வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (26/06/2015)

கடைசி தொடர்பு:16:15 (26/06/2015)

பாகுபலி கண்டு பயமா? மகேஷ்பாபு பதிலடி!

ஆகடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. முழு வேலைகளும் முடிந்து கோடையிலேயே வெளியாக வேண்டிய இப்படம் வெளியாகததற்கான உண்மையான விளக்கத்தை அளித்துள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு.

கோரடல சிவா இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் ஸ்ரீமந்துடு மே 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். படத்திற்கான டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது. பின்னர் ஜூலை 3ம் தேதி படம் வெளியாகும் என்று தள்ளிவைத்தனர். தொடர்ந்து ஜூலை 17ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இதற்கெல்லாம் காரணம் பாகுபலி படமே என்று சொல்லப்பட்டது. பாகுபலி பட வெளியீடும் கோடையில் வெளியாகும் என்று அறிவிக்க ஒவ்வொரு தேதியாக ஸ்ரீமந்துடு படத்தின் வெளியீடும் தள்ளிச்சென்றது.

பாகுபலி படத்தினால் தான் ஸ்ரீமந்துடு தள்ளிப்போகிறதா என்று மகேஷ்பாபுவிடம் கேட்டதற்கு, “ இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் மரியாதைக்குரிய படமே பாகுபலி. தெலுங்கில் அந்த படம் தயாரிக்கப்பட்டதற்கு தெலுங்கு சினிமாவே பெருமையடைய வேண்டும். அந்த படத்தை பார்த்து பயம் ஏதும் கிடையாது. அந்தப்படத்திற்காக ஸ்ரீமந்துடு 3 வாரம் கழித்தே ஸ்ரீமந்துடு வெளியாகிறது. என் படத்தால் பாகுபலி படத்திற்கு பாதிப்பு வந்துவிட கூடாது. மேலும் இடைவெளிவிட்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது ஆரோக்கியமான ஒன்றே” என்றார் மகேஷ்பாபு.

பிரம்மாண்ட தயாரிப்பான பாகுபலி வரும் ஜூலை 10ம் தேதி உலக அரங்கில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பட இசையும், ஆகஸ்ட் 7ம் தேதி படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டியில்லாமல் தனியாக வெளியாவது படத்தையும் பாதிக்காது, வசூலையும் பாதிக்காது என்பது நிதர்சனமான உண்மை என்பதை மகேஷ்பாபு நன்கு புரிந்துவைத்திருக்கிறார் போலும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்