துள்ளலும் எனர்ஜியும் இல்லாத கிக் 2- திரைஅலசல் | Kick 2 - Telugu Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (24/08/2015)

கடைசி தொடர்பு:11:39 (25/08/2015)

துள்ளலும் எனர்ஜியும் இல்லாத கிக் 2- திரைஅலசல்

2009ல் தெலுங்கில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம் 'கிக்'. தமிழில் 'தில்லாலங்கடி' என ரீமேக் செய்யப்பட்டது. தற்போது கிக் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் எப்படி? வாங்க பார்க்கலாம்.

'கிக்' படத்தின் முதல் பாகத்தில் 'கிக்'கை வைத்து ஆடிய ஆட்டத்தை இரண்டாம் பாகத்தில் 'கம்ஃபர்ட்டை' வைத்து ஆடியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி.

முதல் பாகத்தின் ஹீரோ கல்யாணின் (ரவிதேஜா) மகன் தான் இந்த பாகத்தின் ஹீரோ ராபீன்ஹூட் (இதுவும் ரவிதேஜா தான்). டாக்டருக்குப் படித்திருக்கும் ரவிதேஜா சொந்தமாக மருத்துவமனை கட்ட ஆசைப்படுகிறார். அதற்கான பணத்தேவைக்காக இந்தியாவில் இருக்கும் தன் நிலத்தை விற்றுப் பணம் ஏற்பாடு செய்வதற்காக இந்தியா வருகிறார் ரவிதேஜா. இதற்குப் பேர்லலாக சாலமன் சிங் தாகூர் (ரவி கிஷான்) விலாஸ்பூர் ஊரையே அடிமைப்படுத்தி வைத்திருப்பது பற்றி காட்டப்படுகிறது.

ரவிதேஜா தன் நிலத்தை விற்க வரும் இடையூறுகளை மிக கூலாக கையாள்வதை பார்க்கும் சைத்ராவுக்கு (ரகுல் ப்ரீத்சிங்) ரவிதேஜா மேல் காதல். நிலத்தை விற்க வந்த ரவிதேஜாவுக்கும் ரவி கிஷானுக்கும் இடையில் மோதல் வருகிறது. அது எப்படி? அதை ரவிதேஜா வெல்வது எப்படி என்பதை பக்கா ஆந்திரா மசாலாவாக சொல்கிறது கிக்2.

முதல் பாகத்தில் இருந்த துள்ளலும், எனர்ஜியும் இதில் மொத்தமாக குறைந்திருக்கிறது. முடிந்த வரை ரவிதேஜாவுக்கு மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். கிக் படத்தின் ஸ்பெஷலே அதன் காமெடி கலந்த ரேஸி திரைக்கதை தான். ஆனால் கிக் 2 கொஞ்சம் தடுமாறுகிறது. இடைவேளைக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்ல வேண்டிய கதை அப்படியே தேங்கி நிற்கிறது.

படத்தின் மொத்த எனர்ஜி பூஸ்டர் ரவிதேஜா மட்டும் தான். முகத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் மனிதர் பிரமாதமான பாடி லாங்குவேஜில் அசத்துகிறார். அதுவும் பிரம்மானந்தத்தோடு சேர்ந்து நடத்தும் கம்ஃபர்ட் கலாட்டாக்கள் உச்சக் கட்டம். வழக்கமான ஹீரோயின் வேலைகளை செய்வதோடு ஒரு ட்விஸ்ட்டுக்கும் (அவ்வளோ பெரிய ட்விஸ்ட் இல்ல) துணை நிற்கிறார் ரகுல் ப்ரீத்சிங். மற்றபடி அதே பழைய வில்லன், அதை பழைய கிளைமாக்ஸ் ஃபைட், அதே ஹீரோயிச பில்டப்புகள் என போரடிக்கிறது படம்.

தமன் இசையில் பின்னணி மாஸ் கூட்டுகிறது, மனோஜ் பரமஹம்சாவின் கேமிரா ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க விடுகிறது. படத்தின் முடிவில் கிக் 3க்கான லீட் கொடுத்திருக்கிறார்கள். மூணாவது பாகத்திலாவது மறுபடி முதல் பாகத்தில் இருந்த மேஜிக்கை கொண்டுவாங்க சுரேந்தர் ரெட்டி காரு!

பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close