ஆபாச இணையதளங்களைத் தடை செய்யக்கூடாது, ராம்கோபால்வர்மா போர்க்கொடி

ஆபாச இணைய தளங்களை தடை செய்ய மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் 857 ஆபாச இணைய தளங்கள் அதிரடியாகத் தடை செய்யப்பட்டன. இந்தத் தடைக்கு சர்ச்சை நாயகன் ராம்கோபால் வர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாலியல் தேவைகளைத் தணித்துக்கொண்டு, அந்த வேட்கை பிற பெண்கள் மீது திரும்பாமல் தடுக்க ஆபாச வெப்சைட்டுகள் உதவுவதாகவும் எந்த ஒரு விஷயத்தை தடை செய்கிறோமோ அந்த விஷயத்துக்கு பலம் கூடிவிடும் என்பதை, வரலாறு பலமுறை நமக்கு நினைவுபடுத்தியுள்ளதாகவும் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை விபத்து நடைபெறுகிறது என்பதற்காக, சாலையில் போக்குவரத்தை நிறுத்திவிடுவதற்கு சமமானது என்றும், தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர், மக்களின் சுதந்திரத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஈடானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த இணைய தள உலகில் எல்லோரும் எல்லாவற்றையும் எளிதில்  தெரிந்துகொள்ளவும், தனிமனித சுதந்திரத்துடன் இணையத்தில் செயல்படவும் அதிகாரமிருக்கிறது. ஆபாச தளங்களைப் பார்ப்பதற்கும் சுதந்திரம் இருக்கிறது. உலகில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் தேவையாக ஆபாசத்தளங்கள் இருக்கின்றன.

 வயது முதிர்ச்சி அடைந்தோர் பிறருக்குத் தீங்குதராமல், ஆபாச வெப்சைட்டுகளை பார்த்து, இன்பம் காண்பதாகவும் இதுபோன்ற ஒரு செயலைத் தடுப்பது ஆபத்தை விளைவிக்கும்,  குழந்தைகள் இதனால் கெடுவதாக பயப்பட வேண்டாம். அவர்கள் சரியான வயதினை அடைகையில் கண்டிப்பாக உண்மையை உணர்ந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். எப்படி பெண்கள் ஆக்‌ஷன் படங்களையும் ஹீரோக்களையும் பார்க்கையில் தன் கணவனோ, அல்லது காதலனோ அப்படி இருக்க வேண்டும் என நினைப்பதில்லையோ, அதே போல் தான் ஆண்களும் இது போன்ற ஆபாச இணையதளங்களைப்  பார்ப்பதால் உண்மையான பெண்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள்.

இது போன்ற தளங்கள் வெறும் ஃபேண்டஸியே. சின்ன சந்தோஷம். இவற்றைத் தடைசெய்வது, மனிதனின் சொந்த விருப்பு, வெறுப்புகள், சுதந்திரத்தைப் பறிப்பதாக அர்த்தம். உலகமே நாடக மேடை. இந்த மேடையில் யாரும் எதையும் தெரிந்துகொள்ளலாம். அதிலும் இணையம் மூலம் செக்ஸையும் தெரிந்துகொள்ள உரிமை உண்டு . மேலும் புகைப்பது, உயிரைக் கொல்லும், குடிப்பது உயிரைக் கொல்லும், ஆனால் செக்ஸ் உயிரைக் கொல்லாது என அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  ராம்கோபாலின் இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பலரும் அவரை வசைபாட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!