பாகுபலி வசனத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறார் மதன்கார்க்கி

பாகுபலி படத்தில் இடம்பெற்ற ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட சமுகத்தைப் புண்படுத்துகிறது என்று அந்தப்படம் ஓடுகிற திரையரங்குகளில் குண்டுவீசிய நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அந்த வசனத்தை எழுதிய மதன்கார்க்கி வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை...

பாகுபலி திரைப்படத்தின் இறுதிக்காட்சி வசனத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை சிலர் மனதைப் புண்படுத்தியதாகவும் அதனால் சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். “என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது...’ என்று வரும் வசனத்தில், ‘பகடைக்குப் பிறந்தவன்’ என்ற வாக்கியத்தை தாயக்கட்டையால் ஆடப் படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் எழுதியிருந்தேன். 

அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. சாதிப் பிரிவுகள் வேண்டாம், அனைவரும் சமம் என்று இன்னொரு காட்சியில் பேசும் கதையின் நாயகன், எந்தச் சாதியையும் இழித்துப் பேச மாட்டான். இழிவு செய்வது எங்கள் நோக்கமில்லை. படை எடுத்து வருபவர்களை எந்த இனத்தைச் சார்ந்தவர்களாகவும் காட்ட வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு என்று புதிய ஒரு மொழியை உருவாக்கினோம்.

யார் மனமும் புண்படக் கூடாது என்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டோம். ஒரு சமூகம் புண்படுவதற்குக் காரணமான அந்தச் சொல்லைப் படத்தில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அந்தச் சொல் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!