாகிறது. பணம், வசதி எல்லாம் இழப்பதோடு நடக்க இருந்த திருமணமும் நின்று விடுகிறது. இதற்கிடையில் தன் தந்தை மீது விழும் ஒரு பழியை தவறென நிரூபிக்க கிளம்புகிறார் அல்லு அர்ஜூன். நிரூபித்தாரா? இல்லையா? என்பது உருகி மருகும் க்ளைமாக்ஸ்.

இது பக்கா த்ரிவிக்ரம் சினிமா என சொல்லக் காரணம் இருக்கிறது. குடும்ப செண்டிமெண்ட் இல்லாமல் இவரது எந்த படமும் இருக்காது. இதிலும் அது தாறு மாறாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, அண்ணன், தம்பிக்குள் இருக்கும் வெறுப்பு, அப்பாவின் பெயரை காப்பாற்ற பாடுபடும் மகன், குடும்பத்துக்காக உழைக்கும் ஹீரோ, இவை எல்லாம் க்ளைமாக்ஸின் பாஸிட்டிவாக முடிவது என படத்தின் எல்லாத் திசையிலும் சென்டிமென்ட்.

வழக்கமான சினிமா தான் என்றாலும் எண்டெர்டெயின்மெண்டுக்கு எந்த குறையும் வைக்காதது தான் த்ரிவிக்ரம் சினிமா. 'சாலா பாகது' என இழுத்து சொல்லும் மாடுலேசன், சமந்தாவுடன் ரொமான்ஸ், ஃபைட்டர்களை அடித்துப் பறக்கவிடுவது என அல்லு அர்ஜூன் ஒருபக்கம், அல்லு அர்ஜுன் கூடவே சேர்ந்து காமெடி செய்ய அலி, தனி காமெடிக்கு ரைட் சைடு பிரம்மானந்தம், லெஃப்ட் சைடு மறைந்த எம்.எஸ்.நாராயணா, அழகுக்கு சமந்தா, நித்யா மேனன், அடா ஷர்மா, சினேகா. மிரட்டல் வில்லனுக்கு உபேந்திரா. வேற எதுவும் வேண்டுமா என்ன?

என்ன தான் அழகான ஹீரோயின் இருந்தாலும், அவர்களை டம்மிப் பீஸாக காட்டி காமெடி பண்ணுவதும் சாட்சாத் த்ரிவிக்ரம் ஸ்டைல் தான். இதில் 'அத்தடு' த்ரிஷா தொடங்கி இதற்கு முந்தைய திரிவிக்ரம் படமான 'அத்தாரின்டிகி தாரிடி' சமந்தா வரை எந்த மாற்றமும் இல்லாமல் நடந்து வருகிறது. அதே தான் 'சன் ஆஃப் சத்யமூர்த்தி' சமந்தாவின் நிலையும்.

'நாம விரும்பின பொண்ணு நம்மள தேடி வர்றதவிட, நம்மள வேணாம்னு சொல்லிட்டுப் போன பொண்ணு திரும்பி வரும் போது இருக்க ஃபீலே வேற' என சில வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.

எப்பிடிப் படம் எடுத்தாலும் த்ரிவிக்ரம் படத்தின் வசூல், பின்னிப் பெடலெடுக்கும். ஆந்திரா மட்டும் இல்லாது எங்கெல்லாம் ரிலீஸாகிறதோ அங்கெல்லாம் பாக்ஸ் ஆஃபீஸில் பாமைக் கொழுத்திப் போடும்.

இறுதியாக ஒன்றே ஒன்று அவசியம் பார்க்க வேண்டும் என எதுவும் இல்லை. ஆனால் பார்ப்பதா எந்த நஷ்டமும் இல்லை இது தான் 'சன் ஆஃப் சத்யமூர்த்தி' ரிசல்ட்.  ஆனால், ஒரு முறை த்ரிவிக்ரம் ஸ்டைல் சினிமா பார்த்தால் அடிமையாகிவிடுவீர்கள் (கன்டிஷன்ஸ் அப்ளை).

உதாரணம்: அதடு, ஜல்சா, கலீஜா, ஜூலாயி, அத்தாரின்டி தாரிடி, சன் ஆஃப் சத்யமூர்த்தி

பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!